திருப்புகழ் · 303அதிரும் கழல் (குன்றுதோறாடல்)

adhirumkazhal

தனனந் தனன தந்த ...... தனதான
தனனந் தனன தந்த ...... தனதான
அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்
அபயம் புகுவ தென்று ...... நிலைகாண
இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்
இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • அதிருங் கழல்ப ணிந்து உன் அடியேன்
    ஒலிக்கும் வீரக் கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது அடிமையாகிய யான்
  • உன் அபயம் புகுவ தென்று
    நீயே புகலிடம் என்று
  • நிலைகாண
    மெய்ந் நிலையை யான் காணுமாறு
  • இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
    எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து
  • இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே
    துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக.
  • எதிர் அங்கொருவர் இன்றி
    தமக்கு சமானம் ஒருவருமில்லாமல்
  • நடமாடும் இறைவன் தனது
    ஆனந்தத் தாண்டவம் செய்யும் சிவபெருமானுடைய
  • பங்கில் உமை பாலா
    இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக்குமாரனே,
  • பதியெங்கிலுமிருந்து விளையாடி
    திருத்தலங்கள் எங்கிலும் இருந்து திருவிளையாடல்கள் புரிந்து,
  • பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே.
    பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits