தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு
மதுரமொழி யாழி சைக்கு ...... மிருநாலு
வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு
மடியருவ வேள்க ணைக்கு ...... மறவாடி
நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு
நிறையுமிகு காத லுற்ற ...... மயல்தீர
நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர
நிலவுமயி லேறி யுற்று ...... வரவேணும்
மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து
மவுலியற வாளி தொட்ட ...... அரிராமன்
மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க
மவுனமறை யோது வித்த ...... குருநாதா
இடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு
ளினியகுண கோபு ரத்தி ...... லுறைவோனே
எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு
மிடையுருவ வேலை விட்ட ...... பெருமாளே.
- வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர
மொழி யாழ் இசைக்கும்
(யுக முடிவில் வட துருவத்திலிருந்து வெளிப்பட்டு வரும் நெருப்புக் கோளமான) வடவா முகாக்கினியின் உள்ளே நுழைந்து முழுகி (வானில்) எழுகின்ற சிறந்த சந்திரனுக்கும், மங்கையரின் இனிய மொழி போலச் சுவைக்கும் யாழின் இசை ஒலிக்கும், - இரு நாலு வரை திசை விடாது சுற்றி அலறு திரை
வாரிதிக்கும்
எட்டு மலைகளும், எட்டுத் திசைகளும் விடாமல் சுற்றி வளைத்து பேரொலி செய்யும் அலைகளை உடைய கடலுக்கும், - மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி
இறந்து போய் உருவம் இழந்து அருவமாயுள்ள மன்மதனுடைய (மலர்ப்) பாணங்களுக்கும் மிகவும் வாடி, - நெடு கனக மேரு ஒத்த புளக முலை மாது அருக்கு நிறையும்
மிகு காதல் உற்ற மயல் தீர
பொன் மயமான மேரு மலையைப் போன்றதும், புளகம் கொண்டதுமான மார்பை உடைய இந்தப் பெண் அருமை நிறைந்துள்ள மிக்க காதல் கொண்ட மயக்கம் தீர, - நினைவினோடு பீலி வெற்றி மரகத கலாப சித்ர நிலவு
மயில் ஏறி உற்று வரவேணும்
(இவள் நிலைமையை) ஞாபகம் வைத்து, பீலிக் கண்களைக் கொண்ட, வெற்றி வாய்ந்த, பச்சை நிறம் கொண்ட, தோகையின் அழகு பொலியும் மயிலின் மேல் ஏறி அமர்ந்து நீ இவளிடம் வர வேண்டும். - மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி
அற வாளி தொட்ட அரி ராமன் மருக
இதழ்கள் விரிந்த மலர் மாலைகள் சுற்றி அணிந்துள்ள இருபது தோள்களுடன், (ராவணனுடைய) பத்துத் தலைகளும் அற்று விழும்படியாக அம்பைச் செலுத்திய ஹரியாகிய ராமனின் மருகனே, - பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க மவுன மறை
ஓதுவித்த குருநாதா
பல தேவர்களுக்கும் அரியவராக நிற்கும் சிவபெருமான் கற்கும்படி மவுன ரகசிய வேதப்பொருளை உபதேசித்த குருநாதனே, - இடை அரி உலாவும் உக்ர அருண கிரி மா நகர்க்குள் இனிய
குண கோபுரத்தில் உறைவோனே
வழியில் பாம்புகள் உலவுகின்ற பயங்கரமான திருவண்ணாமலை என்னும் சிறந்த நகரில் இனிமையான கிழக்கு கோபுரத்தில் உறைபவனே, - எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை
உருவ வேலை விட்ட பெருமாளே.
ஏழு உலகளவும் அளாவி நிற்கும் (மேரு) மலையுடன் மாறுபட்டுப் பொருது*, பெரிய மலைகள் (கிரெளஞ்ச மலை, ஏழு குலகிரிகள்) எட்டையும் ஊடுருவும்படியாக வேலைச் செலுத்திய பெருமாளே.



