திருப்புகழ் 388 இரவியும் மதியும் (திருவருணை)

தனதன தனனம் தனதன தனனம்
தனதன தனனம் ...... தனதான
இரவியு  மதியுந்  தெரிவுற  எழுமம் 
புவிதனி  லினமொன்  ......  றிடுமாதும் 
எழில்புதல்  வருநின்  றழுதுள  முருகும் 
மிடர்கொடு  நடலம்  ......  பலகூறக் 
கருகிய  வுருவங்  கொடுகனல்  விழிகொண் 
டுயிரினை  நமனுங்  ......  கருதாமுன் 
கலைகொடு  பலதுன்  பமுமக  லிடநின் 
கழலிணை  கருதும்  ......  படிபாராய் 
திருமரு  வியதிண்  புயனயன்  விரியெண் 
டிசைகிடு  கிடவந்  ......  திடுசூரன் 
திணிபுய  மதுசிந்  திடஅலை  கடலஞ் 
சிடவலி  யொடுகன்  ......  றிடும்வேலா 
அருமறை  யவரந்  தரமுறை  பவரன் 
புடையவ  ருயஅன்  ......  றறமேவும் 
அரிவையு  மொருபங்  கிடமுடை  யவர்தங் 
கருணையி  லுறையும்  ......  பெருமாளே. 
  • இரவியு மதியுந் தெரிவுற எழும் அம்புவிதனில்
    சூரியனும், சந்திரனும் தெரியும்படி விளங்கும் இப்பூமியில்
  • இனம் ஒன்றிடுமாதும் எழில்புதல்வரும்
    சுற்றம் என்று பொருந்திவரும் மனைவியும் அழகிய மக்களும்
  • நின்றழுது உளமுருகும்
    உடன் நின்று அழுது, உள்ளம் உருகும்படியான
  • இடர்கொடு நடலம் பலகூற
    வருத்தத்துடன் துன்ப மொழிகள் பல சொல்ல,
  • கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்டு
    கறுத்த உருவமும் நெருப்பு வீசும் கண்களுடனும் உள்ள
  • உயிரினை நமனுங் கருதாமுன்
    யமனும் என் உயிரைக் கவர்ந்து செல்லக் கருதி வருவதற்கு முன்பாக,
  • கலைகொடு பல துன்பமும் அகலிட
    யான்கற்ற பல கலைகளும், என் துயரங்களும் ஒருங்கே நீங்கிட
  • நின் கழலிணை கருதும் படிபாராய்
    உன் திருவடிகளையே யான் தியானிக்கும்படி கண்பார்த்தருள்வாயாக.
  • திருமருவியதிண் புயன் அயன்
    திருமகளை மார்பில் வைத்த திண்ணிய தோளினன் திருமாலும், பிரமனும்,
  • விரியெண்டிசை கிடுகிட வந்திடுசூரன்
    பரந்த எண்திசையிலுள்ள யாவரும் நடுநடுங்க வந்த சூரனுடைய
  • திணிபுயமது சிந்திட அலை கடலஞ்சிட
    வலிய புயங்கள் அறுபட்டு விழ, அலை வீசும் கடல் பயப்படுமாறு
  • வலியொடு கன்றிடும்வேலா
    வலிமையோடு கோபித்த வேலனே,
  • அருமறையவர் அந்தரம் உறைபவர்
    அரிய வேதங்களில் வல்லவரும், வானில் உறையும் தேவர்களும்,
  • அன்புடையவர் உ(ய்)ய
    உன்னிடம் அன்பு மிகுந்த அடியார்களும் பிழைக்கும் வண்ணம்,
  • அன்று அறமேவும் அரிவையும்
    அன்று முப்பத்திரண்டு* அறங்களையும் விரும்பிச் செய்த தேவி பார்வதியை
  • ஒருபங்கு இடமுடை யவர்தங்கு
    தம் ஒரு பாகத்தில் இடப்பக்கமாகக் கொண்டவரான சிவபிரான் தங்கும்
  • அருணையி லுறையும் பெருமாளே.
    திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com