திருப்புகழ் 440 மொழிய நிறம் (திருவருணை)

தனதன தந்ததத்த தனதன தந்ததத்த
தனதன தந்ததத்த ...... தனதான
மொழியநி  றங்கறுத்து  மகரவி  னங்கலக்கி 
முடியவ  ளைந்தரற்று  ......  கடலாலும் 
முதிரவி  டம்பரப்பி  வடவைமு  கந்தழற்குள் 
முழுகியெ  ழுந்திருக்கு  ......  நிலவாலும் 
மழையள  கந்தரித்த  கொடியிடை  வஞ்சியுற்ற 
மயல்தணி  யும்படிக்கு  ......  நினைவாயே 
மரகத  துங்கவெற்றி  விகடந  டங்கொள்சித்ர 
மயிலினில்  வந்துமுத்தி  ......  தரவேணும் 
அழகிய  மென்குறத்தி  புளகித  சந்தனத்தி 
னமுதத  னம்படைத்த  ......  திருமார்பா 
அமரர்பு  ரந்தனக்கு  மழகிய  செந்திலுக்கு 
மருணைவ  ளம்பதிக்கு  ......  மிறையோனே 
எழுபுவ  னம்பிழைக்க  அசுரர்சி  ரந்தெறிக்க 
எழுசயி  லந்தொளைத்த  ......  சுடர்வேலா 
இரவிக  ளந்தரத்தர்  அரியர  பங்கயத்த 
ரிவர்கள்ப  யந்தவிர்த்த  ......  பெருமாளே. 
  • மொழிய நிறங்கறுத்து மகர இனங்கலக்கி
    யாவரும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நிறம் கருமையடைந்து, மகர மீன்களின் கூட்டத்தால் கலக்கப்பட்டு,
  • முடிய வளைந்து அரற்று கடலாலும்
    கிடைக்கின்ற முழு இடத்தையும் வளைத்து ஆரவாரம் செய்யும் கடலாலும்,
  • முதிர விடம் பரப்பி வடவை முகந்து அழற்குள் முழுகி எழுந்திருக்கு நிலவாலும்
    (சந்திரனின் கலைகள்) வளர்ந்து, விஷத்தை எங்கும் பரப்பி, (யுக முடிவில் தீப் பிரளயமாக வரும்) வடவா முகாக்கினியை மொண்டு கொண்டும், நெருப்பில் மூழ்கியும் எழுந்துவரும் நிலவாலும்,
  • மழை அளகம் தரித்த கொடியிடை வஞ்சியுற்ற மயல் தணி யும்படிக்கு நினைவாயே
    கார்மேகம் போன்ற கூந்தலைக் கொண்ட, வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய என் மகள் அடைந்த விரக தாபம் தணியும்படிக்கு நீ நினைந்து,
  • மரகத துங்கவெற்றி விகட நடங்கொள் சித்ர மயிலினில் வந்து முத்தி தரவேணும்
    பச்சை நிறம், தூய்மை, வெற்றி இவைகளைக் கொண்டதாகவும், அழகுள்ள நடனம் கொண்டதாகவும் உள்ள அலங்கார மயில் மீது வந்து அவளுக்கு முக்தியைத் தரவேண்டும்.
  • அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தின் அமுத தனம்படைத்த திருமார்பா
    அழகிய மென்மை வாய்ந்த குறத்தி வள்ளியின் புளகம் கொண்டதும், சந்தனமும் அமுதமும் பொதிந்ததுமான மார்பகத்தை அணைந்துள்ள திருமார்பனே,
  • அமரர் புரந்தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை வளம்பதிக்கும் இறையோனே
    தேவர்களின் ஊராகிய அமராவதியிலும், அழகிய திருச்செந்தூரிலும், திருவருணை என்ற வளமான தலத்திலும் தங்கும் இறைவனே,
  • எழு புவனம் பிழைக்க அசுரர் சிரந்தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர்வேலா
    ஏழு உலகங்களும் பிழைக்க, அசுரர்களின் தலைகள் தெறிக்கும்படியாக ஏழு மலைகளையும் தொளைத்த ஒளி வேலனே,
  • இரவிகள் அந்தரத்தர் அரியர பங்கயத்தர் இவர்கள் பயந்தவிர்த்த பெருமாளே.
    ஆதித்தர்கள் (அதிதியின் புத்திரர்கள்), விண்ணுலகத்தவர், திருமால், ருத்திரன், தாமரை மீதமர்ந்த பிரமன் இவர்களது பயத்தை ஒழித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com