தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான
கச்சணி யிளமுலை முத்தணி பலவகை
கைச்சரி சொலிவர ...... மயல்கூறிக்
கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்
கட்செவி நிகரல்குல் ...... மடமாதர்
இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி
யெச்சமி லொருபொரு ...... ளறியேனுக்
கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை
யிப்பொழு தணுகவு ...... னருள்தாராய்
கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை
நச்சியெ திருடிய ...... குறையால்வீழ்
குற்கிர வினியொடு நற்றிற வகையறி
கொற்றவு வணமிசை ...... வருகேசன்
அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில்
அச்சுதன் மகிழ்தரு ...... மருகோனே
அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை
யப்பனெ யழகிய ...... பெருமாளே.
- கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கைச் சரி
சொலி வர மயல் கூறி
கச்சு அணிந்த இளைய மார்பகங்கள் மீது முத்தாலான ஆபரணங்கள் ஜொலிக்க, பல விதமான கை வளையல்கள் பிரகாசிக்க, காம இச்சைகளை வெளியிட்டு, - கைப் பொருள் கவர் தரு மைப் பயில் விழியினர் கண் செவி
நிகர் அல்குல் மடமாதர் இச்சையில் உருகிய கச்சையன்
அறிவிலி
(வந்த ஆடவர்களின்) கைப் பணத்தைத் திருடும் மை தீட்டிய கண்களை உடையவர், பாம்பின் படத்தை ஒத்துள்ள நிதம்பத்தை உடைய விலைமாதர்கள் மீது, ஆசையால் உள்ளமும் உடலும் உருகிய தழும்பினன், அறிவில்லாதவன் நான். - எச்சம் இல் ஒரு பொருள் அறியேனுக்கு இப்புவி மிசை கமழ்
பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்
தாராய்
குறைவில்லாத ஒப்பற்ற பரம் பொருளை அறியாதவனான எனக்கு, இந்த உலகில் மணமுள்ள அழகான மலர் போன்ற திருவடி இணைகளை இப்போதே கிடைக்கும்படி உன் திருவருளைத் தந்தருள்வாய். - கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர் தனை நச்சியெ
திருடிய குறையால் வீழ் குற்கிரவினி யொடு நல் திற வகை
அறி கொற்றவ உவண(ம்) மிசை வரு கேச(வ)ன்
இடையர் குலத்தைச் சேர்ந்தவர் வீட்டில் இடைச்சியர்கள் சேர்த்து வைத்திருந்த தயிரை விரும்பி திருடிய குறைப்பாட்டினால் (கட்டப்பட்டுக்) கிடந்திருந்த உரலோடு இழுத்துச் சென்று நல்ல ஒரு பாக்கியச் செயலை* அறிந்து செய்த அரசன், கருட வாகனத்தில் வருகின்ற திருமால், - அச் சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில் அச்சுதன்
மகிழ் திரு மருகோனே
அந்த அமுதம் நிறைந்த திருப்பாற் கடலில் விஷம் மிகுந்த பாம்பாகிய ஆதிசேஷன் மீது உறங்கும் திருமால் மகிழும் மருகனே, - அப்பு அணி சடை அரன் மெச்சிய தணி மலை அப்பனெ
அழகிய பெருமாளே.
கங்கை நீரைத் தரித்த சடையை உடைய சிவபெருமான் மெச்சிய திருத்தணிகை மலையில் இருக்கும் அப்பனே, அழகிய பெருமாளே.