தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் ...... தந்ததான
பேதகவி ரோதத் தோதகவி நோதப்
பேதையர்கு லாவைக் ...... கண்டுமாலின்
பேதைமையு றாமற் றேதமக லாமற்
பேதவுடல் பேணித் ...... தென்படாதே
சாதகவி காரச் சாதலவை போகத்
தாழ்விலுயி ராகச் ...... சிந்தையாலுன்
தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
சாரல்மற மானைச் ...... சிந்தியேனோ
போதகம யூரப் போதகக டாமற்
போதருணை வீதிக் ...... கந்தவேளே
போதகக லாபக் கோதைமுது வானிற்
போனசிறை மீளச் ...... சென்றவேலா
பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்
பாருலகு வாழக் ...... கண்டகோவே
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.
- பேதகவி ரோதத் தோதக விநோதப் பேதையர்
மனம் வேறுபட்ட, பகைமை வஞ்சகம் இவைகளைக் கொண்ட விசித்திரமான மங்கையர்கள் - குலாவைக் கண்டு மாலின்
மகிழ்ச்சியுடன் உறவாடுதலைக் கண்டு மோகித்து, - பேதைமை உறா மற்று ஏதம் அகலாமல்
அறியாமை உற்று, அதனால் குற்றம் குறைகள் என்னைவிட்டு நீங்காமல், - பேதவுடல் பேணித் தென்படாதே
மாறுதலை அடையும் உடலை விரும்பிப் பாதுகாத்து வெளியே தென்படாமல், - சாதக விகாரச் சாதல் அவை போக
பிறப்பும், (பாலன், குமரன், கிழவன் என்ற) மாற்றங்களும், இறப்பும் ஆகிய இவையாவும் தொலைய, - தாழ்வில் உயி ராகச் சிந்தையால் உன்
குறைவில்லாத ஒன்றாக என் உயிர் விளங்க, மனத்தால் உனது - தாரை வடிவேலைச் சேவல்தனை
புகழ் பெற்ற வேலாயுதத்தை, சேவல் கொடியை, - ஏனல் சாரல் மறமானைச் சிந்தியேனோ
தினைப்புனச் சாரலில் இருந்த வேடர்களின் மான் போன்ற வள்ளியை தியானிக்கமாட்டேனோ? - போதக மயூரப் போது அக அகடாமன் போது
யானை*, மயில் இவற்றின் மீது மலர் ஆசனம் இட்ட நடு இருப்பிடத்தில் எழுந்தருளி உலா வருகின்ற - அருணை வீதிக் கந்தவேளே
திருஅண்ணாமலை வீதியில் உள்ள கந்தப் பெருமாளே, - போதக கலாபக் கோதை முது வானில்
யானையாகிய ஐராவதம் வளர்த்த மயில் போன்ற தேவயானை வாழும் பழைய விண்ணுலகத்தார் - போனசிறை மீளச் சென்றவேலா
சென்றிருந்த (சூரனின்) சிறையினின்றும் அவர்கள் மீண்டு வருவதற்காக (சூரனுடன்) போருக்குச் சென்ற வேலனே, - பாதக பதாதிச் சூரன்முதல் வீழ
பெரிய பாபச் செயல்களைச் செய்தவனும், காலாட்படைகள் உடையவனுமான சூரன் முதலிய அரக்கர்கள் அனைவரும் விழுந்து மடிய, - பாருலகு வாழக் கண்டகோவே
மண்ணுலகும் விண்ணுலகும் வாழும் பொருட்டு கருணை புரிந்த தலைவனே, - பாதமலர் மீதிற் போதமலர் தூவி
உன் திருவடி மலர்களை நினைந்து, ஞான பூஜை செய்து - பாடுமவர் தோழத் தம்பிரானே.
பாடுகின்ற அடியார்களின் தோழனான தனிப் பெரும் தலைவனே.