திருப்புகழ் 247 எத்தனை கலாதி (திருத்தணிகை)

தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம்
தத்ததன தான தத்தம் ...... தனதான
எத்தனைக  லாதி  சித்தங்  கெத்தனைவி  யாதி  பித்தங் 
கெத்தனைச  ராச  ரத்தின்  ......  செடமான 
எத்தனைவி  டாவெ  ருட்டங்  கெத்தனைவ  லாண்மை  பற்றங் 
கெத்தனைகொ  லூனை  நித்தம்  ......  பசியாறல் 
பித்தனைய  னான  கட்டுண்  டிப்படிகெ  டாமல்  முத்தம் 
பெற்றிடநி  னாச  னத்தின்  ......  செயலான 
பெற்றியுமொ  ராது  நிற்குந்  தத்தகுரு  தார  நிற்கும் 
பெத்தமுமொ  ராது  நிற்குங்  ......  கழல்தாராய் 
தத்தனத  னாத  னத்தந்  தத்தனத  னாத  னத்தந் 
தத்தனத  னாத  னத்தந்  ......  தகுதீதோ 
தக்குகுகு  டூடு  டுட்டுண்  டிக்குகுகு  டீகு  தத்தந் 
தத்தனத  னான  னுர்த்துஞ்  ......  சதபேரி 
சித்தர்கள்நி  டாதர்  வெற்பின்  கொற்றவர்சு  வாமி  பத்தர் 
திக்குகளொர்  நாலி  ரட்டின்  ......  கிரிசூழச் 
செக்கணரி  மாக  னைக்குஞ்  சித்தணிகை  வாழ்சி  வப்பின் 
செக்கர்நிற  மாயி  ருக்கும்  ......  பெருமாளே. 
  • எத்தனைக லாதி சித்து அங்கு எத்தனை
    எத்தனை கலகச் சண்டைகள், எத்தனை சித்து வேலைகள்,
  • வியாதி பித்து அங்கெத்தனை
    அங்கு எத்தனை வியாதிகள், எத்தனை பைத்தியக்காரச் செயல்கள்,
  • சர அசரத்தின செடமான
    அசையும் உயிராகவும், அசையாததாகவும் உலகில் எடுத்த உடல்கள் எத்தனை,
  • எத்தனைவிடாவெருட்டு
    நீங்காத அச்சம் தரும் செயல்கள் எத்தனை,
  • அங்கெத்தனைவல் ஆண்மை
    அங்கே வலிமையுடைய ஆண்மைச் செயல்கள்தாம் எத்தனை,
  • பற்றங்கு எத்தனைகொல்
    அங்கே ஆசைகள் எத்தனை விதமானவையோ,
  • ஊனை நித்தம் பசியாறல்
    புலால் உண்டு தினந்தோறும் பசியாறக்கூடிய செயல்கள் எத்தனை,
  • பித்தனையன் நான் அகட்டு உண்டு
    பித்துப்பிடித்தவன் போன்ற யான் வயிற்றில் உண்டு
  • இப்படிகெ டாமல் முத்தம் பெற்றிட
    இவ்வாறு கெட்டுப் போகாமல் பிறவியினின்றும் விடுதலை பெற்றிட,
  • நினா சனத்தின் செயலான பெற்றியும்
    உனது அடியார் கூட்டத்தின் செயல்களான தன்மையும்,
  • ஒராது நிற்கும்
    யாராலும் உணர்தற்கு அரியதாக நிற்பதும்,
  • தத்த குரு
    பரவிப் பிரகாசிக்கின்ற ஒளிமயமான
  • தார நிற்கும்
    ப்ரணவ மந்திரப் பொருளாக நிற்பதும்,
  • பெத்தமும் ஒராது நிற்கும் கழல்தாராய்
    பாச பந்தங்களால் அறிவதற்கு அரிதாக நிற்பதுமான உன் கழல்களைத் தந்தருள்க.
  • தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் தத்தனத னான னுர்த்துஞ்
    (இதே) தாளத்தில் ஒலிக்கும்
  • சதபேரி
    நூற்றுக்கணக்கான முரசுகளின் ஒலயுடன்,
  • சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர்
    சித்தர்களும், மலை வேடர்களும், அரசர்களும், இறைவனின் அடியார்களும்,
  • திக்குகளொர் நாலிரட்டின் கிரிசூழ
    எட்டுத் திக்குகளிலும் மலையை வலம் வந்து பணிய,
  • செக்கண் அரிமா கனைக்குஞ் சித்தணிகை வாழ்
    சிவந்த கண்களை உடைய சிங்கம் கர்ஜிக்கும் ஞானத் திருத்தணிகை மலையில் வாழ்பவனே,
  • சிவப்பின் செக்கர்நிறமாயிருக்கும் பெருமாளே.
    செக்கச் சிவந்த நிறத்திலே இருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com