தந்ததன தனனா தனந்த
தந்ததன தனனா தனந்த
தந்ததன தனனா தனந்த ...... தனதான
மந்தரம தெனவே சிறந்த
கும்பமுலை தனிலே புனைந்த
மஞ்சள்மண மதுவே துலங்க ...... வகைபேசி
மன்றுகமழ் தெருவீ திவந்து
நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை யருகே யணைந்து ...... தொழில்கூறி
எந்தளவு மினிதா கநம்பு
தந்துபொருள் தனையே பிடுங்கி
யின்பமருள் விலைமா தர்தங்கள் ...... மனைதேடி
எஞ்சிமன முழலா மலுன்றன்
அன்புடைமை மிகவே வழங்கி
என்றனையு மினிதா ளஇன்று ...... வரவேணும்
விந்தையெனு முமைமா துதந்த
கந்தகுரு பரதே வவங்க
மென்றவரை தனில்மே வுமெந்தை ...... புதல்வோனே
மிஞ்சுமழ கினிலே சிறந்த
மங்கைகுற மடமா துகொங்கை
மென்கிரியி லிதமா யணைந்த ...... முருகோனே
சிந்தைமகிழ் புலவோர் கள்வந்து
வந்தனைசெய் சரணா ரவிந்த
செந்தமிழி லுனையே வணங்கு ...... குருநாதர்
தென்றல்வரை முநிநா தரன்று
கும்பிடந லருளே பொழிந்த
தென்பழநி மலைமே லுகந்த ...... பெருமாளே.
- மந்தரம் அது எனவே சிறந்த கும்ப முலை தனிலே புனைந்த
மஞ்சள் மணம் அதுவே துலங்க வகை பேசி
மந்தர மலை என்னும்படி சிறந்த குடம் போன்ற மார்பகத்தின் மேல் பூசிய மஞ்சளின் நறு மணம் வீசிப் பொலிய தந்திர மொழிகளைப் பேசி, - மன்று கமழ் தெரு வீதி வந்து நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை அருகே அணைந்து தொழில் கூறி
வாசனை கமழும் தெரு வீதியில் வந்து (அங்கு) நின்றவர்களை கண்களால் வளைத்து இழுத்து, தம்மிடம் வந்தவர்களை அருகில் நெருங்கி தங்கள் வியாபாரத் தொழிலை விளக்கிக் கூறி, - எந்த அளவும் இனிதாக நம்பு தந்து பொருள் தனையே
பிடுங்கி இன்பம் அருள் விலைமாதர் தங்கள் மனை தேடி
முழுமையும் இனிமையாக தம்மை நம்பச் செய்து, (அவர்களுடைய) பொருளைக் கைப்பற்றி, சிற்றின்பம் கொடுக்கும் பொது மகளிர்களின் வீடுகளைத் தேடி, - எஞ்சி மனம் உழலாமல் உன்றன் அன்பு உடைமை மிகவே
வழங்கி என் தனையும் இனிது ஆள இன்று வர வேணும்
கெட்டுப்போய் மனம் திரியா வகைக்கு உன்னுடைய அன்புச் செல்வத்தை நிரம்ப எனக்குக் கொடுத்து என்னையும் இனிமையுடன் ஆண்டருள நீ இன்று வர வேண்டும். - விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ
அற்புத மாதாவாகிய பார்வதி என்னும் உமா தேவி பயந்தருளிய கந்தனே, குருபர தேவனே, - வங்கம் என்ற வரை தனில் மேவும் எந்தை புதல்வோனே
வெள்ளியங் கிரியில் வீற்றிருக்கும் எம் தந்தையாகிய சிவ பெருமானின் மகனே, - மிஞ்சும் அழகினிலே சிறந்த மங்கை குற மட மாது
கொங்கை மென் கிரியில் இதமாய் அணைந்த முருகோனே
மேம்பட்டு அழகில் சிறந்த மங்கை, குறவர் பெண்ணாகிய வள்ளியின் மார்பாகிய மென்மை வாய்ந்த மலையை இன்பத்துடன் அணைந்த முருகனே, - சிந்தை மகிழ் புலவோர்கள் வந்து வந்தனை செய் சரண
அரவிந்த
உள்ளம் மகிழ்ந்த ஞானிகள் வந்து வணங்குகின்ற திருவடித் தாமரைகளை உடையவனே, - செம் தமிழில் உனையே வணங்கு குரு நாதர் தென்றல்
வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த
செந்தமிழில் (பாடல்கள் பாடி) உன்னையே வணங்கும் குரு நாதராகிய, பொதிய மலை முனிவர் அகத்தியர் அன்று கும்பிட, நல்ல அருளை நிரம்பப் பொழிந்த, - தென் பழநி மலை மேல் உகந்த பெருமாளே.
அழகிய பழனி மலையின் மேல் விரும்பி வீற்றிருக்கின்ற பெருமாளே.