திருப்புகழ் 181 மருமலரினன் (பழநி)

தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த
தனதனன தந்த தந்த ...... தனதான
மருமலரி  னன்து  ரந்து  விடவினைய  ருந்த  அந்தி 
மதியொடுபி  றந்து  முன்பெய்  ......  வதையாலே 
வகைதனைம  றந்தெ  ழுந்து  முலைதனைய  ருந்தி  யந்த 
மதலையென  வந்து  குன்றின்  ......  வடிவாகி 
இருமயல்கொ  டுந்து  வண்டு  பொதுவையர  கம்பு  குந்து 
இரவுபகல்  கொண்டொ  டுங்கி  ......  யசடாகும் 
இருவினைபொ  திந்த  இந்த  ஜனனமர  ணந்து  றந்து 
னிணையடிவ  ணங்க  என்று  ......  பெறுவேனோ 
திருவொடுபெ  யர்ந்தி  ருண்ட  வனமிசைந  டந்தி  லங்கை 
திகழெரியி  டுங்கு  ரங்கை  ......  நெகிழாத 
திடமுளமு  குந்தர்  கஞ்சன்  வரவிடுமெல்  வஞ்ச  கங்கள் 
செறிவுடன  றிந்து  வென்ற  ......  பொறியாளர் 
பரிவொடும  கிழ்ந்தி  றைஞ்சு  மருதிடைத  வழ்ந்து  நின்ற 
பரமபத  நண்ப  ரன்பின்  ......  மருகோனே 
பதுமமிசை  வண்ட  லம்பு  சுனைபலவி  ளங்கு  துங்க 
பழநிமலை  வந்த  மர்ந்த  ......  பெருமாளே. 
  • மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியொடு பிறந்து
    நறு மணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் ஏவி விட, செய்த வினையின் பயனை அனுபவிக்க, மாலை நேரத்து சந்திரனைப் போன்ற வடிவத்துடன் (இவ்வுலகில்) பிறந்து,
  • முன்பு எய் வதையாலே வகை தனை மறந்து எழுந்து முலை தனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி
    முன் செய்த கொடு வினைகளால் வந்த வகையை மறந்து, எழுந்து (தாயின்) முலைப் பாலைப் பருகி அழகிய குழந்தையாக வளர்ந்து, மலை போல் வடிவை அடைந்து,
  • இரு மயல் கொடுந் துவண்டு பொதுவையர் அகம் புகுந்து இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும்
    பெரிய காம மயக்குடன் வாடி, பொது மகளிருடைய வீடுகளில் புகுந்து இரவும் பகலும் அதே வேலையாயிருந்து, ஒடுங்கி அசடன் நான்
  • இரு வினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை அடி வணங்க என்று பெறுவேனோ
    நல் வினை, தீ வினை இரண்டும் சார்ந்த இந்தப் பிறப்பு, இறப்பு என்பவற்றை விட்டொழித்து உனது இரண்டு திருவடிகளைத் தொழும் பேற்றை என்று அடைவேனோ?
  • திருவொடு பெயர்ந்து இருண்ட வனமிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத திடம் உள முகுந்தர்
    லக்ஷ்மியாகிய சீதையோடு (அயோத்தி நகரை விட்டு) நீங்கி இருள் மிகுந்த காட்டில் நடந்து, இலங்கை நகரை விளங்கும் நெருப்புக்கு இட்ட குரங்காகிய அனுமனைக் கை விடாத திடமான கருணை உள்ள ராமர்,
  • கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து வென்ற பொறியாளர்
    கம்சன் அனுப்பிய நய வஞ்சகச் சூழ்ச்சிகளை கூர்மையாக உணர்ந்து, அவைகளை வென்ற அறிவாளர் கிருஷ்ணர்,
  • பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற பரம பத நண்பர் அன்பின் மருகோனே
    அன்புடன் மகிழ்ந்து வணங்கும் மருத மரங்களின் இடையே தவழ்ந்து நின்றவரும்*, பரம பதத்தில் இருக்கும் நண்பருமான திருமாலின் அன்பு மிகுந்த மருகனே,
  • பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே.
    தாமரையின் மீது வண்டுகள் ஒலிக்கின்ற பல சுனைகள் விளங்குகின்ற பரிசுத்தமான பழனி மலையில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com