திருப்புகழ் · 443விதி அதாகவே (திருவருணை)

vidhiathAgavE

தனன தானன தனன தானனா
தனன தானனம் ...... தனதான
விதிய தாகவெ பருவ மாதரார்
விரகி லேமனந் ...... தடுமாறி
விவர மானதொ ரறிவு மாறியே
வினையி லேஅலைந் ...... திடுமூடன்
முதிய மாதமி ழிசைய தாகவே
மொழிசெய் தேநினைந் ...... திடுமாறு
முறைமை யாகநி னடிகள் மேவவே
முனிவு தீரவந் ...... தருள்வாயே
சதிய தாகிய அசுரர் மாமுடீ
தரணி மீதுகுஞ் ...... சமராடிச்
சகல லோகமும் வலம தாகியே
தழைய வேவருங் ...... குமரேசா
அதிக வானவர் கவரி வீசவே
அரிய கோபுரந் ...... தனில்மேவி
அருணை மீதிலெ மயிலி லேறியே
அழக தாய்வரும் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • விதி அதாகவே பருவ மாதரார் விரகிலே மனம் தடுமாறி
    விதி ஆட்டுவிப்பதால் இளமை வாய்ந்த பெண்களின் தந்திரச் செயல்களில் மனம் தடுமாற்றம் அடைந்து,
  • விவரமானது ஓர் அறிவு மாறியே வினையிலே அலைந்திடு மூடன்
    தெளிவுள்ளதான ஓர் அறிவும் கெட்டுப்போய் வினை வசப்பட்டு அலைச்சலுறும் முட்டாள் ஆகிய நான்,
  • முதிய மா தமிழ் இசை அதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு
    பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ்ப் பாக்களை இசையுடனே சாகித்யப்படுத்திப் பாட நினைந்திடும்படி,
  • முறைமையாக நின் அடிகள் மேவவே முனிவு தீர வந்து அருள்வாயே
    முறைமைப்படி உனது திருவடிகளை அடையுமாறு, உனது கோபம் தீர்ந்து வந்து அருள் புரிவாயாக.
  • சதி அதாகிய அசுரர் மா முடி தரணி மீது உகும் சமர் ஆடி
    வஞ்சனை கூடிய அசுரர்களுடைய பெரிய முடிகள் பூமியில் சிந்தும்படி போர் செய்து,
  • சகல லோகமும் வலம் அதாகியே தழையவே வரும் குமரேசா
    எல்லா உலகங்களும் (மயிலின் மீது) வலமாக, (அவ்வுலகங்கள்) நலமுறும்படியாக வரும் குமரேசனே,
  • அதிக வானவர் கவரி வீசவே அரிய கோபுரம் தனில் மேவி
    நிரம்ப தேவர்கள் வெண்சாமரம் வீச, அருமை வாய்ந்த கோபுரத்தில் வீற்றிருந்து,
  • அருணை மீதிலெ மயிலில் ஏறியே அழகு அதாய் வரும் பெருமாளே.
    திருவண்ணாமலையில் மயில் மீது ஏறி அழகுடன் வரும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits