திருப்புகழ் · 392அருக்கார் நலத்தை (திருவருணை)
arukkArnalaththai
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
தனத்தா தனத்தத் ...... தனதான
அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
கடுத்தாசை பற்றித் ...... தளராதே
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
டறப்பே தகப்பட் ...... டழியாதே
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
கலிச்சா கரத்திற் ...... பிறவாதே
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
கலைப்போ தகத்தைப் ...... புகல்வாயே
ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்
டுரைப்பார்கள் சித்தத் ...... துறைவோனே
உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
டொளித்தோடும் வெற்றிக் ...... குமரேசா
செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
செருச்சூர் மரிக்கப் ...... பொரும்வேலா
திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்
றிருக்கோ புரத்திற் ...... பெருமாளே.
பத உரை · word meanings
- அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு
அருமை வாய்ந்த (உடல்) நலத்தைக் கெடுப்பவர்களான விலைமாதர்களுடைய மனத்துக்கு - அடுத்த ஆசை பற்றித் தளராதே
இயைந்த ஆசை கொண்டு சோர்வு அடையாமல், - அடல் காலனுக்கு கடைக் கால் மிதித்திட்டு
வலிமை வாய்ந்த யமனுக்கு என் அந்திம காலத்தில் (உயிரைக் கொள்வதற்கு வேண்டிய) உரிமையை மிதித்திட்டு, - அறப் பேதகப் பட்டு அழியாதே
மிகவும் மனம் வேறு பாடு அடைந்து நான் அழியாமலும், - கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து
பிறவிக்கு காரணமான செய்கையோரது நட்பை மிகக் கொண்டாடிக் கைக்கொண்டு, - கலிச் சாகரத்தில் பிறவாதே
துன்பக் கடலில் நான் பிறவாமலும், - கருத்தால் எனக்குத் திருத் தாள் அளித்து
நீ என் மீது அன்பு வைத்து உனது திருவடியைத் தந்து, - கலைப் போதகத்தைப் புகல்வாயே
கலை ஞானத்தை எனக்கு உபதேசிப்பாயாக. - ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
உரைப்பார்கள்
ஒரு முறை உன்னைத் தியானித்து (உனது) இரண்டு திருவடிகளையும் வெகுவாகப் புகழ்ந்து உரைப்பவர்களுடைய - சித்தத்து உறைவோனே
மனதில் உறைபவனே, - உரத் தோள் இடத்தில் குறத் தேனை வைத்திட்டு
வலிமையான தோளில் தேன்போல் இனிய குறப்பெண்ணான வள்ளியை வைத்து, - ஒளித்து ஓடும் வெற்றிக் குமரேசா
மறைந்து ஓடின வெற்றி பொருந்திய குமரேசனே, - செருக்கால் தருக்கி சுரச் சூர் நெருக்கு
ஆணவம் கொண்டு, கர்வம் மிகுந்து, தெய்வத் தன்மை உடைய தேவர்களை ஒடுக்கிய - அச் செருச் சூர் மரிக்கப் பொரும் வேலா
போருக்கு வந்த அந்தச் சூரன் இறக்க சண்டை செய்த வேலனே, - திறப் பூதலத்தில் திரள் சோண வெற்பில்
நிலை பெற்ற பூமியில் திரண்ட திரு அண்ணாமலையில் - திருக் கோபுரத்தில் பெருமாளே.
அழகிய கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.



