திருப்புகழ் · 223நாவேறு பா மணத்த (சுவாமிமலை)

தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த ...... தனதான

Raja Madasamy

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்று ...... வகையான
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த ...... நெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர
நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே
சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்த ...... குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்தி ...... மணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே.

பத உரை

  • நாவேறு பாம ணத்த
    நாவினில் இருந்து வெளிப்படும் பாமலர்களின் நறுமணம் கமழும்
  • பாதாரமே நினைத்து
    பாதத் தாமரைகளையே நினைத்து,
  • நாலாறு நாலு பற்று வகையான
    (4 ..ஐ 6 ..ஆல் பெருக்கி வந்த 24 ..ம் 4 ..ம் சேர்ந்த) 28 * சிவ சம்பந்தத்தை உடையதும்,
  • நாலாரும் ஆகமத்தின்
    சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்கள்** பொருந்தினவாயும் உள்ள சிவாகம
  • நூலாய ஞான முத்தி
    நூல்களில் கூறப்பட்டுள்ள ஞான முத்தி நெறியே
  • நாடோறு நானு ரைத்த நெறியாக
    நாள் தோறும் நான் அனுஷ்டிக்கும் நெறியாகவும்,
  • நீவேறெ னாதிருக்க
    நீ வேறு என்றில்லாமல்
  • நான்வேறெ னாதிருக்க
    நான் வேறு என்றில்லாமல், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுபட்ட நிலையில்,
  • நேராக வாழ்வதற்குன் அருள்கூர
    நேர்பட்டு வாழ்வதற்கு உன் கிருபை பெருகி,
  • நீடு ஆர் ஷடாதரத்தின் மீதே
    பெருமை பொருந்திய ஆறு ஆதாரங்களையும் கடந்து ஹஸ்ராரத்தில்***
  • பராபரத்தை நீகாணென
    பெரிய பொருள்கட்கெல்லாம் பெரிய பொருளான சிவத்தை நீ காண்பாயாக என்று
  • ஆவனைச்சொல் அருள்வாயே
    அந்த ஐக்கிய வசனத்தை உபதேசித்து அருள்வாயாக.
  • சேவேறும் ஈசர் சுற்ற
    நந்தியின் மீது ஏறுகின்ற ஈசராம் சிவனார் உன்னை வலம் வர,
  • மாஞான போத புத்தி
    சிறந்த ஞான உபதேசத்தை
  • சீராகவே உரைத்த குருநாதா
    செம்மையாகவே சொன்ன குருநாதனே,
  • தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
    பகைவர்களாம் தேவர்களின் நாட்டைச் சுட்டழித்த அசுரர்கள் சாகும்படி வெட்டிய
  • தீரா குகா குறத்தி மணவாளா
    தீரனே, குகனே, குறத்தி வள்ளியின் மணவாளனே,
  • காவேரி நேர்வடக்கிலே வாவி பூம ணத்த
    காவேரி ஆற்றின் நேர் வடக்கில் தடாகங்களில் மலர்கள் மணக்கும்
  • கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே
    சோலைகள் சூழ்ந்த சுவாமிமலையில் எழுந்தருளிய முருகக் கடவுளே,
  • கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
    கரு மேகத்து நிற மேனியுடைய மகா காளி, என்றும் இளையாள், சக்தி,
  • காமாரி வாமி பெற்ற பெருமாளே.
    காமனை எரித்தவரின் இடதுபக்கம் உள்ள பார்வதி பெற்ற பெருமாளே.

குறிப்புகள் · notes

  • ** நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு: 1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'. 2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'. 3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'. 4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. . . . சிவஞான சித்தியார் சூத்திரம்.
  • *** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
  • ** The four methods of worship are: 1. sariyai: Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'. 2. kiriyai: Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'. 3. yOgam: Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'. 4. gnAnam: Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout