திருப்புகழ் · 224நிலவினிலே (சுவாமிமலை)nilavinilE
தனதன தான தந்த தனதன தான தந்த
தனதன தான தந்த ...... தனதான
Nangalappa Sharanam
நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து
நிறைகுழல் மீத ணிந்து ...... குழைதாவும்
நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்
நினைவற வேமொ ழிந்து ...... மதனூலின்
கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து
கனியித ழேய ருந்தி ...... யநுராகக்
கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு
கபடனை யாள வுன்ற ...... னருள்கூராய்
உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு
முயர்கயி லாய மும்பொன் ...... வரைதானும்
உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற
உமையரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா
குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த
குமரக டோர வெங்கண் ...... மயில்வாழ்வே
கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த
குருமலை மீத மர்ந்த ...... பெருமாளே.
பத உரைword meanings
- நிலவினிலே இருந்து வகை மலரே தெரிந்து நிறை குழல் மீது
அணிந்து
நிலவில் இருந்து எடுத்தது போன்று வகைவகையான மலர்களைத் தெரிந்து எடுத்து நிறைந்துள்ள கூந்தலின் மேல் அணிந்து, - குழை தாவும் நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள்
நினைவு அறவே மொழிந்து
காதின் குண்டலங்கள் அளவும் பாய்கின்ற, உவமை இல்லாத வேல்கள் போன்ற கண்களின் ரேகைகள் விளங்க, மொழிகள் இன்னது பேசுகின்றோம் என்ற நினைவே இல்லாமல் பேச, - மத(ன்) நூலின் கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து
கனி இதழே அருந்தி
மன்மதனின் காம சாஸ்திரத்தில் கூறப்பட்ட கலகலப்பான லீலைகள் கணக்கில்லாமல் செய்து, கனி போன்ற வாயிதழ் ஊறலைப் பருகி, - அநுராகக் கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு(ம்)
கபடனை ஆள உன்றன் அருள் கூராய்
காமப் பற்று மிக்க புணர்ச்சியிலே ஈடுபட்டுப் பொருந்தி, விலைமாதர்களிடத்தே மயக்கம் உறும் கபடனாகிய என்னை ஆட்கொள்ள உனது திருவருளைத் தந்து அருளுக. - உலகம் ஓர் ஏழும் அண்டர் உலகமும் ஈசர் தங்கும் உயர்
கயிலாயமும் பொன் வரை தானும்
ஏழு உலகமும், தேவர் உலகமும், சிவ பெருமான் தங்கும் உயர்ந்த கயிலாயமும், பொன் மலையாகிய மேருவும், - உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதலாகி நின்ற உமை அருளால்
வளர்ந்த குமரேசா
உயிர்களும், ஐந்து பூதங்களும் ஆக எல்லாமாக ஒரு முதற் பொருளாகி நின்ற பார்வதியின் திருவருளால் வளர்ந்த குமரேசனே, - குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர
வெம் கண் மயில் வாழ்வே
பதறிய சூரனுடைய உடல் அழியும்படி வேலைச் செலுத்திய குமரனே, மிக்க கடிய பலம் வாய்ந்த மயில் மீது வாழ்பவனே, - கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த குரு
மலை மீது அமர்ந்த பெருமாளே.
மலைச் சிகரமாய் விளங்கி மேகம் தங்கும் இடம் போல் உயர்ந்த சுவாமி மலையின் மீது அமர்ந்த பெருமாளே.




