திருப்புகழ் 449 கனகசபை மேவும் (சிதம்பரம்)

தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ...... தனதானா
கனகசபை  மேவு  மெனதுகுரு  நாத 
கருணைமுரு  கேசப்  ......  பெருமாள்காண் 
கனகநிற  வேத  னபயமிட  மோது 
கரகமல  சோதிப்  ......  பெருமாள்காண் 
வினவுமடி  யாரை  மருவிவிளை  யாடு 
விரகுரச  மோகப்  ......  பெருமாள்காண் 
விதிமுநிவர்  தேவ  ரருணகிரி  நாதர் 
விமலசர  சோதிப்  ......  பெருமாள்காண் 
சனகிமண  வாளன்  மருகனென  வேத 
சதமகிழ்கு  மாரப்  ......  பெருமாள்காண் 
சரணசிவ  காமி  யிரணகுல  காரி 
தருமுருக  நாமப்  ......  பெருமாள்காண் 
இனிதுவன  மேவு  மமிர்தகுற  மாதொ 
டியல்பரவு  காதற்  ......  பெருமாள்காண் 
இணையிலிப  தோகை  மதியின்மக  ளோடு 
மியல்புலியுர்  வாழ்பொற்  ......  பெருமாளே. 
  • கனகசபை மேவும்
    பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் செய்யும்
  • எனதுகுரு நாத
    எனது குருநாதராகிய
  • கருணைமுருகேசப் பெருமாள்காண்
    கருணை நிறைந்த முருகேசப் பெருமாள் நீதான்.
  • கனகநிற வேதன்
    பொன்னிறத்து பிரமன்
  • அபயமிட மோது
    அபயம் என்று உன்னைச் சரணடைய, தலையில் குட்டிய
  • கரகமல சோதிப் பெருமாள்காண்
    தாமரை போன்ற கையையுடைய ஜோதிப் பெருமாள் நீதான்.
  • வினவுமடியாரை மருவிவிளையாடு
    உன்னை ஆய்ந்து துதிக்கும் அடியார்களிடம் இணைந்து விளையாடுகின்ற
  • விரகு ரச மோகப் பெருமாள்காண்
    ஆர்வம், இன்பம், ஆசை அத்தனையும் உள்ள பெருமாள் நீதான்.
  • விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர்
    பிரமன், முனிவர்கள், தேவர்கள், அருணாசல ஈஸ்வரர்,
  • விமல சர சோதிப் பெருமாள்காண்
    மற்றும் பரிசுத்தமான என் மூச்சுக்காற்றில் உள்ள ஜோதிப் பெருமாள் எல்லாமே நீதான்.
  • சனகிமணவாளன் மருகனென
    ஜானகியின் மணவாளன் ஸ்ரீராமனின் மருமகன் என்று
  • வேத சதமகிழ்குமாரப் பெருமாள்காண்
    நூற்றுக்கணக்கான வேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமாள் நீதான்.
  • சரணசிவ காமி
    அடைக்கலம் அளிக்கும் சிவகாமி,
  • இரணகுல காரி
    போர் செய்யும் அசுர குலத்தைச் சங்கரித்தவள்,
  • தருமுருக நாமப் பெருமாள்காண்
    ஈன்றருளிய முருகன் என்னும் திருநாமம் உடைய பெருமாள் நீதான்.
  • இனிதுவன மேவும்
    இனிய வள்ளிமலைத் தினைப்புனத்தில் இருந்த
  • அமிர்தகுற மாதொடு
    அமுதை ஒத்த குறப்பெண் வள்ளியுடன்
  • இயல்பரவு காதற் பெருமாள்காண்
    அன்பு விரிந்த காதல் கொண்ட பெருமாள் நீதான்.
  • இணையில் இப தோகை
    ஒப்பற்ற யானை வளர்த்த மயில் போன்ற (தேவயானையாம்)
  • மதியின்மகளோடு
    அறிவு நிறைந்த பெண்ணுடன்
  • இயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே.
    தகுதிபெற்ற புலியூரில் (சிதம்பரத்தில்) வாழும் அழகிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com