திருப்புகழ் · 394அழுதும் ஆவா (திருவருணை)

azhudhumAvA

தனதனா தானனத் தனதனா தானனத்
தனதனா தானனத் ...... தனதான
அழுதுமா வாவெனத் தொழுதமூ டூடுநெக்
கவசமா யாதரக் ...... கடலூடுற்
றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்
கறியொணா மோனமுத் ...... திரைநாடிப்
பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்
பெரியஆ தேசபுற் ...... புதமாய
பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்
பெறுவதோ நானினிப் ...... புகல்வாயே
பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
படியுமா றாயினத் ...... தனசாரம்
பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்
பரமமா யூரவித் ...... தகவேளே
பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்
பொடிபடா வோடமுத் ...... தெறிமீனப்
புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்
பொருதவே லாயுதப் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • அழுதும் ஆவா எனத் தொழுதும் ஊடூடு நெக்கு
    அழுதும், ஆ ஆ என இரங்கித் தொழுதும், அவ்வப்போது பக்தியால் நெகிழ்ந்தும்,
  • அவசமாய் ஆதரக் கடல் ஊடுற்று
    தன் வசமற்று, ஆதாரம் என்ற அன்புக் கடலில் திளைத்தும்,
  • அமைவில் கோலாகலச் சமய மா பாதகர்க்கு அறி ஒணா மோன முத்திரை நாடி
    அமைதியற்ற ஆடம்பரமான சமய வாதப் பாதகர்களுக்கு அறிவதற்கு முடியாத மெளனக்குறியைத் தேடியும்,
  • பிழை படா ஞான மெய்ப் பொருள் பெறாதே
    தவறுதல் இல்லாத ஞான மெய்ப் பொருளை நான் அடையாமல்,
  • வினைப் பெரிய ஆதேச புற்பதம் ஆய பிறவி வாராகரம் சுழியிலே
    வினைக்கு ஈடான பெரிய மாறுபட்ட வடிவங்களை அடையும் நீர்க்குமிழி போன்ற நிலையற்ற பிறவி என்ற கடல் நீர்ச்சுழியிலே,
  • போய் விழப் பெறுவதோ நான் இனிப் புகல்வாயே
    நான் இனி மேல் போய் விழக் கடவேனோ? சொல்லி அருளுக.
  • பழைய பாகீரதிப் படுகை மேல் வாழ்வு எனப் படியும்
    பழைய கங்கை என்னும் நீர் நிலையின் சரவணப் படுகையின்மேல் செல்வக் குமரர்களாய்த் தோன்றி,
  • ஆறு ஆயினத் தன சாரம் பருகுமாறு ஆனனச் சிறுவ
    கார்த்திகைப் பெண்களாகிய ஆறு தாய்மார்களின் முலைப்பாலை உண்ட ஆறு திரு முகங்களை உடைய குழந்தையே,
  • சோணாசலப் பரம மாயூர வித்தக வேளே
    திருவண்ணாமலைப் பரமனே, மயில் வாகனனே, ஞான மூர்த்தியே,
  • பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட
    பொழுது சாயும் மாலை வேளையில் கிரெளஞ்சமலை பொடிபட, பூமி முதலியவை பொடிபட்டுத் தெறிக்க,
  • முத்து எறி மீனப் புணரி கோ கோ என சுருதி கோ கோ என
    முத்துக்களை வீசுவதும், மீன்களைக் கொண்டதுமான கடல் கோ கோ என்று கதற, வேதங்கள் கோ கோ என்று கதற
  • பொருத வேலாயுதப் பெருமாளே.
    போர் செய்த வேலாயுதத்தை ஏந்தும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits