திருப்புகழ் · 222நாசர்தங் கடை (சுவாமிமலை)nAsarthangkadai
தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான
தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான
M. S.Balashravanlakshmi puducherry
நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி
ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா
வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங்
கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.
பத உரைword meanings
- நாசர்தங் கடையதனில்
கேடு செய்யும் கீழ்மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று - விரவிநான் மெத்த நொந்து
அவர்களுடன் கலந்து அதனால் மிகவும் நொந்து போய், - தடுமாறி ஞானமுங் கெட
தடுமாற்றம் அடைந்து சுய அறிவும் கெட்டுப்போய், - அடைய வழுவி
முழுவதுமாக தவறான வழியில் விழுந்து, - ஆழத்து அழுந்தி மெலியாதே
ஆழமாகத் தீய நெறியில் அழுந்தி நான் மெலிவுறாமல், - மாசகந் தொழுமுனது புகழின்
இந்தச் சிறந்த உலகமே போற்றும் உனது புகழின் - ஓர் சொற் பகர்ந்து சுகமேவி
ஒரு சொல்லளவு பகுதியாவது சொல்லி அதனால் சுகமடைந்து, - மாமணங் கமழுமிரு கமலபாதத்தை
நறுமணம் வீசும் உன் இரண்டு தாமரைப் பாதங்களை - நின்று பணிவேனோ
மனம் ஒருமுகப்பட்டு நின்று வணங்க மாட்டேனோ? - வாசகம் புகல
உபதேச மொழியை நீ கூற, - ஒரு பரமர்தாம் மெச்சுகின்ற குருநாதா
ஒப்பற்ற சிவபிரான் மெச்சிப் புகழ்ந்த குருநாதனே, - வாசவன் தருதிருவை
இந்திரன் வளர்த்தளித்த லக்ஷ்மியின் அம்சமாகும் - ஒருதெய்வானைக்கு இரங்கு மணவாளா
ஒப்பில்லா தேவயானைக்கு இரங்கி மணம்புரிந்தவனே, - கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழும்
மூங்கில், கற்பக மரம், மகிழ மரம், மாமரம், அத்தி மரம், சந்தன மரம் இவையெல்லாம் சுற்றிலும் சூழ்ந்துள்ள, - கேசவன் பரவுகுரு மலையில்
திருமாலே போற்றிப் புகழும் சுவாமி மலையில் - யோகத்தமர்ந்த பெருமாளே.
உபதேச குருவாக யோகநிலையில் அமர்ந்த பெருமாளே.




