தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன ...... தனதான
ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர
ரூப மொத்தநி றத்திகள் விற்கணை
யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை ...... யமுதோடே
ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர
லோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள்
ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள் ...... மணம்வீசும்
மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி
வார ழுத்துத னத்திகள் குத்திர
மால்வி ளைத்தும னத்தைய ழித்திடு ...... மடமாதர்
மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை
வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு
மாத ருக்குவ ருத்தமி ருப்பது ...... தணியாதோ
வேலை வற்றிட நற்கணை தொட்டலை
மீத டைத்துத னிப்படை விட்டுற
வீற ரக்கன்மு டித்தலை பத்தையு ...... மலைபோலே
மீத றுத்திநி லத்தில டித்துமெய்
வேத லக்ஷுமி யைச்சிறை விட்டருள்
வீர அச்சுத னுக்குந லற்புத ...... மருகோனே
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில
வாரி முத்துந கைக்கொடி சித்திர
நீல ரத்தின மிக்கஅ றக்கிளி ...... புதல்வோனே
நீற திட்டுநி னைப்பவர் புத்தியில்
நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு
நீல முற்றதி ருத்தணி வெற்புறை ...... பெருமாளே.
- ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள்
குண்டலங்களைக் காதணியாக அணிந்தவர்கள், அழகிய உருவம் வாய்ந்த நிறத்தை உடையவர்கள், - வில் கணையோடு இணைத்த விழிச்சிகள் சர்க்கரை
அமுதோடே ஊறி ஒத்த மொழிச்சிகள்
வில் போன்ற புருவங்களும், அம்பு போன்ற கண்களும் உடையவர்கள், சர்க்கரை அமுதுடன் ஊறின சுவையைப் போன்ற (இனிய) பேச்சினை உடையவர்கள், - புட் குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள் ஓசை பெற்ற
துடிக்கொள் இடைச்சிகள்
பறவைகளின் குரலுடன் மெல்லப் பேசும் கண்டத்தை உடையவர்கள், ஒலி செய்யும் உடுக்கை போன்ற இடையை உடையவர்கள், - மணம் வீசும் மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார்
அழுத்து தனத்திகள்
வாசனை வீசுகின்ற பூ மாலை அணிந்த கழுத்தை உடையவர்கள், முத்து மாலை அணிந்த, ரவிக்கையை அழுத்துகின்ற, மார்பகங்களை உடையவர்கள், - குத்திர மால் விளைத்து மனத்தை அழித்திடு(ம்) மட மாதர்
வஞ்சகம் நிறைந்த காம மயக்கத்தை உண்டாக்கி ஆடவர்கள் மனதைப் பாழாக்கும் விலைமாதர்கள். - மார்பு அசைத்து மருட்டி இருட்டு அறை வா எனப் பொருள்
பற்றி முயக்கிடு(ம்) மாதருக்கு வருத்தம் இருப்பது
தணியாதோ
மார்பை அசைத்து மோக மயக்கத்தை உண்டு பண்ணி, இருண்ட படுக்கை அறைக்கு வரும்படி அழைத்து, கைப் பொருளை அபகரித்துத் தழுவிடும் விலைமாதரருக்காக நான் வேதனைப்படுவது தவிராதோ? - வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து
தனிப் படை விட்டுற
கடல் வற்றிப் போகும்படி சிறந்த பாணத்தைச் செலுத்தி, கடலின் மேல் அணை இட்டு ஒப்பற்ற வானரப்படையைச் செலுத்தும்படிச் செய்து, - வீறு அரக்கன் முடித்தலை பத்தையும் மலை போலே மீது
அறுத்து நிலத்தில் அடித்து
கர்வம் கொண்ட இராவணன் முடி தரித்த பத்துத் தலைகளையும் மலை விழுவது போல மேலே அறுத்து தரையில் வீழ்த்தி, - மெய் வேத லக்ஷுமியைச் சிறை விட்டு அருள் வீர
அச்சுதனுக்கு நல் அற்புத மருகோனே
சத்திய வேத சொரூபியான லக்ஷ்மிதேவியாகிய சீதையை சிறையினின்றும் விடுவித்து அருளிய வீரம் பொருந்திய ராமருக்குச் சிறந்த மருகனே. - நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்து நகைக் கொடி
சித்திர நீல ரத்தின மிக்க அறக் கிளி புதல்வோனே
கரு நிறம் கொண்டவள், பரிசுத்தமானவள், குணம் கடந்தவள், கடலின்றும் எடுத்த முத்து போன்ற தூயவள், ஒளி வீசும் பற்களை உடையவள், அழகிய நீல ரத்தின அணியைக் கொண்டவள், தருமக் கிளி ஆகிய பார்வதியின் மகனே, - நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து
அருள் சற்குரு
திருநீறு அணிந்து நினைக்கின்றவர்களின் மனதில் நிறைய அன்பை அளித்திடும் சற்குருநாதனே, - நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை பெருமாளே.
நீலோற்பல மலர்கள் நிறைந்த திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.