தனன தந்த தத்த தனன தந்த தத்த
தனன தந்த தத்த ...... தனதான
எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த
மெரிவ ழங்கு வெப்பு ...... வலிபேசா
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்கு ...... மிவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு ...... மடியாதே
மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்தி ...... தரவேணும்
நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா
நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு ...... முருகோனே
தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
செயல றிந்த ணைக்கு ...... மணிமார்பா
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.
- எனையடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம்
எனக்கு வந்த குஷ்டநோய், வினைக்கு ஈடாக மிகுந்துவரும் பித்த நோய், - எரிவழங்கு வெப்பு
கொதிப்பைத் தருகிற காய்ச்சல், - வலிபேசா இகலி நின்றலைக்கு முயலகன்
சொல்ல முடியாத வலியோடு, மாறுபட்டுத் துயர்தந்து வருத்தும் முயலகன் என்ற வலிப்புநோய், - குலைப்பொடு இருமலென்று உரைக்கும் இவையோடே
நடுக்க நோயுடன், இருமல் எனச் சொல்லப்படும் இந்த நோய்களுடனே தவித்து, - மனைகள் பெண்டிர் மக்கள் தமைநினைந்து
வீடுகள், பெண்டிர், மக்கள் என்ற இவர்களை நினைந்து வருந்தி, - சுத்த மதிம யங்கி விட்டு மடியாதே
நல்லறிவு மயங்கிப்போய் அடியேன் இறக்காதவண்ணம், - மருவியின்றெ னக்கு மரகதம் சிறக்கு மயிலில்
நீ இன்று என்முன் தோன்றி, மரகத ஒளிவீசும் பச்சைமயில் வாகனத்தில் - வந்து முத்தி தரவேணும்
வந்து எனக்கு பேரின்ப முக்தியை அருள்வாயாக. - நினைவ ணங்கு பத்தரனைவருந்தழைக்க
உன்னைத் தொழும் அடியார்கள் யாவரும் சுகத்துடன் இருக்கும்படி - நெறியில் நின்ற வெற்றி முனைவேலா
அதற்கான வழியில் அவர்களுடன் நின்று, கையில் வெற்றிபெறும் கூரிய வேலாயுதத்துடன் நிற்கும் வேலனே, - நிலைபெ றுந்திருத்த ணியில்விளங்கு
அழியாத திருத்தணிகைப் பதியில் விளங்குகின்ற - சித்ர நெடிய குன்றில் நிற்கு முருகோனே
அழகிய நெடிய குன்றத்தில் எழுந்தருளியுள்ள முருகனே, - தினைவிளங்கலுற்ற புனஇளங்குறத்தி
தினைப்பயிர் செழிப்பாக வளர்ந்துள்ள புனத்தில் வாழும் இளம் குமரியான குற வள்ளியை, - செயலறிந்து அணைக்கு மணிமார்பா
அவளுடைய அன்புச்செயலை அறிந்து அணைக்கின்ற அழகிய திருமார்பினனே, - திசைமுகன்திகைக்க அசுரர் அன்றடைத்த
பிரமதேவன் திகைக்குமாறு அசுரர்கள் அந்நாளில் தேவர்களை அடைத்துவைத்த - சிறைதிறந்து விட்ட பெருமாளே.
சிறைகளைத் திறந்து விட்டு தேவர்களை விடுவித்த பெருமாளே.