தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் ...... தந்ததான
ஆலவிழி நீலத் தாலதர பானத்
தாலளக பாரக் ...... கொண்டலாலே
ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்
தாரநடை யால்நற் ...... கொங்கையாலே
சாலமய லாகிக் காலதிரி சூலத்
தாலிறுகு பாசத் ...... துன்பமூழ்கித்
தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்
சாவதன்மு னேவற் ...... கொண்டிடாயோ
சோலைதரு கானிற் கோலமற மானைத்
தோளிலுற வாகக் ...... கொண்டவாழ்வே
சோதிமுரு காநித் தாபழய ஞானச்
சோணகிரி வீதிக் ...... கந்தவேளே
பாலகக லாபக் கோமளம யூரப்
பாகவுமை பாகத் ...... தன்குமாரா
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.
- ஆல விழி நீலத்தால் அதர பானத்தால் அளக பாரக்
கொண்டலாலே
விஷம் போன்ற கண்களாகிய நீலோற்பல மலராலும், வாயிதழ் ஊறல் பருகுவதாலும், கூந்தல் பாரமாகிய மேகத்தாலும், - ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால்
நற் கொங்கையாலே சால மயலாகி
முத்துப்போன்ற பற்களாலும், வில்லைப் போன்ற நெற்றியாலும், விரிந்து அசைந்த நடையாலும், நல்ல மார்பகங்களாலும், மிகவும் மோகம் கொண்டவனாகி, - கால(ன்) திரி சூலத்தால் இறுகு பாசத் துன்ப(ம்) மூழ்கித்
தாழ்வில் உயிர் வீழ் பட்டு
யமனுடைய முத்தலைச் சூலத்தைக் கண்டு, அவன் கட்டும் பாசக் கயிற்றினால் துன்பத்தில் ஆழ்ந்து, அந்த மனச் சோர்வில் உயிர் வீழுதல் அடைந்து, - ஊழ் வினை விடாமல் சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ
ஊழ்வினை என்னை விடாது தொடர்ந்து, இறப்பதற்கு முன்னே என்னை ஆட்கொள்ள மாட்டாயோ? - சோலை தரு கானில் கோல மற மானைத் தோளில்
உறவாகக் கொண்ட வாழ்வே
சோலைகளைக் கொண்ட காட்டில் அழகிய வேடர் பெண்ணாகிய வள்ளியை தோளில் உறவு பூண்டு அணைந்து கொண்ட செல்வமே, - சோதி முருகா நித்தா பழய ஞானச் சோணகிரி வீதிக் கந்த
வேளே
ஜோதி வடிவமான முருகனே, என்றும் அழியாமல் இருப்பவனே, ஞான பூமியாகிய திருவண்ணாமலையின் தெருவில் வீற்றிருக்கும் கந்த வேளே, - பாலக கலாபக் கோமள மயூரப் பாக உமை பாகத்தன்
குமாரா
குழந்தையே, தோகை நிறைந்த அழகிய மயிலை நடத்துபவனே, உமை பங்கனான சிவ குமாரனே, - பாத மலர் மீதில் போத மலர் தூவிப் பாடுமவர் தோழத்
தம்பிரானே.
பாதத் தாமரையில் ஞான மலரை* இட்டுப் பாடும் அடியார்களின் தோழனே, தம்பிரானே.