திருப்புகழ் 1340 தேனை வடித்து (சுவாமிமலை)

தான தனத்தத் தனந்தனா தன
தான தனத்தத் தனந்தனா தன
தான தனத்தத் தனந்தனா தன ...... தனதானா
தேனை  வடித்துச்  சொரிந்ததோ  கொதி 
பாலு  டன்ஒக்கக்  கலந்ததோ  நல 
சீனி  யில்விட்டுப்  பிசைந்ததோ  பல  ......  கனிதானோ 
தேடி  யெடுத்துப்  பிழிந்ததோ  நிறை 
பாகு  பதத்திற்  கமைந்ததோ  இவை 
சேர  வுருட்டித்  திரண்டதோ  நவ  ......  ரசமீதோ 
ஞான  முளைத்துப்  படர்ந்ததோ  யதி 
லேயெ  ழுபுட்பச்  சுகந்தமோ  விது 
நாம  கள்வித்தை  ப்ரசங்கமோ  வென  ......  உரைநாவால் 
நாவ  லர்மெச்சிப்  பணிந்துதா  ழவும் 
நீய  துமெச்சித்  தணிந்துபே  சவும் 
நானு  னைமெச்சிப்  புகழ்ந்துபா  டவும்  .......  அருள்தாராய்! 
யானை  மதப்பட்  டெழுந்ததா  மென 
வேயி  ருபத்மச்  சதங்கையோ  லிட 
ஆறு  முகத்துக்  குழந்தையா  யருள்  ......  அணையார்பால் 
ஆறு  முகத்திற்  சொரிந்தபாற்  குளம் 
ஆறு  முலைக்குப்  பிரிந்தபால்  நிறை 
வார  மலைக்குச்  சிறைந்தபோ  திலு  ......  மமையாதோ 
சோனை  மலைக்குட்  திரிந்துலா  விய 
சீர  சமுத்ரத்  தரங்கமே  லெழு 
சூரி  யனொக்கத்  திரிந்துலா  விய  ......  புதல்வோனே! 
சோலை  மலைக்குக்  கடம்புபோல்  வளர் 
விரா  லிமலைக்குக்  கொழுந்துபோ  லுயர் 
சுவா  மிமலைக்குக்  கரும்புபோல்  வரு  ......  முருகோனே! 
  • தேனை வடித்துச் சொரிந்ததோ கொதி
    சுத்தமான தேனைப் பிழிந்து எடுத்து ஊற்றியதோ, சூடான
  • பாலுடன் ஒக்கக் கலந்ததோ நல
    பாலுடன் அத்தேனை தகுந்த அளவு கலந்துள்ளதோ, நல்ல
  • சீனியில் விட்டுப் பிசைந்ததோ பல கனிதானோ
    சர்க்கரையில் கொட்டிப் பிசைந்துள்ளதோ, பல வகையான பழங்களோ,
  • தேடி யெடுத்துப் பிழிந்ததோ நிறை
    அப்பழங்களைத் தேடி எடுத்து அதன் சாற்றைப் பிழிந்து எடுத்ததோ, தேவையான
  • பாகு பதத்திற் கமைந்ததோ இவை
    நல்ல பக்குவத்திற்கு உள்ளானதோ, இவைகள் எல்லாம்
  • சேர வுருட்டித் திரண்டதோ நவரசமீதோ
    ஒன்றாக சேர்த்து உருட்டி உருவானதோ, ஒன்பது விதமான இனிமைகளைக் கொண்டதோ
  • ஞான முளைத்துப் படர்ந்ததோ யதிலே
    மெய்யான உணர்வு உதித்து பரவியுள்ளதோ, அவற்றுள்
  • யெழு புட்பச் சுகந்தமோ விது
    எழுகின்ற பலவகைப் பூக்களின் நறுமணமோ, இது
  • நாமகள் வித்தை ப்ரசங்கமோ வென உரை நாவால்
    சரஸ்வதியின் அருளால் வெளிப்படும் ஞானத் தெளிவோ என உன் அருளை நாவினால் போற்றுகின்ற,
  • நாவலர் மெச்சிப் பணிந்து தாழவும்
    புலவர்கள் விரும்பிப் பணிவோடு தலை வணங்கவும்,
  • நீயது மெச்சித் தணிந்து பேசவும்
    நீ அதைக் கண்டு விரும்பி நிறைவோடு அவர்களுடன் பேசவும்,
  • நானுனை மெச்சிப் புகழ்ந்து பாடவும் அருள்தாராய்!
    நான் உனை விரும்பித் துதித்துப் பாடவும் உனது அருளைத் தருக!
  • யானை மதப்பட் டெழுந்ததா மெனவே
    யானை மதங்கொண்டு ஓடும்போது, அதன் கழுத்திலுள்ள மணிகளின் ஒலியைப் போன்றதோ என்று
  • யிரு பத்மச் சதங்கை யோலிட
    உனது இரு தாமரை மலர்ப் பாதங்களை அலங்கரிக்கும் சதங்கைகள் ஓசையிட
  • ஆறு முகத்துக் குழந்தையா யருள் அணையார் பால்
    அறுமுகக் குழந்தை வடிவாக வந்து உன்னை அணைத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு அருள் புரிந்தவனே
  • ஆறு முகத்திற் சொரிந்த பாற்குளம்
    உனது ஆறு முகத்திற்கு பொழிந்த பாற்குளம் போன்ற
  • ஆறு முலைக்கும் பிரிந்த பால் நிறை
    கார்த்திகைப் பெண்கள் அறுவர் தனங்களிலிருந்து வெளிப்பட்டப் பாலின் அளவானது
  • வார மலைக்குச் சிறைந்த போதிலு மமையாதோ
    நீண்ட நெடிய மலையினால் தடுக்கப்பட்டு அடைக்கப்பட முடியுமோ?
  • சோனை மலைக்குட் திரிந்துலாவிய
    கார் மேகங்கள் சூழ்ந்துள்ள மலகளின்மேல் திரிந்து உலாவி வருகின்றவனாகவும்,
  • சீர சமுத்ரத் தரங்க மேலெழு
    பாற்கடலின் அலைகளின் மேல் எழுகின்ற
  • சூரிய னொக்கத் திரிந்துலாவிய புதல்வோனே!
    ஞான சூரியனாகவும் உலாவி வருகின்ற மைந்தனே
  • சோலை மலைக்குக் கடம்புபோல் வளர்
    சோலை மலை எனும் திருத்தலத்திற்கு வளர்கின்ற கடம்ப மலர் போன்றும்,
  • விராலி மலைக்குக் கொழுந்து போலுயர்
    விராலிமலை எனும் திருத்தலத்திற்கு இளந்தளிர் போன்றும், உயர்ந்த
  • சுவாமி மலைக்குக் கரும்புபோல் வரு முருகோனே!
    சுவாமி மலை எனும் திருத்தலத்திற்கு இனிக்கும் கரும்பு போன்றும் வந்து அருள் புரிகின்ற முருகப் பெருமானே!

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com