திருப்புகழ் 177 புடைசெப் பென (பழநி)

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
புடைசெப்  பெனமுத்  தணிகச்  சறவுட் 
பொருமிக்  கலசத்  ......  திணையாய 
புளகக்  களபக்  கெருவத்  தனமெய்ப் 
புணரத்  தலையிட்  ......  டமரேசெய் 
அடைவிற்  றினமுற்  றவசப்  படுமெற் 
கறிவிற்  பதடிக்  ......  கவமான 
அசடற்  குயர்வொப்  பதில்நற்  க்ருபையுற் 
றடிமைக்  கொருசொற்  ......  புகல்வாயே 
குடமொத்  தகடக்  கரடக்  கலுழிக் 
குணமெய்க்  களிறுக்  ......  கிளையோனே 
குடிபுக்  கிடமிட்  டசுரப்  படையைக் 
குறுகித்  தகரப்  ......  பொரும்வேலா 
படலைச்  செறிநற்  கதலிக்  குலையிற் 
பழமுற்  றொழுகப்  ......  புனல்சேர்நீள் 
பழனக்  கரையிற்  கழைமுத்  துகுநற் 
பழநிக்  குமரப்  ......  பெருமாளே. 
  • புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமிக் கலசத்து இணையாய புளகக் களபக் கெருவத் தன மெய்ப் புணரத் தலை இட்டு அமரே செய்
    பருத்துள்ள சிமிழ் போன்று, முத்து மாலை அணிந்த, கச்சு கிழியும்படி உள்ளே விம்மி, கலசத்துக்கு ஒப்பாகி, புளகம் கொண்டு, சந்தனக் கலவை பூண்டு செருக்குற்ற மார்பகம் சேர்ந்த உடலைப் புணர முனைந்து நின்று, (கலவிப்) போர் புரிகின்ற,
  • அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே
    ஒழுக்க முறையை தினமும் கொண்டு மயக்கம் பூணும் என் மீது, அறிவு இல்லாத, பயனில்லாத என் மீது, வீணான அசடனாகிய என் மீது, உயர்வு ஒப்பு இல்லாத உனது நல்ல அருளைக் காட்டி, அடிமையாகிய எனக்கு ஒப்பற்ற உபதேசச் சொல்லை புகன்று அருள்வாயாக.
  • குடம் ஒத்த கடக் கரடக் கலுழிக் குணம் மெய்க் களிறுக்கு இளையோனே
    குடம் போன்ற கதுப்பினின்றும் மத நீர் கலங்கல் நீர் போல் ஒழுகும் யானை முகத்தை உடையவரும், குணமும் மெய்ம்மையும் கொண்டவருமான விநாயகக் கடவுளுக்குத் தம்பியே,
  • குடி புக்கிட மி(மீ)ட்டு அசுரப் படையைக் குறுகித் தகரப் பொரும் வேலா
    (தேவர்கள் பொன்னுலகத்துக்குக்) குடி புக (தேவர்களைச் சூரனுடைய சிறையினின்று) மீட்டு, அசுரப் படைகளை நெருக்கி நொறுங்கி ஒழியச் சண்டை செய்த வேலனே,
  • படலைச் செறி நல் கதலிக் குலையில் பழம் முற்(றி) ஒழுகப் புனல் சேர் நீள் பழனக் கரையில் கழை முத்து உகு நல் பழநிக் குமரப் பெருமாளே.
    எங்கும் பரந்து அடர்ந்துள்ள நல்ல வாழைக் குலையில் பழங்கள் முற்றி தேன் ஒழுக, நீர் சேர்ந்த நீண்ட வயற் கரையில் மூங்கில்களின் முத்து உதிரும் நல்ல பழனியில் அமர்ந்த குமரப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com