தனதன தானம் தனதன தானம்
தனதன தானம் ...... தனதான
கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங் ...... கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ் ...... சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின் ...... றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
குளிர்தொடை நீதந் ...... தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் ...... தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந் ...... திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும் ...... பெருமாளே.
- கலைமடவார்தம்
மேகலை முதலிய ஆபரணங்கள் அணிந்த மாதர்களின் - சிலையதனாலும்
வசைப்பேச்சின் ஒலியினாலும், - கனவளையாலும்
பெருத்த சங்கின் பேரொலியினாலும், - கரைமேலே
கரையின் மேல் இருந்து கூவுகின்ற - கருகிய காளம்
மன்மதனுடைய எக்காளமாகிய கருங் குயிலின் ஓசையாலும், - பெருகிய தோயம்
பரந்து விரிந்த கடலின் ஓசையாலும், - கருது அலையாலும்
சிந்தனை அலைகளாலும், - சிலையாலுங் கொலைதரு காமன்
கரும்பு வில்லால் கொலை செய்யவல்ல மன்மதன் - பலகணையாலும்
வீசுகின்ற பல மலர் அம்புகளினாலும், - கொடியிடையாள்
கொடி போன்ற மெல்லிய இடையாளாகிய இத்தலைவி - நின்றழியாதே
உன் பிரிவுத் துயரால் கவலைப்பட்டு நின்று அழிவுறாமல், - குரவணி நீடும் புயம் அணி
குரா மலர்களைத் தரித்துள்ள நீண்ட புயங்களில் அணிந்துள்ள - நீபங் குளிர்தொடை
கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையை - நீதந்து அருள்வாயே
நீ தலைவிக்குத் தந்து அருள்வாயாக. - சிலைமகள் நாயன்
மலையரசன் மகள் பார்வதி நாயகன் சிவனும், - கலைமகள் நாயன்
கலைமகள் சரஸ்வதியின் நாயகன் பிரம்மனும், - திருமகள் நாயன்
லக்ஷ்மியின் நாயகன் திருமாலும் - தொழும்வேலா
வணங்கி வழிபடுகின்ற* வேலாயுதனே, - தினைவன மானும்
தினைப் புனத்திலே காவல் காத்த மான் போன்ற வள்ளியும், - கநவன மானும்
விண்ணுலகில் மேன்மையான கற்பக வனத்தில் வளர்ந்த மான் போன்ற தேவயானையும் - செறிவுடன் மேவும் திருமார்பா
மனம் நிறைந்து அணைக்கும் திருமார்பினனே, - தலமகள் மீது எண் புலவர் உலாவும்
நிலமகளாகிய இவ்வுலகின் மீது மதிப்பிற்குரிய புலவர்கள் உலாவும் - தணிகையில் வாழ்செங்கதிர்வேலா
திருத்தணிகையில் வாழும் ஒளி படைத்த வேலினை உடையவனே, - தனியவர் கூருந் தனிகெட
உலக பாசத்தை நீக்கிய உன் அடியார்களின் மிக்க தனிமை நீக்கி அருளி, - நாளுந் தனிமயிலேறும் பெருமாளே.
நாள்தோறும் ஒப்பற்ற மயிலின் மீது எழுந்தருளும் பெருமாளே.