தனனதா தனதனன தனனதா தனதனன
தனனதா தனதனன ...... தனதான
சிவணிதா வியமனதும் அழகுமா ணடைமதன
சிலைஉலா வியபுருவம் ...... விழிசேல்கள்
திகழுமா மதிமுகமும் இருளுலா வியகுழல்கள்
திருவினோ வியகனக ...... தனபாரம்
தவளவா ணகையுமினின் இடையுலா வியநடையர்
சரசமா மயில்கள்என ...... இளையோர்கள்
தமிழின்மோ கினிஎனவே சொலியுமே பணியுமொரு
சரசமோ இனியுதற ...... அருள்வாயே
புவனிகா டடையதுயில் பரமர்நா டடையசடை
புகழெலா மடையநகை ...... ஒளிமீதே
பொடிகளால் மருவஇள வெயிலுலா வியகழல்கள்
பொலியவே மழுவுழையும் ...... உடனாட
பவுரிநா டகமருளும் எனதுதா யிடமருவு
பரமரா சியனருளு ...... முருகோனே
பழநிமா மலைமருவும் எனதுமோ கினியமளி
பழகிநா யெனைமருவு ...... பெருமாளே.
......... சொற்பிரிவு .........
சிவணி தாவிய மனதும் அழகு மாண் நடை மதன
சிலை உலாவிய புருவம் விழிசேல்கள்
திகழும் மா மதி முகமும் இருள் உலாவிய குழல்கள்
திருவின் ஓவிய கனக தனபாரம்
தவள வாள் நகையும் மினின் இடையுலா விய நடையர்
சரசமா மயில்கள்என இளையோர்கள்
தமிழின் மோகினி எனவே சொலியுமே பணியும் ஒரு
சரசமோ? இனி உதற அருள்வாயே
புவனி காடு அடைய துயில் பரமர்நாடு அடைய சடை
புகழெலாம் அடைய நகை ஒளிமீதே
பொடிகளால் மருவ இள வெயில் உலாவிய கழல்கள்
பொலியவே மழுவு உழையும் உடனாட
பவுரி நாடகம் அருளும் என தாயிடம் மருவு
பரம ராசியன் அருளும் முருகோனே
பழநி மாமலை மருவு எனது மோகினி அமளி
பழகி நாயெனை மருவு பெருமாளே.
- சிவணி
நிலை பெற்றிருப்பது போல இருந்து, - தாவிய மனதும்
ஆனால் தாவிக் கொண்டே இருக்கின்ற மனமும் - அழகு மாண் நடை
அழகிய பெருமை பொருந்திய நடையும், - மதன சிலை உலா வியபுருவம்
மன்மதனுடைய கரும்பு வில் போன்ற புருவமும், - விழி சேல்கள்
சேல் மீன் போன்ற கண்களும், - திகழுமா மதிமுகமும்
சிறந்த சந்திரன் போல விளங்கும் முகமும், - இருளுலா வியகுழல்கள்
இருட்டை நிகர்க்கும் கரிய கூந்தலும், - திருவின் ஓவிய கனக தனபாரம்
அழகிய சித்திரம் போன்ற கனத்த கொங்கைகளும், - தவள வாள் நகையும்
வெண்ணிறமுள்ள ஒளி பொருந்திய பற்களும், - மினின் இடை, உலா வியநடையர்
மின்னல் போல் சிறுத்த இடுப்பும், உலவுகின்ற நடையும் கொண்டு, - இளையோர்கள் சரசமா மயில்கள்என
அவைகளைப் பார்த்த இளைஞர்கள் காம இன்பம் தரும் அழகிய மயில்கள் என்று புகழ, (அவர்களை நானும்) - தமிழின்மோ கினி எனவே சொலியுமே
இனிமை தரும் தேவ கன்னிகை என்று ஒப்பிட்டு பணியுமொரு - சரசமோ
பணிந்து நிற்பது ஒரு விளையாட்டோ? - இனி உதற அருள்வாயே
இத்தகைய களி ஆட்டங்கள் என்னை விட்டு நீங்க அருள் புரிக. - புவனி காடு அடைய
பூமியில் உள்ள காடுகள் முதல், - துயில் பரமர்நாடு அடைய
யோக நித்திரை புரியும் மகாவிஷ்ணுவின் வைகுண்டம் வரை, - சடை புகழெலாம் அடைய
வீசுகின்ற ஜடா மகுடம் புகழ் பெறவும், (பெண்பேய் தங்கி அலறி உலவு காட்டில்தாழ் சடை எட்டுத் திசையும் வீசிஅங்கம் குளிர்ந்து அனலாடும் எங்கள்அப்பனிடம் திருவாலங்காடே ... காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகம்) - நகை பொடிகளால்
ஒளி வீசும் திருவெண்ணீற்றால், - ஒளிமீதே மருவ
திரு மேனியில் பிரகாசம் விளங்க, - இள வெயில் உலா விய கழல்கள் பொலியவே
இளவெயில் போன்று ஒளி வீசும் காழல்கள் விளங்கவும், - மழுவுழையும் உடனாட
மழுவும் மானும் உடன் ஆடவும், - எனதா யிடமருவும்
எனது அன்னை போன்ற சிவகாமியை தனது இட பாகத்தில் வைத்துக் கொண்டு, - பவுரிநா டகமருளும்
வளைந்து சுற்றும் கூத்தாகிய பவுரி நாட்டியம் நடத்தும், - பரமரா சியனருளு முருகோனே
பரம ரகசிய மூர்த்தியாகிய சிவபிரான் அருளிய குழந்தையே (பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் ...... அருள்பாலா ... இருளுமோர் திருப்புகழ் 496) - பழநிமா மலைமருவு எனதுமோ கினி
பழநி என்னும் பெரிய மலையில் வாழும் எனது ஆசைத் தாயாகிய வள்ளி அம்மையின், - அமளி பழகி நாயெனை மருவுபெருமாளே
மஞ்சத்தில் சேர்ந்து (சக்தியாகிய திருவருள் சேர்ந்ததின் பயனாக) அடியேனையும் தழுவி ஆட்கொளுகின்ற பெருமாளே.