திருப்புகழ் · 305தறையின் மானுடர் (குன்றுதோறாடல்)

thaRaiyinmAnudar

தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன தந்ததான
தறையின் மானுட ராசையி னால்மட
லெழுது மாலருள் மாதர்கள் தோதக
சரசர் மாமல ரோதியி னாலிரு ...... கொங்கையாலுந்
தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
சவலை நாயடி யேன்மிக வாடிம ...... யங்கலாமோ
பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
பவன பூரக வேகிக மாகிய ...... விந்துநாதம்
பகரொ ணாதது சேரவொ ணாதது
நினையொ ணாதது வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம் ...... வந்துதாராய்
சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
மடிய நீலக லாபம தேறிய
திறல்வி நோதச மேளத யாபர ...... அம்புராசித்
திரைகள் போலலை மோதிய சீதள
குடக காவிரி நீளலை சூடிய
திரிசி ராமலை மேலுறை வீரகு ...... றிஞ்சிவாழும்
மறவர் நாயக ஆதிவி நாயக
ரிளைய நாயக காவிரி நாயக
வடிவி னாயக ஆனைத னாயக ......எங்கள்மானின்
மகிழு நாயக தேவர்கள் நாயக
கவுரி நாயக னார்குரு நாயக
வடிவ தாமலை யாவையு மேவிய ...... தம்பிரானே.

பத உரை · word meanings

  • தறையின் மானுடர் ஆசையினால் மடல் எழுது(ம்) மால்அருள் மாதர்கள்
    இந்தப் பூமியில் மக்கள் காம ஆசையால் மடல்* எழுதக் கூடிய அளவுக்கு (அவர்களுக்கு) மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்கள்,
  • தோதக சரசர் மா மலர் ஓதியினால் இரு கொங்கையாலும்
    வஞ்சனையுடன் காம லீலை செய்பவர்கள், நல்ல பூக்கள் கொண்டு விளங்கும் கூந்தலாலும், இரண்டு மார்புகளாலும்,
  • தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால்
    தளர்ச்சியைக் காட்டும், மின்னலுக்கு ஒப்பான, இடையாலும், உடுத்துள்ள ஆடையாலும், நடை அழகினாலும், பேசும் இனிய பேச்சினாலும், கண்களாலும்,
  • மருள் சவலை நாய் அடியேன் மிக வாடி மயங்கலாமோ
    மயக்கம் கொள்ளும் சவலைப் பிள்ளையைப்போல, நாயினும் கீழான அடியேன், மிகவும் வாடி மயக்கம் கொள்ளலாமோ?
  • பறவையான மெய் ஞானிகள் மோனிகள்
    (ஓரிடத்தில் தங்காது) பறவைபோல எங்கும் திரிந்து உலாவும் உண்மையான ஞானிகளும், மெளன நிலை கண்டவர்களும்,
  • அணுக ஒணா வகை நீடும் இராசிய(ம்)
    அணுகுதற்குக் கூடாததாய் விலகி விளங்கும் இரகசியம்,
  • பவன பூரக(ம்) ஏகிகமாகிய விந்து நாதம்
    காற்றை (மூச்சை) பூரகமாக** அடக்குவதால் (பிராணாயாமத்தால்) ஒன்றுபடக் கூடிய சிவசக்தி தத்துவ ஒலியாய் விளங்குவதும்,
  • பகர ஒணாதது சேர ஒணாதது நினை ஒணாததுவான
    சொல்ல முடியாததும், அடைய முடியாததும், நினைக்கவும் முடியாததுமான
  • தயாபர பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய்
    கருணைப் பரம் பொருளாய், மூலப் பொருளான மனதை ஒடுக்கும் சமாதி நிலைப் பேற்றை நீ வந்து (எனக்குத்) தந்து அருள வேண்டும்.
  • சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம் அது ஏறிய
    (தேவர்களுடைய) சிறையை விடாத அசுரர்களின் படைகள் இறக்கும்படியாக, நீல நிறங் கொண்ட மயிலின் மேல் ஏறி வரும்
  • திறல் விநோத சமேள தயாபர
    வல்லமை கொண்ட விநோதனே, கருணை கலந்த மூர்த்தியே,
  • அம்புராசி திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய
    கடலின் பெரிய அலைகளைப்போல் அலைமோதி வரும் குளிர்ந்த நீருடன், குடகு நாட்டிலிருந்து வரும் காவிரி ஆற்றின் பெரிய அலைகளைக் கொண்ட
  • திரிசிரா மலை மேல் உறை வீர
    திரிசிரா மலையில் வீற்றிருக்கும் வீரனே,
  • குறிஞ்சி வாழும் மறவர் நாயக ஆதி விநாயகர் இளைய நாயக காவிரி நாயக
    மலை நிலத்தில் வாழும் வேடர்களின் நாயகனே, ஆதி கணபதிக்குத் தம்பியாகிய நாயகனே, காவிரிக்கு நாயகனே,
  • வடிவின் நாயக ஆனை தன் நாயக எங்கள் மானின் மகிழு(ம்) நாயக தேவர்கள் நாயக
    அழகுக்கு ஒரு நாயகனே, தேவயானைக்கு நாயகனே, எங்கள் மான் போன்ற வள்ளி நாயகியிடத்தே மகிழும் நாயகனே, அமரர்கள் நாயகனே,
  • கவுரி நாயகனார் குரு நாயக
    பார்வதியின் நாயகனான சிவபெருமானுக்கு குரு மூர்த்தியே,
  • வடிவதாம் மலை யாவையு(ம்) மேவிய தம்பிரானே.
    அழகிய மலைகள் எல்லாவற்றிலும் வீற்றிருந்து அருளும் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits