தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
தய்யனா தத்ததன ...... தனதான
உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது
முள்ளவே தத்துறைகொ ...... டுணர்வோதி
உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை
யுள்ளமோ கத்தருளி ...... யுறவாகி
வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய
வல்லமீ துற்பலச ...... யிலமேவும்
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
கிள்ளிவீ சுற்றுமலர் ...... பணிவேனோ
பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி
துய்யவே ணிப்பகிர ...... திகுமாரா
பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது
நெய்யனே சுற்றியகு ...... றவர்கோவே
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கையமால் வைத்ததிரு ...... மருகோனே
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே.
- உய்யஞானத்து நெறி கைவிடாது எப்பொழுதும்
நான் கடைத்தேறுவதற்கான ஞான மார்க்கத்தை எப்பொழுதும் கைவிடாமல் பற்றி, - உள்ள வேதத்துறை கொடு உணர்வோதி
உள்ள வேத சாஸ்திரங்களைக் கொண்டு அறிவு தெளிவுற ஓதி, - உள்ள மோகத்து இருளை விள்ள மோகப்பொருளை
என்னிடம் உள்ள மயக்க இருளை நீக்க, ஆசை வைக்கவேண்டிய பொருளாகிய மோக்ஷ இன்பத்தை - உள்ள மோகத்து அருளி யுறவாகி
கருதும் ஆசை உன் அருளால் கிடைத்து உன்னுடன் உறவு நெருங்க வேண்டும். - வையம் ஏழுக்குநிலை செய்யுநீதி
உலகம் ஏழினையும் நிலை நிறுத்திக் காக்கும் நீதி கொண்டவனே, - பழைய வல்ல மீது உற்பலசயில மேவும் வள்ளியா
பழமையான மலையாகிய திருவல்லத்திலும்*, நீலோத்பல கிரியான திருத்தணிகை மலையிலும் வாழும் வள்ளி நாயகனே, - நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
உன்னைப் புதிய வில்வ மரத்திலுள்ள இளம் கொழுந்து இலைகளை - கிள்ளிவீசுற்று மலர் பணிவேனோ
பறித்து வீசி அர்ச்சித்து உன் பாத மலர்களைப் பணிய மாட்டேனோ? - பை யராவைப் புனையும் ஐயர்பாகத்தலைவி
படம் உள்ள நாக ஆபரணத்தை அணிந்த தலைவர் சிவனார், அவரின் இடப்பாகத்தில் உள்ள தலைவி பார்வதி, - துய்யவேணிப்பகிரதி குமாரா
தூய ஜடாமுடியில் உள்ள பாகீரதியாகிய கங்கை - இம்மூவரின் குமாரனே, - பைய மால் பற்றிவளர் சையமேல் வைக்கு முது நெய்யனே
மெதுவாக மோகம் பற்றி (வள்ளி மனத்தில்) வளர்ந்த வள்ளிமலைமீது முதிர்ந்த நேயம் கொண்டவனே, - சுற்றியகுறவர்கோவே
சூழ்ந்துள்ள குறவர்களுக்குத் தலைவனாக ஆனவனே, - செய்யுமால் வெற்புருவ
மயக்கத்தைச் செய்யும் மாயமான கிரெளஞ்ச மலையை உருவும்படியாக - வெய்யவேல் சுற்றிவிடு கைய
வெப்பமான வேலைச் சுழற்றி விடுத்த கரத்தினனே, - மால் வைத்ததிரு மருகோனே
திருமால் அன்போடு மார்பில் வைத்த லக்ஷ்மியின் மருமகனே, - தெய்வயானைக்கிளைய
தெய்வத்தன்மையுடைய யானைமுகன் விநாயகனுக்குத் தம்பியே, - வெள்ளையானைத்தலைவ
வெள்ளையானையாகிய ஐராவதத்துக்குத் தலைவனே, - தெய்வயா னைக்கினிய பெருமாளே.
தேவயானைத் தேவிக்கு இனிய பெருமாளே.