திருப்புகழ் 386 கரி உரி அரவம் (திருவருணை)

தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன ...... தனதான
கரியுரி  அரவ  மணிந்த  மேனியர் 
கலைமதி  சலமு  நிறைந்த  வேணியர் 
கனல்மழு  வுழையு  மமர்ந்த  பாணியர்  ......  கஞ்சமாதின் 
கனமுலை  பருகி  வளர்ந்த  காமனை 
முனிபவர்  கயிலை  யமர்ந்த  காரணர் 
கதிர்விரி  மணிபொ  னிறைந்த  தோளினர்  ......  கண்டகாள 
விரிவென  வுனது  ளுகந்த  வேலென 
மிகவிரு  குழையு  டர்ந்து  வேளினை 
யனையவ  ருயிரை  விழுங்கி  மேலும்வெ  ......  குண்டுநாடும் 
வினைவிழி  மகளிர்  தனங்கள்  மார்புற 
விதமிகு  கலவி  பொருந்தி  மேனியு 
மெழில்கெட  நினைவு  மழிந்து  மாய்வதொ  ......  ழிந்திடாதோ 
எரிசொரி  விழியு  மிரண்டு  வாளெயி 
றிருபிறை  சயில  மிரண்டு  தோள்முகி 
லெனவரு  மசுரர்  சிரங்கள்  மேருஇ  ......  டிந்துவீழ்வ 
தெனவிழ  முதுகு  பிளந்து  காளிக 
ளிடுபலி  யெனவு  நடந்து  தாள்தொழ 
எதிர்பொரு  துதிர  முகந்த  வேகமு  ......  கைந்தவேலா 
அரிகரி  யுழுவை  யடர்ந்த  வாண்மலை 
அருணையி  லறவு  முயர்ந்த  கோபுர 
மதினுறை  குமர  அநந்த  வேதமொ  ......  ழிந்துவாழும் 
அறுமுக  வடிவை  யொழிந்து  வேடர்கள் 
அடவியி  லரிவை  குயங்கள்  தோய்புய 
அரியர  பிரம  புரந்த  ராதியர்  ......  தம்பிரானே. 
  • கரி உரி அரவம் அணிந்த மேனியர்
    யானையின் உரித்த தோலையும் பாம்பையும் அணிந்த உடலைக் கொண்டவர்,
  • கலை மதி சலமு(ம்) நிறைந்த வேணியர்
    ஒளிகள் கொண்ட திங்களும், கங்கையும் நிறைந்த சடையினர்,
  • கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர்
    நெருப்பையும், மானையும், பரசையும் ஏந்திய கையினர்,
  • கஞ்ச மாதின் கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் கயிலை அமர்ந்த காரணர்
    தாமரையில் வாழும் லக்ஷ்மியின் பருத்த மார்பகங்களின் பாலைப் பருகி வளர்ந்த மன்மதனைக்* கோபித்து அழித்தவர், கயிலாயத்தில் அமர்ந்துள்ள மூலப் பொருளானவர்,
  • கதிர் விரி மணி பொன் நிறைந்த தோளினர் கண்ட காள
    ஒளி பரப்பும் ரத்தின மணிகளும் பொன்னும் நிறைந்த தோளை உடையவராகிய இத்தகைய சிவபெருமானின் கழுத்தில் உள்ள ஆலகால நஞ்சின்
  • விரிவு என உனது உள் உகந்த வேல் என
    விரிவோ (இந்த விலைமாதரின் கண்கள்) என்று எண்ணும்படியும், (கூர்மையில்) உன்னுடைய மனத்துக்கு விருப்பமான வேலாயுதமோ இது என்று எண்ணும் படியும்,
  • மிக இரு குழையும் அடர்ந்து வேளினை அனையவர் உயிரை விழுங்கி
    மிகவும் இரண்டு காதணி குண்டலங்களையும் நெருங்கியும், மன்மதனை ஒத்த ஆடவர்களின் உயிரையே விழுங்கியும்,
  • மேலும் வெகுண்டு நாடும் வினை விழி மகளிர்
    (இத்தனையும் செய்து) பின்னும் கோபித்து நாடுகின்ற செயலினைச் செய்யும் கண்களை உடைய விலைமாதர்களின்
  • தனங்கள் மார்பு உற வித மிகு கலவி பொருந்தி மேனியும் எழில் கெட
    மார்போடு மார்பாக அணைந்தும், பலவிதமான காம லீலைகளில் பொருந்தி உடலும் அழகை இழக்கவும்,
  • நினைவும் அழிந்து மாய்வது ஒழிந்திடாதோ
    நினைவும் அழிந்து இறந்து போகும் விதி என்னை விட்டு நீங்காதோ?
  • எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம் இரண்டு தோள்
    நெருப்பை வீசும் கண்கள் இரண்டுடன், இரண்டு பிறை போன்ற ஒளி வீசும் பற்களுடனும், மலை போன்ற இரு தோள்களுடனும்,
  • முகில் என வரும் அசுரர் சிரங்கள் மேரு இடிந்து வீழ்வது என விழ முதுகு பிளந்து
    கரிய மேகம் போல் வரும் அசுரர்களுடைய தலைகள் மேரு மலையே இடிந்து வீழ்வது போல் கீழே விழுந்து முதுகு பிளவுபட,
  • காளிகள் இடு பலி எனவு(ம்) நடந்து தாள் தொழ
    காளிகள் (அப் பிணங்கள்) தமக்கு இட்ட பலி உணவு என நடந்து உனது திருவடிகளைத் தொழ,
  • எதிர் பொருது உதிரம் உகந்த வேகம் உகைந்த வேலா
    எதிர்த்துப் போர் செய்து, அசுரர்களின் ரத்தத்தை விரும்பிய வேகத்துடன் சென்ற வேலை உடையவனே,
  • அரி கரி உழுவை அடர்ந்த வாள் மலை அருணையில் அறவும் உயர்ந்த கோபுரம் அதின் உறை குமர
    சிங்கம், யானை, புலி இவைகள் நெருங்கி வாழும் ஒளி வீசும் மலையாகிய திருவண்ணாமலையில் மிகவும் உயர்ந்த கோபுரத்தில் வீற்றிருக்கும் குமரனே,
  • அநந்த வேத(ம்) மொழிந்து வாழும் அறுமுக வடிவை ஒழிந்து
    அளவில்லாத வேதங்கள் போற்றி வாழும் (உன் இயல்பான) ஆறு முக வடிவை விட்டு விட்டு,
  • வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய
    வேடர்கள் வாழும் காட்டில் இருந்த பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்களைச் சேரும் புயங்களை உடையவனே,
  • அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே.
    திருமால், சிவன், பிரமன், இந்திரன் முதலான தேவர்கள் ஆகியவரின் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com