தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ
டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ ...... சதிகாரர்
இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட
னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு ...... சமுசாரம்
கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்
கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர் ...... கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள
வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி
கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ...... ணுழல்வேனோ
ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள
மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி
யுடைத்து வானவர் சித்தர்து தித்திட ...... விடும்வேலா
உலுத்த ராவண னைச்சிர மிற்றிட
வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்
உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் ...... மருகோனே
வலிக்க வேதனை குட்டிந டித்தொரு
செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை
மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் ...... குருநாதா
வனத்தில் வாழும யிற்குல மொத்திடு
குறத்தி யாரைம யக்கிய ணைத்துள
மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய ...... பெருமாளே.
- எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு
எலும்பு, நாடிகள், நீருடனும், ரத்தத்துடனும், - அழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
அழுக்குகள், மூளைகள், தகுதியின்றி உள்ளிருக்கும் புழுக்கள், - இருக்கும் வீடு
இவையாவும் நிறைந்திருக்கும் வீடு இந்த உடல். - அதிலெத்தனை தத்துவ சதிகாரர்
அத்தகைய வீட்டில் எத்தனை குணத்து மோசக்காரர்கள், - இறப்பர் சூதகவர்ச் சுதரப்பதி யுழப்பர்
அக்கிரமக்காரர்கள், சூதான உள்ளத்து மக்கள், தம் வறட்டுப் பேச்சால் ஊரையே ஏமாற்றுபவர்கள், - பூமிதரிப்பர் பிறப்புடனிருப்பர்
பூமியில் தோன்றி, பிறந்த பிறப்புடன் முன்னேற்றம் இன்றி இருப்பவர்கள், - வீடுகள் கட்டி அலட்டுறு சமுசாரம் கெலிப்பர்
வீடுகள் பலவற்றைக் கட்டி மிகவும் அலட்டிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றதைப் பேசித் திரிபவர், - மால்வலை பட்டுறு துட்டர்கள்
மோகவலையில் விழுந்து கிடக்கும் துஷ்டர்கள், - அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்
பெரிய தவநிலையைப்பற்றி சற்றேனும் நினைத்துப் பார்க்காமல் அழிப்பவர்கள், - கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர்
யாவரையும் கெடுப்பவர்கள், நண்பர்களுக்கும் வஞ்சனை செய்பவர்கள், - கொலைகாரர் கிருத்தர் கோளகர்
கொலைகாரர்கள், செருக்கு மிகுந்தவர்கள், கோள் சொல்பவர்கள் - பெற்றுதி ரிக்களவரிப்பர்
முதலியோருடன் சேர்ந்து திரிந்து திருட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள், - சூடக ரெத்தனை வெப்பிணி
கோப நெஞ்சினர் ஆகியோரையும், எத்தனை வியாதிகள் உண்டோ அத்தனையையும், - கெலிக்கும் வீடதை நத்தியெடுத்து
வெற்றி பெற உழலும் இத்தகைய உடலாகிய வீட்டை நான் ஆசைப்பட்டு எடுத்து - இவணுழல்வேனோ
இந்த உலகில் அலைந்து திரிவேனோ? - ஒலிப்பல் பேரிகை யுக்ர அமர்க்களம்
ஒலிக்கின்ற பல முரசு வாத்தியங்கள் முழங்கும் கடுமையான போர்க்களத்தில் - எதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி யுடைத்து
எதிர்த்துவந்த அசுர வீரர்களை வெட்டி அழித்து, மாயை சூழ்ந்த கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்து, - வானவர் சித்தர்துதித்திட விடும்வேலா
தேவர்களும் சித்தர்களும் வணங்கும்படியாகச் செலுத்திய வேலை உடையவனே, - உலுத்த ராவணனைச்சிரம் இற்றிட வதைத்து
காமாந்தகனான ராவணனைச் சிரம் அற்று விழ அவனை வதைத்தவனும், - மாபலியைச்சிறை வைத்தவன்
(தன் பாதத்தை அவன் தலைமேல் வைத்து) மகாபலியைப் பாதாளத்தில் தள்ளிச் சிறை வைத்தவனும், - உலக்கை ராவி நடுக்கடல் விட்டவன் மருகோனே
இரும்பு உலக்கையைப் பொடிப்பொடியாக்கி நடுக்கடலில் கரைத்தவனும்* ஆகிய திருமாலின் மருகனே, - வலிக்க வேதனை குட்டி
வலி உண்டாகும்படியாக வேதப் பிரமனை சிரங்களில் குட்டினவனே, - நடித்து ஒரு செகத்தை யீனவள் பச்சைநிறத்தியை
நடனம் செய்து ஒப்பற்ற உலகத்தை ஈன்ற தாயான பச்சை நிறப் பார்வதியை - மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் குருநாதா
மணந்த தந்தையாகிய பரப்பிரம்மப் பொருளான சிவபிரானுக்கு உபதேசித்து அருளிய குருநாதனே, - வனத்தில் வாழுமயிற்குலம் ஒத்திடு
காட்டிலே வாழும் மயிலினம் போன்ற அழகியான - குறத்தியாரைம யக்கிய ணைத்து
குறத்தியாகிய வள்ளிதேவியை மயக்கி அணைத்து, - உள மகிழ்ச்சி யோடுதிருத்தணி பற்றிய பெருமாளே.
மனமகிழ்ச்சியுடன் திருத்தணித்தலத்தில் பற்றுடன் வீற்றிருக்கும் பெருமாளே.