திருப்புகழ் 178 பெரியதோர் கரி (பழநி)

தனதனா தனதன தந்த தானன
தனதனா தனதன தந்த தானன
தனதனா தனதன தந்த தானன ...... தனதான
பெரியதோர்  கரியிரு  கொம்பு  போலவெ 
வடிவமார்  புளகித  கும்ப  மாமுலை 
பெருகியே  யொளிசெறி  தங்க  வாரமு  ......  மணியான 
பிறையதோ  வெனுநுதல்  துங்க  மீறுவை 
அயிலதோ  வெனுமிரு  கண்க  ளாரவெ 
பிறகெலாம்  விழுகுழல்  கங்கு  லாரவெ  ......  வருமானார் 
உரியதோர்  பொருள்கொடு  வந்த  பேர்களை 
மனையிலே  வினவியெ  கொண்டு  போகிய 
யுளவிலே  மருவிய  வஞ்ச  மாதர்கள்  ......  மயலாலே 
உருகியே  யுடலற  வெம்பி  வாடியெ 
வினையிலே  மறுகியெ  நொந்த  பாதக 
னுனதுதாள்  தொழுதிட  இன்ப  ஞானம  ......  தருள்வாயே 
அரியதோ  ரமரர்க  ளண்ட  மேறவெ 
கொடியதோ  ரசுரர்க  ளங்க  மாளவெ 
அடலதோ  டமர்புரி  கின்ற  கூரிய  ......  வடிவேலா 
அரகரா  வெனமிக  அன்பர்  சூழவெ 
கடியதோர்  மயில்மிசை  யன்றை  யேறியெ 
அவனியோர்  நொடிவரு  கின்ற  காரண  ......  முருகோனே 
பரியதோர்  கயிறனை  கொண்டு  வீசவெ 
உறியதோய்  தயிர்தனை  யுண்டு  நாடியெ 
பசியதோ  கெடவருள்  கொண்ட  மாயவன்  ......  மருகோனே 
பரமமா  நதிபுடை  கொண்ட  ணாவவெ 
வனசமா  மலரினில்  வண்டு  லாவவெ 
பழநிமா  மலைதனி  லென்று  மேவிய  ......  பெருமாளே. 
  • பெரியது ஓர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித கும்ப மா முலை பெருகியே ஒளி செறி தங்க ஆரமும்
    பெரிய ஒரு யானையின் இரண்டு தந்தங்கள் போலவே வடிவம் கொண்டதாய், புளகம் பூண்டதாய், குடம் போன்ற பெருத்த மார்பகங்களின் மேல் நிறைந்து தோன்றும் ஒளி மிக்க பொன் மாலையும்,
  • அணியான பிறையதோ எ(ன்)னு(ம்) நுதல் துங்க மீறு வை அயில் அதோ எ(ன்)னும் இரு கண்கள் ஆரவெ பிறகு எலாம் விழு குழல் கங்குல் ஆரவெ வரும் மானார்
    அழகான பிறைச் சந்திரனோ எனத் தோன்றும் நெற்றியும், உயர்ச்சி மிக்க கூரிய வேலோ என்னும் படியாக இரண்டு கண்களும் நிறைந்து, முதுகு எல்லாம் விழுகின்ற கூந்தல் இரவு போல் இருள் போல் கருமை மிக்கதாய் தோற்றத்துடன் வருகின்ற விலைமாதர்கள்,
  • உரியது ஓர் பொருள் கொடு வந்த பேர்களை மனையிலே வினவியெ கொண்டு போகிய உளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் மயலாலே
    தமக்குச் சேருதற்கு உரிய பொருளைப் பெற்றுக் கொண்டு, (தம்மிடம்) வந்த ஆடவர்களை ஆய்ந்து பேசி விசாரித்து வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் ரகசிய உபாய எண்ணம் பொருந்திய வஞ்சகம் உள்ள பொது மகளிர் மீதுள்ள மோக மயக்கத்தால்,
  • உருகியே உடல் அற வெம்பி வாடியெ வினையிலே மறுகியெ நொந்த பாதகன் உனது தாள் தொழுதிட இன்ப ஞானம் அது அருள்வாயே
    மனம் உருகி உடல் எல்லாம் மெத்தக் கொதித்து வாடி, வினைக்குள் கலங்கி நொந்த பாதகனாகிய எனக்கு உன் திருவடிகளைத் தொழும்படியான ஞான இன்பத்தை அருள் புரிவாயாக.
  • அரியது ஓர் அமரர்கள் அண்டம் ஏறவெ கொடியதோர் அசுரர்கள் அங்கம் மாளவெ அடல் அதோடு அமர் புரிகின்ற கூரிய வடி வேலா
    அருமை வாய்ந்த தேவர்கள் பொன் உலகத்துக்குக் குடி ஏறவும், கொடுமை வாய்ந்த அசுரர்களின் உடல்கள் அழியவும், வெற்றியுடன் போர் புரிந்த கூரிய வேலாயுதனே,
  • அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை அன்றை ஏறியெ அவனி ஓர் நொடி வருகின்ற காரண முருகோனே
    அரஹரா என்னும் பேரொலியுடன் அன்பர்கள் சூழ, வலிமை வாயந்த மயிலின் மீது ஏறி அன்று (நீ) பூமியை ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த காரணனே, முருகனே,
  • பரியது ஓர் கயிறு அ(ன்)னை கொண்டு வீசவெ உறி அது தோய் தயிர் தனை உண்டு நாடியெ பசியதோ கெட அருள் கொண்ட மாயவன் மருகோனே
    பருத்த கயிறு கொண்டு தாயாகிய யசோதை வீசிக் கட்ட, உறியில் தோய்ந்திருந்த தயிரை உண்டு விரும்பி பசி நீங்கி அருள் பூத்த மாயக் கண்ணனின் மருகனே,
  • பரம மா நதி புடை கொண்டு அணாவவெ வனச மா மலரினில் வண்டு உலாவவெ பழநி மா மலை தனில் என்று(ம்) மேவிய பெருமாளே.
    மேலோனே, சிறந்த ஷண்முக நதி* பக்கத்தில் சூழ்ந்து நெருங்க, தாமரையின் அழகிய மலர்களில் வண்டுகள் உலாவ, பழனியாகிய சிறந்த மலையில் எப்போதும் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com