திருப்புகழ் 249 எனக்கென யாவும் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
எனக்கென  யாவும்  படைத்திட  நாளும் 
இளைப்பொடு  காலந்  ......  தனிலோயா 
எடுத்திடு  காயந்  தனைக்கொடு  மாயும் 
இலச்சையி  லாதென்  ......  பவமாற 
உனைப்பல  நாளுந்  திருப்புக  ழாலும் 
உரைத்திடு  வார்தங்  ......  குளிமேவி 
உணர்த்திய  போதந்  தனைப்பிரி  யாதொண் 
பொலச்சர  ணானுந்  ......  தொழுவேனோ 
வினைத்திற  மோடன்  றெதிர்த்திடும்  வீரன் 
விழக்கொடு  வேள்கொன்  ......  றவனீயே 
விளப்பென  மேலென்  றிடக்கய  னாரும் 
விருப்புற  வேதம்  ......  புகல்வோனே 
சினத்தொடு  சூரன்  தனைக்கொடு  வேலின் 
சிரத்தினை  மாறும்  ......  முருகோனே 
தினைப்புன  மோவுங்  குறக்கொடி  யோடுந் 
திருத்தணி  மேவும்  ......  பெருமாளே. 
  • எனக்கென யாவும் படைத்திட
    எனக்கென்றே எல்லாம் சேகரிக்க வேண்டி
  • நாளும் இளைப்பொடு
    தினந்தோறும் இளைப்பு உண்டாகும்படியாக
  • காலந் தனிலோயா
    பலகாலமாய் ஓய்ச்சல் இல்லாமல்
  • எடுத்திடு காயத் தனைக்கொடு
    எடுக்கின்ற தேகங்களுடன் பிறந்து
  • மாயும்
    (பின்னர் அவை) இறந்து போகும்
  • இலச்சை இலாதென் பவமாற
    வெட்கம் இல்லாத என் பிறப்பு ஓய்வு பெற,
  • உனைப்பல நாளுந் திருப்புகழாலும் உரைத்திடுவார்
    உன்னை பலகாலமும் திருப்புகழ் பாடிப் புகழ்கின்றவர்கள்
  • தங் குளிமேவி
    அவர்களது இருப்பிடம் சென்றடைந்து
  • உணர்த்திய போதந் தனைப்பிரியாது
    விளக்கும் அறிவுரையை விட்டுவிலகாது
  • ஒண்பொலச் சரண் நானுந் தொழுவேனோ?
    ஒளி பொருந்திய உன் திருவடியை நான் தொழும் பாக்கியம் பெறுவேனோ?
  • வினைத்திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன்
    தன் தொழிலில் திறமையுடன் அன்றொருநாள் எதிர்த்துவந்து அம்பு எய்த வீரனாம் (மன்மதன்)
  • விழக்கொடு வேள் கொன்றவன்
    வெந்து விழும்படி அந்த மன்மதனைக் கொன்றவனாகிய சிவன்
  • நீயே விளப்பென மேலென்றிட
    நீயே (பிரணவப் பொருளை) இனி உரைப்பாயாக என்று கூறிட
  • அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே
    பிரமனும் விரும்பி மகிழ, வேதப் பொருளை உரைத்தவனே
  • சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
    கோபத்துடன் சூரனைக் கடுமைகொண்ட வேலால்
  • சிரத்தினை மாறும் முருகோனே
    (அவனது) சிரத்தை அறுத்த முருகோனே
  • தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
    தினைப்புனத்தில் வாசம் செய்த குறப்பெண் வள்ளியுடன்
  • திருத்தணி மேவும் பெருமாளே.
    திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com