திருப்புகழ் 299 வரிக் கலையின் (திருத்தணிகை)

தனத்ததன தனதான தனத்ததன தனதான
தனத்ததன தனதான ...... தனதான
வரிக்கலையி  னிகரான  விழிக்கடையி  லிளைஞோரை 
மயக்கியிடு  மடவார்கள்  ......  மயலாலே 
மதிக்குளறி  யுளகாசு  மவர்க்குதவி  மிடியாகி 
வயிற்றிலெரி  மிகமூள  ......  அதனாலே 
ஒருத்தருட  னுறவாகி  ஒருத்தரொடு  பகையாகி 
ஒருத்தர்தமை  மிகநாடி  ......  யவரோடே 
உணக்கையிடு  படுபாவி  எனக்குனது  கழல்பாட 
உயர்ச்சிபெறு  குணசீல  ......  மருள்வாயே 
விரித்தருண  கிரிநாத  னுரைத்ததமி  ழெனுமாலை 
மிகுத்தபல  முடனோத  ......  மகிழ்வோனே 
வெடித்தமணர்  கழுவேற  ஒருத்திகண  வனுமீள 
விளைத்ததொரு  தமிழ்பாடு  ......  புலவோனே 
செருக்கியிடு  பொருசூரர்  குலத்தையடி  யறமோது 
திருக்கையினில்  வடிவேலை  ......  யுடையோனே 
திருக்குலவு  மொருநீல  மலர்ச்சுனையி  லழகான 
திருத்தணிகை  மலைமேவு  ......  பெருமாளே. 
  • வரிக்கலையி னிகரான
    வரிகளோடு கூடிய கலைமானுக்குச் சமமான
  • விழிக்கடையில் இளைஞோரை
    கடைக்கண் பார்வையால் இளைஞர்களை
  • மயக்கிடு மடவார்கள் மயலாலே
    மயக்கக்கூடிய பெண்களின் மையலாலே
  • மதிக்குளறி யுளகாசும்
    அறிவு தடுமாறி, கையிலுள்ள பொருள் அத்தனையும்
  • அவர்க்கு உதவி மிடியாகி
    அப்பெண்களுக்கே கொடுத்து வறுமையை அடைந்து
  • வயிற்றிலெரி மிகமூள
    வயிற்றில் தீ மிகவும் மூண்டு எரியவும்,
  • அதனாலே ஒருத்தருடன் உறவாகி
    அதன் காரணமாக ஒருவருடன் நட்பாகியும்,
  • ஒருத்தரொடு பகையாகி
    இன்னொருவருடன் பகையாகியும்,
  • ஒருத்தர்தமை மிகநாடி
    வேறு ஒருவரை மிகவும் விரும்பியும்
  • அவரோடே உணக்கையிடு
    அவர்களோடு சேர்ந்து வாட்டத்தை அடையும்
  • படுபாவி எனக்குனது கழல்பாட
    படுபாவியாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட
  • உயர்ச்சிபெறு குணசீலம்
    உயர்வு பெற்ற நற்குண நல்லொழுக்கத்தை
  • அருள்வாயே
    தந்தருள்வாயாக.
  • விரித்து அருண கிரிநாதன்
    அருணகிரிநாதன் என்ற இந்த அன்பன் விரிவாக
  • உரைத்த தமிழெனு மாலை
    கூறிய தமிழினால் ஆன இந்தத் திருப்புகழ் மாலையை
  • மிகுத்தபல முடனோத மகிழ்வோனே
    நிரம்பிய ஆற்றலுடன் பாட உள்ளம் மகிழ்பவனே,
  • வெடித்து அமணர் கழுவேற
    சமணர்கள் உடல் வெடித்துக் கழுமரத்தில் ஏறவும்,
  • ஒருத்தி கணவனும் மீள
    ஒப்பற்ற மங்கையர்க்கரசியின் கணவனாகிய பாண்டியன் (சமணப் படுகுழியிலிருந்து) உயிர் மீளவும்,
  • விளைத்ததொரு தமிழ்பாடு
    அற்புதங்கள் விளைத்த தேவாரத் தமிழ் மறையைப் பாடிய
  • புலவோனே
    ஞான பண்டிதனாக அவதரித்த திருஞானசம்பந்தனே,
  • செருக்கியிடு பொருசூரர்
    ஆணவத்தோடு போர் செய்ய வந்த சூராதி அசுரர்களின்
  • குலத்தையடி யறமோது
    குலத்தையே வேரோடு அழியுமாறு தாக்கிய
  • வடிவேலை திருக்கையினில் உடையோனே
    கூர்வேலினை அழகிய கரத்தில் ஏந்தியவனே,
  • திருக்குலவும்
    அழகு குலவி விளங்குவதும்,
  • ஒருநீல மலர்ச்சுனையில்
    ஒப்பற்ற நீலோற்பல மலரை மலரும் சுனையை உடையதும் ஆன
  • அழகான திருத்தணிகை மலைமேவு பெருமாளே.
    அழகிய திருத்தணிகை மலை மீதுள்ள பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com