திருப்புகழ் 396 இடருக்கு இடர் (திருவருணை)

தனனத் தனதானன தனனத் தனதானன
தனனத் தனதானன ...... தனதான
இடருக்  கிடராகிய  கொடுமைக்  கணைமேல்வரு 
மிறுதிச்  சிறுகால்வரு  ......  மதனாலே 
இயலைத்  தருகானக  முயலைத்  தருமேனியி 
லெரியைத்  தருமாமதி  ......  நிலவாலே 
தொடரக்  கொடுவாதையி  லடையக்  கரைமேலலை 
தொலையத்  தனிவீசிய  ......  கடலாலே 
துணையற்  றணிபூமல  ரணையிற்  றனியேனுயிர் 
துவளத்  தகுமோதுயர்  ......  தொலையாதோ 
வடபொற்  குலமேருவின்  முடுகிப்  பொருசூரனை 
மடியச்  சுடஏவிய  ......  வடிவேலா 
மறவக்  குலமாமொரு  குறமெய்த்  திருமாமகள் 
மகிழப்  புனமேவிய  ......  மயில்வீரா 
அடரப்  படர்கேதகை  மடலிற்  றழைசேர்வய 
லருணைத்  திருவீதியி  ......  லுறைவோனே 
அவனித்  திருமாதொடு  சிவனுக்  கிமையாவிழி 
அமரர்க்  கரசாகிய  ......  பெருமாளே. 
  • இடருக்கு இடர் ஆகிய கொடுமைக் கணை மேல் வரும் இறுதிச் சிறு கால் வரும் அதனாலே
    துன்பத்துக்கு மேல் துன்பம் தருவதான கொடிய (மன்மத) பாணங்களின் மேலே வந்து, அழிவைத் தரக்கூடிய சிறு தென்றல் காற்று வீசி வருகின்ற அந்தக் காரணத்தாலும்,
  • இயலைத் தரு கானகம் முயலைத் தரு மேனியில் எரியைத் தரு மா மதி நிலவாலே
    தகுதியைக் கொண்டதும், காட்டு முயல் போன்ற களங்கத்தினைக் கொண்டதுமான வடிவத்தில் இருந்துகொண்டு நெருப்பை வீசும் அழகிய சந்திரனுடைய ஒளியாலும்,
  • தொடரக் கொடு வாதையில் அடையக் கரை மேல் அலை தொலையத் தனி வீசிய கடலாலே
    மேல் மேல் தொடர்ந்து வந்து கொடிய வேதனையை நான் அடையும்படி, கரையின் மீது அலைகள் பட்டு அழிய அந்த அலைகளை ஒப்பற்ற விதத்தில் வீசுகின்ற கடலாலும்,
  • துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவளத் தகுமோ துயர் தொலையாதோ
    ஒரு துணையும் இல்லாமல் அலங்கரித்த மலர்ப் படுக்கையில் தனிமையில் எனது உயிர் வாடுதல் தகுமோ? என் விரக வேதனை ஒழியாதோ?
  • வட பொற் குல மேருவின் முடுகின் பொரு சூரனை மடியச் சுட ஏவிய வடிவேலா
    பொன் நிறைந்த வடமேரு மலை போல் விரைந்து சென்று சண்டை செய்த சூரனை இறந்து போகுமாறு சுட்டெரிக்கச் செலுத்திய கூரிய வேலனே,
  • மறவக் குலமாம் ஒரு குற மெய்த் திரு மா மகள் மகிழப் புன மேவிய மயில் வீரா
    வேடர் குலத்தவளாகிய ஒப்பற்ற குறத்தியும், மெய்ம்மை திகழும் லக்ஷ்மியின் சிறந்த மகளுமான வள்ளி மகிழும்படி தினைப் புனத்துக்கு விரும்பிச் சென்ற மயில் வீரனே,
  • அடரப் படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணைத் திரு வீதியில் உறைவோனே
    நெருக்கமாய் வளர்ந்துள்ள தாழை மடலின் தழைகள் சேர்ந்த வயல்களை உடைய திருவண்ணாமலையின் தெருக்களில் வாழ்பவனே,
  • அவனித் திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே.
    உலகுக்கும், சிவனுக்கும், உமா தேவிக்கும், இமையாத விழிகளை உடைய தேவர்களுக்கும் அரசனாகிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com