தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
முழுமதிநி லாவி னுக்கும் ...... வசையாலும்
மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு
முதியமத ராஜ னுக்கு ...... மழியாதே
புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த
புதுமையினி லாறி ரட்டி ...... புயமீதே
புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர
பொருமயிலி லேறி நித்தம் ...... வரவேணும்
எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு
ளெழுதரிய கோபு ரத்தி ...... லுறைவோனே
இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த
இளமுலைவி டாத சித்ர ...... மணிமார்பா
செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
சிவனைமுத லோது வித்த ...... குருநாதா
திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற
சிறையடைய மீள விட்ட ...... பெருமாளே.
- முழுகி வடவா முகத்தின் எழு கனலிலே பிறக்கு(ம்) முழு
மதி நிலாவினுக்கும்
வடவாமுக அக்கினியில் முழுகி அங்கு பெற்ற சூட்டுடன் தோன்றும் பூரண சந்திரனுடைய ஒளிக் கிரணங்களுக்கும், - வசையாலும் மொழியு(ம்) மட மாதருக்கும் இனிய தனி வேய்
இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே
நிந்தனைப் பேச்சு பேசும் மடமையுடைய மாதர்களுக்கும், இனிமை வாய்ந்த ஒப்பற்ற புல்லாங்குழலின் இசை ஒலிக்கும், பழையவனாகிய மன்மத ராஜனுடைய சேட்டைகளுக்கும் உட்பட்டு (நான்) அழிந்து போகாமல், - புழுகு திகழ் நீபம் அ(த்)தில் அழகிய குரா நிரைத்த
புதுமையினில் ஆறு இரட்டி புய(ம்) மீதே
புனுகு சட்டத்திலும், (மணம்) விளங்கும் கடம்பிலும், அழகிய குரா மலரிலும் வரிசையாக அமைந்த (மாலைகளின்) புதுமைத் தோற்றம் கொண்ட (உனது) பன்னிரு புயங்களின் மேல் - புணரும் வகை தான் நினைத்தது உணரும் வகை நீல சித்ர
பொரு(ம்) மயிலில் ஏறி நித்தம் வரவேணும்
தழுவிச் சேரும் வழியையே (நான்) நினைத்துள்ள உண்மையை உலகோர் தெரியும்படி, நீல நிறம் கொண்ட, அழகிய, சண்டை செய்ய வல்ல மயிலில் ஏறி நாள் தோறும் வர வேண்டும். - எழு(ம்) மகர வாவி சுற்று(ம்) பொழில் அருணை மா நகர்க்குள்
எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே
மகர மீன்கள் துள்ளி எழும் தடாகங்கள் சுற்றிலும் உள்ள சோலைகள் சூழ்ந்த திருவண்ணாமலை என்னும் நகரில் எழுந்தருளிய, எழுதுவற்கு முடியாத அழகுடைய கோபுரத்தில் வீற்றிருப்பவனே, - இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இளமுலை
விடாத சித்ர மணிமார்பா
இடை துவள வேடப்பெண் வள்ளியின் ஆடை அசையவும், பருத்த இளமை வாய்ந்த அவளுடைய மார்பினை விடாத அழகிய மார்பனே, - செழு மகுட நாக(ம்) மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த
சிவனை முதல் ஓதுவித்த குரு நாதா
செழுமை கொண்ட பணாமுடி உடைய பாம்பு, நெருக்கமாக ஒழுகி விழும் கங்கை நீர் இவற்றைச் சடையில் தாங்கிய சிவபெருமானுக்கு முன்பு பிரணவத்தை உபதேசம் செய்த குரு நாதனே, - திசை முகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை
அடைய மீள விட்ட பெருமாளே.
பிரமன், திருமால் பின்னும் பல அருமையான தேவர்களும் அடைக்கப்பட்டிருந்த (சூரனின்) சிறையினின்றும், அவர்கள் மீளும்படி வெளிக்கொண்டு வந்த பெருமாளே.