தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தநததான
கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட
வடதம னியகிரி கம்ப மாய்நட
கணபண விபரித கந்த காளபு ...... யங்கராஜன்
கயிறென அமரர நந்த கோடியு
முறைமுறை யமுதுக டைந்த நாளொரு
கதியற வுலகைவி ழுங்கு மேகவொ ...... ழுங்குபோல
வினைமத கரிகளு மெண்டி சாமுக
கிரிகளு முறுகிட அண்ட கோளகை
வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு ...... நஞ்சுபோல
விடுகுழை யளவும ளந்து காமுக
ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக
விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ ...... ழிந்திடாதோ
முனைபெற வளையஅ ணைந்த மோகர
நிசிசரர் கடகமு றிந்து தூளெழ
முகிலென வுருவமி ருண்ட தாருக ...... னஞ்சமீன
முழுகிய திமிரத ரங்க சாகர
முறையிட இமையவர் தங்க ளூர்புக
முதுகிரி யுருவமு னிந்த சேவக ...... செம்பொன்மேரு
அனையன கனவித சண்ட கோபுர
அருணையி லுறையும ருந்து ணாமுலை
அபிநவ வனிதைத ருங்கு மாரநெ ...... ருங்குமால்கொண்
டடவியில் வடிவுக ரந்து போயொரு
குறமகள் பிறகுதி ரிந்த காமுக
அரியர பிரமபு ரந்த ராதியர் ...... தம்பிரானே.
- கனை கடல் வயிறு குழம்பி வாய்விட
ஒலிக்கின்ற பாற்கடலின் உட்புறம் எல்லாம் கலக்கிக் கொண்டு வெளிப்பட, - வட தமனிய கிரி கம்பமாய் நட
வடக்கே உள்ள பொன் மலையாகிய மேருவை மத்தாக நட்டு, - கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன் கயிறு என
விபரீதமான நாற்றமுள்ள விஷத்தைக் கொண்ட நாகராஜனாகிய வாசுகியை கடையும் கயிறாகக் கொண்டு, - அமரர் அநந்த கோடியு(ம்) முறை முறை அமுது கடைந்த
நாள்
பல கோடி தேவர்களும் வரிசை வரிசையாக அமுதம் கடைந்த அந்த நாளில், - ஒரு கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல
உய்யும் வழி ஒன்றும் இல்லாத வகையில் உலகையே விழுங்க வந்த கரிய மேகத்தின் வரிசை போல எழுந்து, - வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் முறுகிட
அண்ட கோளகை வெடிபட
செயலாற்றும் மத யானைகளும், எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும் சூடேறி வெந்து போக, அண்ட உருண்டைகள் யாவும் வெடிபட்டுப் போக, - எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல
யாவரையும் மேலிட்டு வேல் போலப் பரந்து வரும் ஆலகால விஷம் போல, - விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவர் உறு
தொங்கும் குண்டலம் உள்ள செவிவரையிலும் பாய்ந்து காமம் கொண்டவர்களுடைய உயிரைக் கவர்வனவும், - பஞ்ச பாதக விழி வலை மகளிரொடு அன்பு கூர்வது
ஒழிந்திடாதோ
ஐந்து பாதகங்களுக்கும்* இடம் தருவனவுமான கண்கள் என்னும் வலையைக் கொண்ட விலைமாதர்கள் மீது காதல் மிகுவது என்னை விட்டு விலகாதோ? - முனை பெற வளைய அணைந்த மோகர நிசிசரர் கடகம்
முறிந்து தூள் எழ
போர் முனையில் இடம் பெற்று வளைவாகச் சூழ்ந்து போர் ஆரவாரம் செய்யும் அசுரர்களின் சேனை முறிபட்டுப் பொடியாக, - முகில் என உருவம் இருண்ட தாருகன் அஞ்ச
மேகம் போலக் கறுத்த உருவம் கொண்ட தாரகாசுரன் பயப்படும்படி, - மீன(ம்) முழுகிய திமிர தரங்க சாகர(ம்) முறை இட
இமையவர் தங்கள் ஊர் புக
மீன்கள் வசிக்கின்றதும், அலை வீசுவதுமான கடல் ஓலம் இட, தேவர்கள் தங்கள் ஊர் போய்ச் சேர, - முது கிரி உருவ முனிந்த சேவக
பழைய (கிரவுஞ்ச) மலையில் வேல் ஊடுருவிச் செல்லும்படியாகக் கோபித்த வல்லவனே, - செம்பொன் மேரு அனையன கனவித சண்ட கோபுர
செம் பொன் மேருமலைக்குச் சமமான பெருமை கொண்ட வலிய கோபுரங்களை உடைய - அருணையில் உறையும் அருந்து உணா முலை அபிநவ
வனிதை தரும் குமார
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும், பிடித்துப் பருகுதல் இல்லாத உண்ணாமுலை அம்மை, புதியவளாகிய தேவி பார்வதி ஈன்ற குமரனே, - நெருங்கு மால் கொண்டு அடவியில் வடிவு கரந்து போய் ஒரு
குற மகள் பிறகு திரிந்த காமுக
அளவு கடந்த ஆசை கொண்டு காட்டில் உனது உண்மை வடிவத்தை மறைத்துச் சென்று, ஒப்பற்ற குறப் பெண்ணான வள்ளியின் பின்பே திரிந்த காமுகனே, - அரி அரன் பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே.
திருமால், ருத்திரன், பிரமன், இந்திரன் ஆகிய தேவர்களுக்குத் தலைவனே.