தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்
தனனத்த தத்தனத் ...... தனதான
கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்
கடவுட்ப்ர திஷ்டைபற் ...... பலவாகக்
கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்
கருவிற்பு கப்பகுத் ...... துழல்வானேன்
சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
கசரப்ப ளிக்கெனப் ...... பொருள்தேடி
சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநின்
சரணப்ர சித்திசற் ...... றுணராரோ
குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
குமுறக்க லக்கிவிக் ...... ரமசூரன்
குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்
துதிரத்தி னிற்குளித் ...... தெழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
றுவலைச்சி மிழ்த்துநிற் ...... பவள்நாணத்
தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்
சுருதித்த மிழ்க்கவிப் ...... பெருமாளே.
- கவடுற்ற சித்தர்
வஞ்சக எண்ணம் கொண்ட சித்தர்களும், - சட் சமயப்ர மத்தர்
ஆறு* சமயங்களையும் மேற்கொண்டு வாதம் செய்யும் வெறியர்களும், - நற் கடவுட்ப்ர திஷ்டைபற்பலவாகக் கருதி
சிறந்த கடவுளர்களின் பிரதிஷ்டை என்ற பெயரில் பலப்பல வகையாக யோசித்து, - பெயர்க்குறித்து
அந்தக் கடவுளருக்குப் பெயர்களைக் குறிப்பிட்டு வைத்து, - உருவர்க்கம் இட்டு
உருவ அமைப்புக்களை (சிலை, யந்திரம் முதலியவற்றில் வடித்து) ஏற்படுத்தி, - இடர்க் கருவிற்புகப் பகுத்து உழல்வானேன்
துன்ப மயமான கருவிலே புகுவதற்குக் காரணமான பிரிவினை மனப்பான்மையுடன் ஏன் அலைந்து திரிகிறார்கள்? - சவடிக்கு இலச்சினைக்கு இருகைச் சரிக்கும்
பொன் சரட்டில் கோத்த சங்கிலிக்கும், முத்திரை மோதிரத்துக்கும், இரண்டு கைகளிலும் அணியும் வளையல்களுக்கும், - மிக்க சரப்பளிக்கு எனப் பொருள்தேடி
மேலான வைர அட்டிகைக்கும் என்று பெண்களுக்குத் தரும் நகைகளுக்காகப் பொருளைத் தேடிய மக்கள், - சகலத்தும் ஒற்றைபட்டு அயல்பட்டு நிற்குநின்
அனைத்திலும் ஒன்றுபட்டுக் கலந்து, அதேசமயம் கலவாமல் வேறுபட்டு நிற்கும் உனது - சரணப்ரசித்தி சற்றுணராரோ
திருவடிகளின் பெருமையைச் சற்றேனும் உணரமாட்டார்களோ? - குவடு எட்டும் அட்டு
(கிரெளஞ்சகிரி, சூரனின் ஏழு குல மலைகள் ஆகிய) எட்டு மலைகளையும் அழித்து, - நெட்டு உவரிக்கணத்தினைக் குமுறக் கலக்கி
பரந்த கடல்களின் கூட்டத்தை ஒலி செய்யும்படி கலக்கி, - விக்ரமசூரன் குடலைப்புயத்திலிட்டு
வீரம் நிறைந்த சூரனின் குடலைத் தோளில் மாலையாகத் தரித்து, - உடலைத்தறித்து உருத்து உதிரத்தினிற்குளித்து எழும்வேலா
அவனது உடலைப் பிளந்து, கோபித்து, அவனுடைய ரத்தத்தில் குளித்து எழுந்த வேலாயுதத்தை உடையவனே, - சுவடுற்ற அற்புதக் கவலைப்புனத்தினில்
வள்ளியின் திருவடிச் சுவடுகள் பதிந்த அற்புதமான தினைப்புனத்தில், - துவலைச்சிமிழ்த்து நிற்பவள்நாணத் தொழுதெத்து முத்த
உதிரிப் பூக்களை மாலையாகக் கட்டி அணிந்து நின்ற வள்ளி நாணும்படியாக அவளைத் தொழுது புகழ்ந்த முக்தனே, - பொற் புரிசைச்செருத்தணி
அழகிய மதில்கள் சூழ்ந்த திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும், - சுருதித் தமிழ்க்கவிப் பெருமாளே.
வேதமாகிய தேவாரத் தமிழ்க் கவிதைகளைத் தந்த (திருஞான சம்பந்தப்) பெருமாளே.