தனனத் தனதன தனதன தந்தத்
தனனத் தனதன தனதன தந்தத்
தனனத் தனதன தனதன தந்தத் ...... தனதான
புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்
கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் ...... சதுர்வேதன்
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்
புதகர்த் தரகர பரசிவ னிந்தத் ...... தனிமூவ
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்
செவியுட் பிரணவ ரகசிய மன்புற்
றிடவுற் பனமொழி யுரைசெய்கு ழந்தைக் ...... குருநாதா
எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்
கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்
டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக் ...... கிரியாவும்
பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்
சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்
புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் ...... தமுமாகப்
பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்
குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் ...... குமரேசா
படியிற் பெருமித தகவுயர் செம்பொற்
கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் ...... பதனாலே
பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்
கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்
பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் ...... பெருமாளே.
- புடவிக்கு அணி துகில் என வளர்
பூமிக்கு உடுக்கப்படும் ஆடை எனப் பரந்துள்ள - அந்தக் கடல் எட்டையும் அற குடி முநி
அந்த எட்டுத் திக்குகளிலும் உள்ள கடல்களை ஒட்டக் குடித்த அகத்திய முனிவர், - எண் கண் புநிதச் சத தள நிலை கொள் சயம்புச் சதுர்
வேதன்
எட்டுக் கண்களை உடையவரும், சுத்தமான நூற்றிதழ்த் தாமரையில் நிலையாக இருப்பவருமாகிய பிரமனாகிய நான்கு வேதத்தோன், - புரம் அட்டு எரி எழ விழி கனல் சிந்தி
திரிபுரங்கள் அழிந்து எரி கொள்ளும்படி நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பை வீசி, - கடினத்தொடு சில சிறுநகை கொண்ட அற்புத கர்த்தர் அரகர
பரசிவன்
வன்மையுடன் சற்றுச் சிறிய புன்னகையைக் கொண்ட அற்புதத் தலைவரும், பாவங்களை அழிக்கவல்லவருமான பரம சிவன், - இந்தத் தனி மூவர்இட(ம்) சித்தமும் நிறை தெளிவு உறவும்
ஆக இந்த ஒப்பற்ற மூவர்களுடைய சித்தம் நிறைந்து தெளிவுறும் வண்ணம், - பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்பு உற்றிட
அவர்களது மேலான செவிகளில், பிரணவப் பொருளை, ஆர்வமாக - உற்பன மொழி உரை செய் குழந்தைக் குருநாதா
(உனது திரு வாயில் தோன்றிய) உபதேச மொழிகளால் விளக்கிய, குழந்தை உருவில் வந்த குரு நாதனே, - எதிர் உற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம்
வைத்திட
போருக்கு எதிர்த்து வந்த அசுரர்கள் தமது படைகளைக் கொண்டு சண்டைக்கு வலிய இடம் தந்ததால், - அவர் குலம் முழுதும் பட்டிட
அவர்களுடைய குலம் முழுவதும் அழியும்படிச் செய்தும், - உக்கிரமொடு வெகுளிகள் பொங்கக் கிரி யாவும் பொடி
பட்டு உதிரவும்
உக்கிரமாக, கோபம் பொங்க, குலமலைகள் யாவும் பொடிபட்டு உதிரச் செய்தும், - விரிவுறும் அண்டச் சுவர் விட்டு அதிரவும்
விரிந்த அண்டச் சுவர்கள் பிளவுபட்டு அதிர்ச்சி அடையச்செய்தும், - முகடு கிழிந்து அப்புறம் அப் பர வெளி கிடு கிடு எனும்
சத்தமும் ஆக
அண்டத்து உச்சி கிழிபட்டு, அதற்கு அப்பாலுள்ள ஆகாய வெளி எல்லாம் கிடுகிடு என்று சத்தம்படும்படி, - பொருதுக் கையில் உள அயில் நிணம் உண்க
போரிட்டு, கையில் உள்ள வேல் (பகைவர்களின்) கொழுப்பை உண்ண, - குருதிப் புனல் எழு கடலினும் மிஞ்ச
ரத்த நீர் ஏழு கடல்களைக் காட்டிலும் அதிகமாகப் பெருக, - புரவிக் கன மயில் நட விடும் விந்தைக் குமரேசா
குதிரையாகிய சிறந்த மயிலைச் செலுத்திய அற்புதக் குமரேசனே, - படியில் பெருமித தக உயர் செம் பொன் கிரியைத் தனி வலம்
வர
பூமியில் மேன்மையும், தகுதியும் மிக்க செம் பொன் மலையாகிய மேருவை, தனித்து நீ வலம் வர, - அரன் அந்தப் பலனைக் கரி முகன் வசம் அருளும் பொற்பு
அதனாலே
சிவபெருமான் அந்தப் பரிசுப் பழத்தை (உன் அண்ணன்) யானைமுகன் கணபதிக்குக் கொடுத்த நியாயமற்ற தன்மையாலே, - பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு
(அந்தச்) சிவன் வெட்கம் கொள்ளும்படி, உள்ளத்தில் மிகக் கோபம்கொண்டு, - அக் கனியைத் தர விலை என அருள் செந்தில்
அந்தப் பழத்தைத் தரவில்லை என்று, அருள் பாலிக்கும் திருச்செந்தூரிலும், - பழநிச் சிவகிரி தனில் உறை கந்தப் பெருமாளே.
பழனிச் சிவகிரியிலும் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.