தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
எழுதிகழ் புவன நொடியள வதனி
லியல்பெற மயிலில் ...... வருவோனே
இமையவர் பரவி யடிதொழ அவுணர்
மடிவுற விடுவ ...... தொருவேலா
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
வழிபட மொழியு ...... முருகேசா
மலரடி பணியு மடமகள் பசலை
மயல்கொடு தளர்வ ...... தழகோதான்
முழுகிய புனலி லினமணி தரள
முறுகிடு பவள ...... மிகவாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியு
முதுமலை யழக ...... குருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில்
படிபவ ரிதய ...... முறுகோவே
பருவரை துணிய வொருகணை தெரிவ
பலமலை யுடைய ...... பெருமாளே.
- எழுதிகழ் புவன
ஏழு உலகங்கள் எனவிளங்கும் புவனத்தை - நொடியள வதனில்
ஒரு நொடிப் பொழுதினில் - இயல்பெற
அழகு விளங்க - மயிலில் வருவோனே
மயிலில் வலம் வந்தவனே - இமையவர் பரவி அடிதொழ
தேவர்கள் போற்றி உன் திருவடிகளைத் தொழ - அவுணர் மடிவுற விடுவது
அசுரர்கள் மடியும்படியாக செலுத்திய - ஒருவேலா
ஒப்பற்ற வேலாயுதனே - வழுதியர் தமிழின்
பாண்டிய மன்னர்களால் விருத்தி செய்யப்பட்ட தமிழில் - ஒருபொரு ளதனை
ஒப்பற்ற அகப்பொருள் இலக்கணத்தை - வழிபட மொழியு
வணங்கி வேண்ட விளக்கிய (திருவிளையாடற் புராணத்தில் வரும் உருத்திரசன்மன் [முருக அம்சம்] - கதை) - முருகேசா
முருகேசனே - மலரடி பணியு மடமகள்
உன் மலர்ப்பதங்களை வணங்கும் இந்த அறியாமகள் - பசலை மயல்கொடு தளர்வ(து)
காமத்தால் வரும் பசலை நோய் கொண்டு மோகத்தால் தளர்ந்து போவது (இது தாய் மகளுக்காகச் சொல்வது) - அழகோதான்?
நியாயமாகுமா? - முழுகிய புனலில் இனமணி
நீரில் மூழ்கி அதனின்று பல மணிகளும் - தரள முறுகிடு பவள மிகவாரி
முத்துக்களும், பின்னிய பவளங்களும் நிரம்ப வாரி - முறையொடு குறவர் மடமகள் சொரியு
விற்கக் கூவும் குறப்பெண்கள் நிறைந்த - முதுமலை அழக குருநாதா
முதுமலையின் (விருத்தாசலம்) அழகா, குருநாதனே - பழகிய வினைகள் பொடிபட
என்னுடன் வந்து பழகிய வினைகள் பொடியாக - அருளில் படிபவர் இதய முறுகோவே
நின்னருளில் தோய்பவர் இதயத்தில் வீற்றிருக்கும் அரசனே - பருவரை துணிய
பெருத்த கிரெளஞ்சமலை பிளந்து போகும்படி - ஒருகணை தெரிவ
ஒப்பற்ற ஆயுதத்தை தேர்ந்தெடுத்துச் செலுத்தியவனே - பலமலை உடைய பெருமாளே.
பல மலைகளுக்கும் அதிபனான பெருமாளே.



