திருப்புகழ் · 441வலிவாத பித்தமொடு (திருவருணை)

valivAdhapiththamodu

தனதான தத்ததன தனதான தத்ததன
தனதான தத்ததன ...... தனதான
வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
வறல்சூலை குட்டமொடு ...... குளிர்தாகம்
மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை
வருநீர டைப்பினுடன் ...... வெகுகோடி
சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை
தெளியாவெ னக்குமினி ...... முடியாதே
சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
சிவஞான சித்திதனை ...... யருள்வாயே
தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு
சுடர்வீசு சக்ரமதை ...... யருள்ஞான
துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
சுகவாரி சித்தனருள் ...... முருகோனே
அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ
டசுராரி றக்கவிடு ...... மழல்வேலா
அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்
அருணா சலத்திலுறை ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
    வலிப்பு நோய், பித்த நோய், கண்டமாலை நோய், சிலந்திப்புண்,
  • வறல்சூலை குட்டமொடு குளிர்தாகம்
    உடல் இளைப்பு, வயிற்று உளைவு, குஷ்டம், குளிர், தாகம்,
  • மலிநீரிழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு
    மிக்க நீரிழிவு, மகோதரம், கபம் கட்டுதல், வாந்தி,
  • களைவருநீர டைப்பினுடன் வெகுகோடி
    அயர்ச்சிதரும் மூத்திரத்தடை நோய் இவைகளுடன் வெகு கோடிக்கணக்கான
  • சிலைநோயடைத்தவுடல் புவிமீதெடுத்துழல்கை
    சீறி எழும் நோய்களை அடைத்துள்ள இந்த உடலை, பூமியின் மீது எடுத்துத் திரிதல்
  • தெளியாவெ னக்குமினி முடியாதே
    தெளிந்த அறிவு இல்லாத எனக்கும் இனிமேல் முடியாது.
  • சிவமார்திருப்புகழை எனுநாவினிற்புகழை
    மங்கலம் நிறைந்த உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு
  • சிவஞான சித்திதனை யருள்வாயே
    சிவஞான சித்தியை தந்தருள்வாயாக.
  • தொலையாத பத்தியுள திருமால்களிக்கவொரு
    நீங்காத பக்தியைக் கொண்ட திருமால் மகிழ,
  • சுடர்வீசு சக்ரமதை யருள்ஞான
    ஒப்பற்றதாய் ஒளி வீசும் சுதர் ன சக்கரத்தை அவருக்கு அருளிய ஞானமயமான
  • துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
    பவள நிறச் சடையப்பன், புகழ்மிக்க சிவகாமியின் தலைவன், மிக்க
  • சுகவாரி சித்தனருள் முருகோனே
    சுக சாகரம் போன்ற சித்த மூர்த்தி சிவபிரான் அருளிய முருகனே,
  • அலைசூரன் வெற்பும் அரி முகன் ஆனைவத்திரனொடு
    கடல், சூரன், கிரெளஞ்சமலை, சிங்கமுகன், ஆனைமுகனான தாரகாசுரனுடன்
  • அசுரார் இறக்கவிடும் அழல்வேலா
    அசுரர்கள் யாவரும் இறக்கும்படிச் செய்த நெருப்பு வேலனே,
  • அமுதாசனத்தி குற மடவாள் கரிப்பெணொடும்
    அமுதமயமான பீடத்தினள் குறமகள் ஆகிய வள்ளியுடனும், யானை ஐராவதம் வளர்த்த பெண் தேவயானையுடனும்
  • அருணா சலத்திலுறை பெருமாளே.
    திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits