திருப்புகழ் 1339 பெரியதொரு பிறவி (குமரகிரி)

தனன தன தனன தன தந்தத் தந்தத்
தனன தன தனன தன தந்தத் தந்தத்
தனன தன தனன தன தந்தத் தந்தத் ...... தனதான
பெரியதொரு  பிறவியெனும்  பந்தத்  துந்தித் 
தெரிவையரை  யுறவுகொள  ஒன்றிச்  சென்றுப் 
பிணியுமொரு  உடல்  நலிய  மங்கித்  தொங்கிப்  ......  பலகாலம் 
பொறிகளொடு  புனையு  மொரு  விந்துத்  துன்பப் 
பொதியினையும்  புவியதனில்  கொண்டுப்  பங்கப் 
படுவதையு  மழிவதையு  மென்றுக்  கண்டுத்  ......  தவிராதோ 
சிவகலையும்  பகருமொரு  பண்பைச்  சிந்தித் 
தறியவொரு  மொழியு  முளதென்றுத்  தந்தச் 
சிறியயுயிருய  நினது  செம்பொற்  றண்டைப்  ......  பதமேவ 
வயலிதனில்  வருகவென  வந்துத்  தந்தப் 
பொருளுமிகு  அறியதொரு  சந்தத்  தின்பத் 
துனதடிமை  மனமுருகி  சிந்தித்  துன்றித்  ......  திளைவேனோ 
பவனெனவுங்  குகனெனவு  மும்பர்  கும்பிட் 
டொழவுமறு  முகனெனவுங்  கந்தச்  சங்கப் 
புலவனென  குறுமுனியும்  வந்தித்  தின்புற்  ......  றிடுவேலா 
படமுடைய  அரவமொடு  கொன்றைத்  தும்பைச் 
சடையிலணி  யிறைவரவரன்றுத்  தந்தப் 
பரகுமர  அடியவரின்  சிந்தைக்  கொண்டிட்  ......  டருள்வோனே 
குறமகளை  யணையவொரு  குன்றிற்  சென்றுக் 
கிழவடிவுந்  தருவடிவுங்  கொண்டுத்  தும்பிக் 
கையனைவர  நினைவுகொள  வந்தக்  கொம்பற்  ......  கிளையோனே 
புவனகிரி  மகௗருமை  மைந்தக்  கொஞ்சுத் 
தமிழழக  குழகனென  குன்றுப்  பொங்கப் 
பொழிலுமிகு  குமரகிரி  நின்றக்  கந்தப்  ......  பெருமாளே. 
  • பெரியதொரு பிறவியெனும் பந்தத் துந்தித்
    பெரியதாகிய ஒரு மானிடப் பிறவி எனும் பந்தபாசத்தில் அழுந்தி,
  • தெரிவையரை யுறவுகொள ஒன்றிச் சென்றுப்
    பெண்களிடம் உறவு கொள்வதற்காக தேடிச் சென்று,
  • பிணியுமொரு உடல் நலிய மங்கித் தொங்கிப் பலகாலம்
    அதன் காரணமாக பிணிகள் (நோய்கள்) வந்து சேர்ந்து, உடலானது அவதியுற்று, ஒளி குன்றி, சதைகள் சுருங்கி வளைந்து - இப்படியாகப் பலகாலம்
  • பொறிகளொடு புனையு மொரு விந்துத் துன்பப்
    ஐம்புலன்களோடு சேர்ந்துள்ளதுமான விந்து (அ) கருவால் உருவம் பெற்று, துன்பமாகிய
  • பொதியினையும் புவியதனில் கொண்டுப் பங்கப் படுவதையும்
    சுமை (அ) மூட்டையைக் கொண்டு இப்பூவுலகில் அவமானப் படுவதையும்,
  • அழிவதையு மென்றுக் கண்டுத் தவிராதோ
    அத்தகைய இவ்வுடல் அழிவதையும் அடியேன் என்று அறிந்துகொண்டு, அதிலிருந்து விடுபடுவதற்கு முயலமாட்டேனோ?
  • சிவகலையும் பகரு மொரு பண்பைச் சிந்தித்து
    சிவ ஆகமங்கள் கூறுகின்ற நற்குணங்கள் பொருந்திய ஒரு பண்பை உளமதில் சிந்தித்து,
  • அறியவொரு மொழியு முளதென்றுத் தந்தச்
    அறிந்து கொள்வதற்கு ஒரு உபதேச மொழி இருக்கிறது என்று, அதை அடியேனுக்கு அருளிய உனது கருணையால்
  • சிறிய யுயிருய நினது செம்பொற் றண்டைப் பதமேவ
    இந்தச் சிறிய உயிர் நற்கதி அடைய, சிவந்தப் பொன்னாலான தண்டை எனும் ஆபரணம் அணிந்துள்ள உனது திருப்பாதங்களை அடைவதற்கு,
  • வயலிதனில் வருகவென வந்துத் தந்தப்
    வயலூர் எனும் திருத்தலத்திற்கு வருக என அடியேனைக் கூப்பிட்டு, அங்கு அருள் புரிந்த
  • பொருளுமிகு அறியதொரு சந்தத் தின்பத்து
    மிகுந்த பொருளோடு அறிந்து கொள்வதற்கேற்ப ஒரு சந்தப் பாடலாகிய திருப்புகழின் இன்பத்தை,
  • உனதடிமை மனமுருகி சிந்தித் துன்றித் திளைவேனோ
    உனது அடிமையாகிய யான், மனம் உருகி சிந்தித்து, அதில் ஆழ்ந்து(அ) மூழ்க மாட்டேனோ?
  • பவனெனவுங் குகனெனவு மும்பர் கும்பிட்
    சரவணபவன் எனவும், குகன் எனவும், தேவர்கள் யாவரும் வணங்கித்
  • டொழவுமறு முகனெனவுங் கந்தச் சங்கப்
    தொழவும், ஆறுமுகன் எனவும், கந்தா எனவும், சங்கப் புலவன் எனவும்,
  • புலவனென குறுமுனியும் வந்தித் தின்புற்றிடுவேலா
    அகத்திய முனிவரும் துதித்து மகிழ்ச்சியடையும் வேலாயுதத்தை உடையவனே.
  • படமுடைய அரவமொடு கொன்றைத் தும்பைச்
    படத்தையுடைய நாகமொடு, கொன்றை மலரும் தும்பை மலரும்
  • சடையிலணி யிறைவரவரன்றுத் தந்தப்
    தமது சடையில் அணிந்துள்ள இறைவராகிய சிவ பரம்பொருள், அன்று தந்து அருளிய
  • பரகுமர அடியவரின் சிந்தைக் கொண்டிட்டருள்வோனே
    பரமனது குமரனே, அடியார்களின் உள்ளத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு அருள் புரிபவனே.
  • குறமகளை யணையவொரு குன்றிற் சென்றுக்
    குறமகளாகிய வள்ளியை மணம் புரிவதற்கு ஒரு மலையில் (வள்ளிமலையில்) சென்று,
  • கிழவடிவுந் தருவடிவுங் கொண்டுத் தும்பிக்
    கிழ வடிவமும், வேங்கைமர வடிவமும் எடுத்து, யானைமுகனை
  • கையனைவர நினைவுகொள வந்தக் கொம்பற்கிளையோனே
    வருவதற்கு வேண்டி நினைத்திட, அப்பொழுது அங்கே வந்து மணம் முடித்துவைத்த விநாயகருக்கு இளையவனே,
  • புவனகிரி மகௗருமை மைந்தக் கொஞ்சுத்
    இமய மலையின் மகளான உமையம்மையின் அருமை மகனே, கொஞ்சுகின்ற
  • தமிழழக குழகனென குன்றுப் பொங்கப்
    தமிழுக்கு அழகு சேர்க்கும் குழந்தை வடிவமுடையவனே, மலைகள் உயர்ந்துள்ளதும்,
  • பொழிலுமிகு குமரகிரி நின்றக் கந்தப் பெருமாளே.
    சோலைகள் நிறைந்துள்ளதுமாகிய குமரகிரி எனும் திருத்தலத்தில் வந்து நின்ற கந்தப் பெருமானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com