தனதன தானாதன தனதன தானாதன
தனதன தானாதன ...... தனதான
விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
விழிகொடு வாபோவென ...... வுரையாடும்
விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள்
ம்ருகமத கோலாகல ...... முலைதோய
அடையவு மாசாபர வசமுறு கோமாளியை
அவனியு மாகாசமும் ...... வசைபேசும்
அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை
அடியவ ரோடாள்வது ...... மொருநாளே
வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம்
வனிதையர் தோள்தோய்தரு ...... மபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல
மகிபச தாகாலமு ...... மிளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற
உலகுய வாரார்கலி ...... வறிதாக
உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ
ஒருதனி வேலேவிய ...... பெருமாளே.
- விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி
கொ(ண்)டு வா போ என உரை ஆடும்
செருக்கு உள்ள மன்மதன் செலுத்தும் அம்பு போல வேகம் பெற்றுள்ள, ஆலகால விஷம் போன்ற கண்களைக் கொண்டு, வா என்றும் போ என்றும் பேசுகின்ற - விரகுடன் நூறாயிரம் மனம் உடை மா பாவிகள்
சாமர்த்தியத்துடன் நூறாயிரக் கணக்கான மனத்தை உடைய பெரிய பாவிகளான விலைமாதரின், - ம்ருகமத கோலாகல முலை தோய அடையவும் ஆசா பரவசம்
உறு கோமாளியை
கஸ்தூரி அணிந்துள்ள ஆடம்பரமான மார்பகங்களை அணைந்து சேர ஆசைப் பிரமை பூண்ட கோணங்கியை, - அவனியும் ஆகாசமும் வசை பேசும் அசட அநாசாரனை
அவலனை ஆபாசனை
மண்ணுள்ளோரும், விண்ணுள்ளோரும் பழிப்புரை பேசும் முட்டாளான துராசாரனை, பயனற்றவனை, அசுத்தனை, - அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே
உனது அடியார்களோடு ஆண்டருளுவதும் ஒரு நாள் ஆகுமோ? - வட குல கோபாலர் தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர்
தோள் தோய் தரும் அபிராம மரகத நாராயணன் மருமக
வடக்கே கோபாலர் குலத்தவரான இடையர்களின் ஒரு பதினாயிரம் மாதர்களது தோள்களை அணைந்த அழகிய பச்சை நிற நாராயணனுக்கு மருகனே, - சோணாசல மகிப சதா காலமும் இளையோனே
திருவண்ணாமலைக்கு அரசே, என்றும் இளமையாக இருப்பவனே, - உடுபதி சாயாபதி சுரபதி மாயாது உற
நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனும், சாயா தேவிக்குக் கணவனாகிய சூரியனும், தேவர்கள் தலைவனான இந்திரனும் இறந்து படாமல் வாழ, - உலகு உய்ய வார் ஆர்கலி வறிது ஆக
உலகம் பிழைக்க, நீண்ட கடல் வற்றிப் போக, - உயரிய மா நாகமும் நிருதரும் நீறாய் விழ
சிறந்த பெரிய கிரவுஞ்ச மலையும் அசுரர்களும் தூள்பட்டு விழ, - ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே.
ஒப்பற்ற வேலைச் செலுத்திய பெருமாளே.



