திருப்புகழ் 255 கரிக்குழல் விரித்தும் (திருத்தணிகை)

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் ...... தனதான
கரிக்குழல்  விரித்தும்  புறக்கயல்  விழித்துங் 
கரிக்குவ  டிணைக்குந்  ......  தனபாரக் 
கரத்திடு  வளைச்சங்  கிலிச்சர  மொலித்துங் 
கலைத்துகில்  மினுக்யும்  ......  பணிவாரைத் 
தரித்துள  மழிக்குங்  கவட்டர்க  ளிணக்கந் 
தவிர்த்துன  துசித்தங்  ......  களிகூரத் 
தவக்கடல்  குளித்திங்  குனக்கடி  மையுற்றுன் 
தலத்தினி  லிருக்கும்  ......  படிபாராய் 
புரத்தையு  மெரித்தங்  கயத்தையு  முரித்தொண் 
பொடிப்பணி  யெனப்பன்  ......  குருநாதா 
புயப்பணி  கடப்பந்  தொடைச்சிக  ரமுற்றின் 
புகழ்ச்சிய  முதத்திண்  ......  புலவோனே 
திரட்பரி  கரிக்கும்  பொடிப்பட  வுணர்க்குந் 
தெறிப்புற  விடுக்குங்  ......  கதிர்வேலா 
சிறப்பொடு  குறப்பெண்  களிக்கும்வி  சயத்தென் 
திருத்தணி  யிருக்கும்  ......  பெருமாளே. 
  • கரிக் குழல் விரித்தும் புறக் கயல் விழித்தும்
    கரிய நிறம் உள்ள கூந்தலை விரித்தும், வெளித் தோன்றும் கயல் மீனை ஒத்த கண்களை விழித்தும்,
  • கரிக் குவடு இணைக்கும் தன பாரக் கரத்து இடு வளைச் சங்கிலிச் சரம் ஒலித்தும்
    யானை போன்றும் மலை போன்றும் உள்ள மார்பகங்களை உடையவராக, கைகளில் அணிந்துள்ள வளையல்களையும் பொன் சங்கிலி மாலைகளையும் ஒலி செய்தும்,
  • கலைத் துகில் மினுக்(கி)யும் பணிவாரைத் தரித்து உளம் அழிக்கும்
    மேகலை அணிந்துள்ள புடவையை பள பளப்புடன் உடுத்தும், தம்மைப் பணிந்து ஒழுகும் ஆடவர்களை ஏற்று அவர்களின் மனத்தை அழிக்கும்
  • கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து
    வஞ்சகர்களாகிய விலைமாதர்களின் தொடர்பை விலக்கி,
  • உனது சித்தம் களி கூரத் தவக் கடல் குளித்து இங்கு உனக்கு அடிமை உற்று
    உனது மனம் மகிழ்ச்சி அடைய, தவக் கடலில் மூழ்கிக் குளித்து இப்பொழுது உனக்கு அடிமை பூண்டு,
  • உன் தலத்தினில் இருக்கும்படி பாராய்
    உன் தலமாகிய திருத்தணிகையில் இருக்கும்படியான பாக்கியத்தைக் கண் பார்த்து அருளுக.
  • புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடிப் பணி என் அப்பன் குருநாதா
    திரி புரங்களையும் எரித்து, அழகிய யானையையும் தோல் உரித்து, ஒளி வீசும் திருநீற்றை ஆபரணமாகக் கொண்ட என் தந்தையாகிய சிவ பெருமானின் குரு நாதனே,
  • புயப் பணி கடப்பம் தொடைச் சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுதத் திண் புலவோனே
    தோளில் ஆபரணமாக கடப்ப மாலையை அணிந்து, மேலான தன்மையை உற்று இனிய புகழ் அமுதத்தைக் கொண்ட திண்ணிய புலவனே,
  • திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்பு உற விடுக்கும் கதிர் வேலா
    கூட்டமான குதிரைகளும், யானைகளும் பொடிபடவும், அசுரர்கள் சிதறுண்ணவும் வேலைச் செலுத்திய ஒளி வேலனே,
  • சிறப்பொடு குறப் பெண் களிக்கும் விசயத் தென் திருத்தணி இருக்கும் பெருமாளே.
    சிறப்புடனே குறப் பெண்ணாகிய வள்ளி மகிழ்கின்ற வெற்றியும் அழகும் கொண்ட திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com