தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ...... தனதான
அமுத மூறுசொ லாகிய தோகையர்
பொருளு ளாரையெ னாணையு னாணையெ
னருகு வீடிது தானதில் வாருமெ ...... னுரைகூறும்
அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி ...... னருள்தாராய்
குமரி காளிவ ராகிம கேசுரி
கவுரி மோடிசு ராரிநி ராபரி
கொடிய சூலிசு டாரணி யாமளி ...... மகமாயி
குறளு ரூபமு ராரிச கோதரி
யுலக தாரிஉதாரிப ராபரி
குருப ராரிவி காரிந மோகரி ...... அபிராமி
சமர நீலிபு ராரித னாயகி
மலைகு மாரிக பாலிந னாரணி
சலில மாரிசி வாயம னோகரி ...... பரையோகி
சவுரி வீரிமு நீர்விட போஜனி
திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
சகல வேதமு மாயின தாயுமை ...... யருள்பாலா
திமித மாடுசு ராரிநி சாசரர்
முடிக டோறுக டாவியி டேயொரு
சிலப சாசுகு ணாலிநி ணாமுண ...... விடும்வேலா
திருவு லாவுசொ ணேசர ணாமலை
முகிலு லாவுவி மானந வோநிலை
சிகர மீதுகு லாவியு லாவிய ...... பெருமாளே.
- அமுதம் ஊறு சொல் ஆகிய தோகையர்
அமுதம் ஊறி வருவது போல் இனிக்கும் சொற்களைக் கொண்ட மயில் போன்ற பெண்கள் - பொருள் உளாரை என் ஆணை உன் ஆணை
பொருள் உள்ள செல்வர்களை "என் மேல் ஆணை உன் மேல் ஆணை - என் அருகு வீடு இது தான் அதில் வாரும் என
என் வீடு சமீபத்தில் தான் இருக்கிறது, அங்கே வாரும்" என்று - உரை கூறும் அசடு மாதர் குவாது சொல் கேடிகள்
பேசுகின்ற மூட விலைமாதர், குதர்க்கம் பேசும் கேடுறுவோர், - தெருவின் மீது குலாவி உலாவிகள்
தெருவில் சரசமாக குலவி உலவுபவர்கள், - அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள் தாராய்
அத்தகையோரது மாயை என் மீது தாக்காமலும், நான் கெடாமலும் இருக்க உனது திருவருளைத் தந்து அருளுக. - குமரி காளி வராகி மகேசுரி
குமரி, காளி, வராகி, மகேஸ்வரி, - கவுரி மோடி சுராரி நிராபரி
கெளரி, மோடி, முதலிய பெயர்களை உடையவள், தேவர்களுக்குக் கண் போன்றவள், பொய்யிலி, - கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி
உக்ரமான சூலத்தை ஏந்தியவள், ஒளி மயத்தவள், சியாமளப் பச்சை நிறம் உடையவள், மகமாயி, - குறளு ரூப முராரி சகோதரி
வாமன உருவம் கொண்ட திருமாலின் சகோதரி, - உலக தாரி உதாரி பராபரி
உலகத்தைத் தரித்துப் புரப்பவள், தயாள குணம் உடையவள், முதன்மை பூண்டவள், - குருபராரி விகாரி நமோகரி அபிராமி
குருவாகிய சிவனுக்குக் கண் போன்றவள், வேறுபாடுகளைப் பூண்டவள், வணங்கப்படுபவள், அழகுள்ளவள், - சமர நீலி புராரி தன் நாயகி
போர் வல்ல துர்க்கை, திரிபுரம் எரித்த சிவபெருமானின் பத்தினி, - மலை குமாரி கபாலி நல் நாரணி
இமயவன் புதல்வி, கபாலம் ஏந்தியவள், நல்ல குணம் வாய்ந்த நாராயணி, - சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி
நீர் பொழியும் மேகம் போன்றவள், சிவ சம்பந்தப்பட்டு விரும்பத்தக்கவள், பரா சக்தி, யோகி, - சவுரி வீரி முநீர் விட போஜனி
வலிமை உள்ளவள், வீரம் உள்ளவள், பாற்கடலில் எழுந்த ஆலஹால விஷத்தை உண்டவள், - திகிரி மேவு கையாளி செயாள்
சக்கரம் ஏந்திய திருக்கரத்தை உடையவள், இலக்குமி, - ஒரு சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா
ஒப்பற்ற எல்லா வேதமுமாய் நிறைந்த தாய் உமா தேவி (ஆகிய பார்வதி) ஈன்றருளிய பாலனே, - திமிதம் ஆடு சுராரி நிசாசரர்
பேரொலி செய்து போராடிய தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களுடைய - முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு
தலைகளில் எல்லாம் ஆயுதங்கள் படும்படி செலுத்தி வைத்து, - ஏய் ஒரு சில பசாசு குணாலி நிணாம் உண விடும் வேலா
அங்கு கூடிய சில பேய்கள் குணலை என்ற ஆரவாரத்துடன் கூத்தாடி மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தியவனே, - திரு உலாவு சொணேசர அ(ண்)ணாமலை
லக்ஷ்மீகரம் நிறைந்த சோணாசலேஸ்வரது திருவண்ணாமலையில் - முகில் உலாவு விமான நவோ நிலை
மேகம் உலவும் கோபுரத்தின் ஒன்பது நிலைகளைக் கடந்து - சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே.
கோபுர உச்சியில் விளக்கமுற்று உலாவிய பெருமாளே.