திருப்புகழ் · 397இமராஜன் நிலாவது (திருவருணை)

imarAjannilAvathu

தனதாதன தானன தத்தம் ...... தனதான
தனதாதன தானன தத்தம் ...... தனதான
இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே
இளவாடையு மூருமொ றுக்கும் ...... படியாலே
சமராகிய மாரனெ டுக்குங் ...... கணையாலே
தனிமானுயிர் சோரும தற்கொன் ...... றருள்வாயே
குமராமுரு காசடி லத்தன் ...... குருநாதா
குறமாமக ளாசைத ணிக்குந் ...... திருமார்பா
அமராவதி வாழ்வம ரர்க்கன் ...... றருள்வோனே
அருணாபுரி வீதியி னிற்கும் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • இமராஜன் நிலாவது எறிக்குங் கனலாலே
    பனிக்கு அரசனாகிய சந்திரன் வீசுகின்ற நெருப்புக் கதிர்களாலே,
  • இளவாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே
    மெல்லிய தென்றல் காற்றும், ஊர்ப் பெண்களின் ஏச்சும் வருத்துகின்ற தன்மையாலே,
  • சமராகிய மாரன் எடுக்குங் கணையாலே
    காமப்போருக்கு என்றே மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலே,
  • தனிமானுயிர் சோரும் அதற்கு ஒன்றருள்வாயே
    உன்னைப் பிரிந்து தனியே தவிக்கும் மான் போன்ற இப்பெண் உயிர் சோர்ந்து போகாமல் இருக்க ஏதேனும் ஒரு வழி கூறி அருள்வாயாக.
  • குமரா முருகா சடிலத்தன் குருநாதா
    குமரா, முருகா, சடைமுடிப் பெருமான் சிவனுடைய குருநாதனே,
  • குறமாமகள் ஆசை தணிக்குந் திருமார்பா
    குறமகள் வள்ளியின் ஆசையை அணைத்துத் தணிக்கும் திருமார்பா,
  • அமராவதி வாழ்வு அமரர்க்கன்று அருள்வோனே
    தேவலோக வாழ்க்கையை அன்று அமரர்களுக்கு அருளியவனே,
  • அருணாபுரி வீதியி னிற்கும் பெருமாளே.
    திருவண்ணாமலை வீதியில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits