திருப்புகழ் · 298வட்ட வாள் தன (திருத்தணிகை)

vattavALthana

தத்தனாத் தனன தத்தனாத் தனன
தத்தனாத் தனன ...... தனதான
வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
மக்கள்தாய்க் கிழவி ...... பதிநாடு
வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
மற்றகூட் டமறி ...... வயலாக
முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
முட்டர்பூட் டியெனை ...... யழையாமுன்
முத்திவீட் டணுக முத்தராக் கசுரு
திக்குராக் கொளிரு ...... கழல்தாராய்
பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
பத்தின்வாட் பிடியின் ...... மணவாளா
பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
திச்சிதோட் புணர்த ...... ணியில்வேளே
எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி
யெட்டுமாக் குலைய ...... எறிவேலா
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள்
    வட்ட வடிவும் ஒளியும் உள்ள மார்பினைக் கொண்ட மனைவியும், அவளிடம் நான் பெற்ற மழலைச் சொல் பேசும் குழந்தைகளும்,
  • தாய்க் கிழவி பதி நாடு வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள்
    வயது முதிர்ந்த அன்னை, எனது ஊர், என் நாடு, எனக்கு உள்ள தோட்டம், வீடு, செல்வம், சம்பாதித்த பொருள்,
  • மற்ற கூட்டம் அறிவு அயலாக
    மற்ற உறவினர் கூட்டம், என் அறிவு - இவை எல்லாம் என்னை விட்டு நீங்க,
  • முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன்
    நன்றாக ஓட்டி, மிகவும் நெருங்கும் பெரிய எருமை வாகனத்தின் மேல் வரும் கால தூதராகிய மூடர்கள் (பாசக் கயிற்றால்) என்னைப் பூட்டி அழைப்பதற்கு முன்,
  • முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க
    (நான்) முக்தி வீட்டை அணுகிச் சேரவும், ஞானியர்போல் என்னை ஆக்கவும்,
  • சுருதி(க்குள்) குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய்
    வேதத்தினுள்ளும், குரா மலர்களினுள்ளும் விளங்குகின்ற உன் இரண்டு திருவடிகளைத் தந்து அருளுக.
  • பட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர
    நெற்றிப் பட்டமும், நான்கு* பெரிய தந்தங்களும், (தொங்கும்) துதிக்கையும் உடைய,
  • இபத்தின் வாள் பிடியின் மணவாளா
    (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த, ஒளி பொருந்திய பெண் யானை போன்ற நடையை உடைய (தேவயானையின்) மணவாளனே,
  • பச்சை வேய்ப் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி
    பச்சை மூங்கிலால் ஆகிய பரண் மீது (தினைப் புனத்தைக் காப்பதற்காக) நின்ற, பாமர குலத்தவர்களான வேடர்களுடைய ஊரிலிருந்த, வள்ளியின்
  • தோள் புணர் தணியில் வேளே
    தோளை அணைந்த திருத்தணிகைத் தலைவனே,
  • எட்டு(ம்) நால் கர ஒருத்தல் மாத் திகிரி எட்டும்
    தொங்கும் துதிக்கையை உடைய யானைகளும், பெரிய எட்டு மலைகளும் (கிரெளஞ்ச மலையும் குலகிரிகள் ஏழும்),
  • மாக் குலைய எறி வேலா
    நடுங்கும்படி செலுத்திய வேலனே,
  • எத்திடார்க்கு அரிய முத்த
    உன்னைப் போற்றித் துதிக்காதவர்களுக்கு அரிதான முத்தனே (பாசங்களினின்று இயல்பாகவே நீங்கியவனே),
  • பாத் தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே.
    தமிழ்ப் பாக்களால் போற்றுபவர்களுக்கு எளிதான பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits