தனனா தனனத் தனனா தனனத்
தனனதா தனனத் ...... தனதான
அருமா மதனைப் பிரியா தசரக்
கயலார் நயனக் ...... கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத்
தணையா வலிகெட் ...... டுடல்தாழ
இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்
றிளையா வுளமுக் ...... குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
கிருபா தமெனக் ...... கருள்வாயே
ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்
டுரமோ டெறிபொற் ...... கதிர்வேலா
உறைமா னடவிக் குறமா மகளுக்
குருகா றிருபொற் ...... புயவீரா
திருமால் கமலப் பிரமா விழியிற்
றெரியா வரனுக் ...... கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்
றிருவீ தியினிற் ...... பெருமாளே.
- அருமா மதனைப் பிரியாத சரம்
அரியவனும் அழகனுமான மன்மதனை விட்டு அகலாத பாணங்கள் போன்றதும், - கயல் ஆர் நயனக் கொடியார் தம்
கயல் மீன்போன்றதும் ஆகிய கண்களை உடைய பொல்லாதவர்களான விலைமாதர்களின் - அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து
அழகிய, புளகாங்கிதம் கொண்ட, புனுகுசட்ட வாசனை பூண்ட, மலைகள் போன்ற மார்பகங்களை - அணையா வலி கெட்டு உடல் தாழ
அணைந்து, வலிமை இழந்து உடல் நலிய, - இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று
இருமலில் வீழும் தன்மை வந்து சேர, பேச்சு அற்று, உணர்வும் போய், - இளையா உளம் உக்கு உயிர் சோர
இளைத்து, உள்ளம் மெலிந்து, உயிர் சோர்வுற்று, - எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு
நெருப்பு கொளுத்தும் (கும்பிபாக)* நரகத்தில் புகாத வண்ணம், - இரு பாதம் எனக்கு அருள்வாயே
உனது இரு திருவடிகளை எனக்குத் தந்து அருளுக. - ஒரு மால் வரையைச் சிறு தூள் படவிட்டு
ஒப்பற்ற பெரிய கிரெளஞ்ச மலையை சிறு தூளாகும்படிச் செய்து, - உரமோடு எறி பொன் கதிர் வேலா
பலத்துடன் செலுத்திய, அழகிய ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே, - உறை மான் அடவிக் குற மா மகளுக்கு உருகா
மான்கள் வாழும் காட்டில் பெருமை வாய்ந்த குற மகளான வள்ளிக்கு உருகின - ஆறிரு பொன் புய வீரா
பன்னிரண்டு திரண்ட தோள்களை உடைய வீரனே, - திருமால் கமலப் பிரமா விழியில் தெரியா அரனுக்கு
அரியோனே
திருமால், தாமரையில் வீற்றீருக்கும் பிரமன் ஆகிய இருவருக்கும் காணப் பெறாத சிவனுக்கும் அருமை வாய்ந்தவனே, - செழு நீர் வயல் சுற்று அருணா புரியில்
செழுமை வாய்ந்த நீர் வயல்கள் சூழ்ந்துள்ள திரு அண்ணாமலையில் - திரு வீதியினில் பெருமாளே.
அகன்ற வீதிகளில் மகிழ்ச்சியுடன் உலாவரும் பெருமாளே.



