திருப்புகழ் · 297வங்கம் பெறு (திருத்தணிகை)

vangkampeRu

தந்தந் தனதன தந்தந் தனதன
தந்தந் தனதன ...... தனதான
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை
வந்துந் தியதிரு ...... மதனாலே
வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
வஞ்சம் பதும்விடு ...... மதனாலே
பங்கம் படுமென தங்கந் தனிலுதி
பண்பொன் றியவொரு ...... கொடியான
பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
பொன்றுந் தனிமையை ...... நினையாயோ
தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
சென்றொன் றியபொழி ...... லதனூடே
தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
நின்றுந் திகழ்வொடு ...... மயிலாடப்
பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள்
என்றும் புகழ்பெற ...... மலரீனும்
பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
யென்றுஞ் செயவல ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை
    கப்பல்கள் செல்லும் கடலில் எங்கும் மாறுபட்டு ஏறி இறங்கும் அலைகள்
  • வந்து உந்தி அதிரும் அதனாலே
    வந்து வீசி இரைச்சலிடும் காரணத்தாலும்,
  • வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற
    வஞ்சகம் கொண்ட திடமான நெஞ்சனும், நெருப்புப் போன்று
  • அஞசுசஅம்பதும்விடு மதனாலே
    ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்துபவனுமான மன்மதனாலும்,
  • பங்கம் படுமெனது அங்கந் தனில் உதி
    அவமானம் உறுகின்ற என்னுடைய உடலிலிருந்து பிறந்த
  • பண்பொன்றிய ஒரு கொடியான
    நற்குணம் நிரம்பிய, ஒரு கொடி போன்ற இடையை உடைய,
  • பஞ்சொன்றிய மயில் நெஞ்சொன்றியெ அழல்
    பஞ்சு போல் மெல்லியளான, மயிலின் சாயலை உடைய என் மகள் உள்ளத்தில் சேர்ந்த காமத் தீயால்
  • பொன்றுந் தனிமையை நினையாயோ
    சாகும் நிலையிலே தனிமையோடு தவிப்பதை நீ சற்றேனும் நினைத்துப் பார்த்து அருளக்கூடாதா?
  • தெங்கந் திரளுடன் எங்குங் கதலிகள்
    தென்னை மரங்களின் கூட்டத்துடன் எங்கும் வாழைகள்
  • சென்றொன்றியபொழில் அதனூடே
    அமைந்து நிறைந்த சோலைக்குள்ளே,
  • தெந்தெந் தெனதென என்று அண்டுற அளி நின்றும்
    தெந்தெந் தெனதென என்று நெருங்கி வந்து நின்று வண்டுகள் பாடவும்,
  • திகழ்வொடு மயிலாட
    அக்கீதத்துக்கு ஏற்ப விளக்கத்துடனே மயில்கள் ஆடவும்,
  • பொங்குஞ் சுனைகளில் எங்குங் குவளைகள் என்றும் புகழ்பெற மலரீனும்
    நீர் நிறைந்த சுனைகளில் எங்கும் குவளைகள் எக்காலத்திலும் புகழ்பெறும்படி மலர்களைத் தருகின்ற
  • பொன் தென் தணிகையில் நின்றங்கு
    அழகிய தெற்கிலே உள்ள திருத்தணிகையில் நின்றருளி,
  • எழுபுவியென்றுஞ் செயவல பெருமாளே.
    ஏழு உலகங்களையும் என்றைக்கும் படைக்கவல்ல பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits