திருப்புகழ் · 242இருப்பவல் திருப்புகழ் (திருத்தணிகை)iruppavalthiruppugazh
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன ...... தனதான
Thiruppugazh Anbargal
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் ...... தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.
பத உரைword meanings
- இருப்பவல் திருப்புகழ்
உயிர் போகும் தொலையா வழிக்கு உற்ற துணையாய் இருக்கும் அவல் போன்ற திருப்புகழை - விருப்பொடு படிப்பவர்
ஆர்வத்தோடு படிப்பவர்களுடைய - இடுக்கினை யறுத்திடும்
சங்கடங்களை அறுத்தெறியும் என்ற உண்மையை - எனவோதும்
எடுத்துச் சொல்கின்ற, - இசைத்தமிழ் நடத்தமிழென
இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றும், - துறை விருப்புடன் இலக்கண இலக்கிய
அகத்துறைப் பாக்கள், இலக்கணம், இலக்கியம் என்றும், - கவிநாலும்
நால்வகைக் கவிகளையும்* - தரிப்பவ ருரைப்பவர்
உள்ளத்தில் தரிப்பவர்கள், உரைப்பவர்கள், - நினைப்பவர்
நினைப்பவர்கள் ஆகிய உன் அடியார்களை - மிகச்சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே
மிகவும் இவ்வுலகில் புகழாமல், - தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
தங்கள் மார்பாலும், முகத்தாலும், மனத்தை உருக்கச் செய்யும் - சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ
சாமர்த்தியசாலிகளான பொதுமகளிரின் மோக மயக்கில் நான் விழலாமோ? (கூடாது என்றபடி), - கருப்புவில் வளைத்து
கரும்பு வில்லினை வளைத்து அதில் - அணி மலர்க்கணை தொடுத்து
அழகிய மலர்ப் பாணங்களைத் தொடுத்து, - இயல் களிப்புடன் ஒளித்தெய்த
மிகச் செருக்குடன் ஒளிந்திருந்து செலுத்திய - மதவேளை
மன்மதனை, - கருத்தினில் நினைத்து
தன் மனத்தில் நினைத்த மாத்திரத்திலேயே - அவன் நெருப்பெழ
அந்த மன்மதன் எரிந்து சாம்பலாகும்படி - நுதற்படு கனற்கணி லெரித்தவர்
தன் நெற்றிக் கண்ணால் எரித்தவரும், - கயிலாயப் பொருப்பினி லிருப்பவர்
கயிலை மலையிலே வீற்றிருப்பவரும், - பருப்பத வுமைக்கொரு புறத்தினை யளித்தவர்
பர்வத குமாரி உமாதேவிக்கு தன் இடது புறத்தைத் தந்தவருமான பரமசிவன் - தருசேயே
பெற்ற மகனே, - புயற்பொழில் வயற்பதி
மேகங்கள் தங்கும் சோலைகளும், வயல்களும் சூழ்ந்த ஊராகிய - நயப்படு திருத்தணி பொருப்பினில்
இனிமை வாய்ந்த திருத்தணி மலையில் - விருப்புறு பெருமாளே.
விருப்பம் கொள்ளும் பெருமாளே.
குறிப்புகள் · notes
- * தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்: ஆசு - எதுகை மோனையுடன் கூடியது, மதுரம் - இனிமை வாய்ந்தது, சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது, வித்தாரம் - வர்ணனை மிக்கது.
- * The four varieties of Tamil poetry are: Asu (alliteration) Mathuram (sweetness) Chiththiram (artful presentation) and ViththAram (description).




