திருப்புகழ் 254 கடற்செகத் தடக்கி (திருத்தணிகை)

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
கடற்செகத்  தடக்கிமற்  றடுத்தவர்க்  கிடுக்கணைக் 
கடைக்கணிற்  கொடுத்தழைத்  ......  தியல்காமக் 
கலைக்கதற்  றுரைத்துபுட்  குரற்கள்விட்  டுளத்தினைக் 
கரைத்துடுத்  தபட்டவிழ்த்  ......  தணைமீதே 
சடக்கெனப்  புகத்தனத்  தணைத்திதழ்க்  கொடுத்துமுத் 
தமிட்டிருட்  குழற்பிணித்  ......  துகிரேகை 
சளப்படப்  புதைத்தடித்  திலைக்குணக்  கடித்தடத் 
தலத்தில்வைப்  பவர்க்கிதப்  ......  படுவேனோ 
இடக்கடக்  குமெய்ப்பொருட்  டிருப்புகழ்க்  குயிர்ப்பளித் 
தெழிற்றினைக்  கிரிப்புறத்  ......  துறைவேலா 
இகற்செருக்  கரக்கரைத்  தகர்த்தொலித்  துரத்தபச் 
சிறைச்சியைப்  பசித்திரைக்  ......  கிசைகூவும் 
பெடைத்திரட்  களித்தகுக்  குடக்கொடிக்  கரத்தபொய்ப் 
பிதற்றறப்  படுத்துசற்  ......  குருவாய்முன் 
பிறப்பிலிக்  குணர்த்துசித்  தவுற்றநெற்  பெருக்குவைப் 
பெருக்குமெய்த்  திருத்தணிப்  ......  பெருமாளே. 
  • கடல் செகத்து அடக்கி மற்று அடுத்தவர்க்கு இடுக்கணைக் கடைக் க(ண்)ணில் கொடுத்து அழைத்து இயல் காமக் கலைக் கதற உரைத்து
    கடலையும் உலகையும் தம் கீழ் அடங்கும்படியாக அடக்கி, தம்மை நாடி வந்தவர்களுக்கு துன்பத்தை தமது கடைக் கண்ணால் கொடுத்து, அவர்களை அழைத்து மன்மத காம நூல்களை உரக்க எடுத்துச் சொல்லி,
  • புட் குரல்கள் விட்டு உ(ள்)ளத்தினைக் கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து அணைமீதே சடக்கெனப் புகத் தனத்து அணைத்து இதழ்க் கொடுத்து முத்தம் இட்டு
    தொண்டையில் வேறு வேறு புட்குரல்களைக் காட்டி, மனதைக் கரைத்து, உடுத்துள்ள பட்டுப் புடவையை அவிழ்த்துப் படுக்கை மேல் வேகமாகச் சேர்ந்து, மார்பகத்தின் மீது அணைத்து, இதழூறலை அளித்து முத்தம் தந்து,
  • இருள் குழல் பிணித்து உகிர் ரேகை சளப்படப் புதைத்து அடித்து இலைக் குணக் கடித்தடத் தலத்தில் வைப்பவர்க்கு இதப் படுவேனோ
    கரிய கூந்தலைக் கட்டி முடித்து, நகக் குறியை மூர்க்கத்துடன் புதைய அழுத்தி, அரச இலை போன்ற பெண்குறியில் (வந்தவர்களைச்) சேர்ப்பவர்களுடன் இன்பம் அனுபவித்துக் கொண்டே இருப்பேனோ?
  • இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினைக் கிரிப் புறத்து உறைவேலா
    ஐம்புலன்களின் சேட்டை முதலான முரண்களை அடக்கும் சத்திய வாசகப் பொருளைக் கொண்ட உனது திருப் புகழுக்கு உயிர் நிலை போன்ற பெரிய பலத்தைத் தந்து, அழகிய தினைப்புனம் உள்ள வள்ளி மலையில் வீற்றிருக்கும் வேலனே,
  • இகல் செருக்கு அரக்கரைத் தகர்த்து ஒலித்து உரத்த பச்ச இறைச்சியைப் பசித்த இரைக்கு இசை கூவும் பெடைத் திரட்கு அளித்த குக்குடக் கொடி கரத்த
    போரில் கர்வத்துடன் வந்த அசுரர்களை அழித்து, ஒலியுடன் மிகப் பச்சையான மாமிசத்தை பசியுடன் இரை வேண்டும் என்று கேட்கும் குரலுடன் கூவுகின்ற பெட்டைக் கோழிக் கூட்டங்களுக்குக் கொடுத்த, சேவல் கொடியை கையில் ஏந்தியவனே,
  • பொய்ப் பிதற்றல் அறப் படுத்து சற் குருவாய் முன் பிறப்பிலிக்கு உணர்த்து சித்த
    பொய்யான பிதற்றல் மொழிகளை அறவே களைந்து, குருநாதராக வந்து முன்பு ஒரு நாள் பிறப்பு இல்லாத சிவபெருமானுக்கு போதித்த சித்த மூர்த்தியே,
  • உற்ற நெல் பெருக் குவைப் பெருக்கு மெய்த் திருத்தணிப் பெருமாளே.
    நெல்லின் பெரிய குவியல்களை மேலும் பெருக வைக்கும் உண்மை வாய்ந்த திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com