திருப்புகழ் 1334 கன்றிவரு நீல (திருச்செந்தூர்)

வேறொரு பழைய நூலிலிருந்த இதே பாடலின் சற்று மாறுபட்ட அமைப்பு.
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
கன்றிவரு  நீல  குங்குமப  டீர 
கஞ்சமலர்  மேவு  ......  முலைகாட்டி 
கங்குல்செறி  கேச  நின்றுகுலை  யாமை 
கண்கள்கடை  காட்டி  ......  விலைகாட்டி 
நன்றுபொரு  டீது  வென்றுவிலை  பேசி 
நம்பிவிடு  மாத  ......  ருடனாட்ட 
நஞ்சுபுரி  தேரை  யங்கமது  வாக 
நைந்துவிடு  மெற்கொன்  ......  றருள்வாயே 
குன்றிமணி  போலச்  செங்கண்வரி  நாகங் 
கொண்டபடம்  வீசு  ......  மணிகூர்வாய் 
கொண்டமயி  லேறிக்  குன்றிடிய  மோதிச் 
சென்றவடி  வேலைக்  ......  கொடுபோர்செய் 
மன்றல்கமழ்  பூகந்  தெங்குதிரள்  சோலை 
வண்டுபடு  வாவி  ......  புடைசூழ 
மந்திநட  மாடுஞ்  செந்தில்நகர்  மேவும் 
அந்தசுர  காலப்  ......  பெருமாளே. 
  • கன்றிவரு நீல குங்கும படீர கஞ்ச மலர் மேவு(ம்) முலைகாட்டி
    கன்றிப் போய் நீலம் பாய்ந்த, குங்குமமும் சந்தனமும் கலந்த, தாமரை மலரைப் போன்ற தங்கள் மார்பகத்தைக் காட்டி,
  • கங்குல் செறி கேச நின்று குலையாமை கண்கள் கடை காட்டி விலைகாட்டி
    கரு நிறம் அடர்ந்த மேகம் போன்ற கூந்தல் கலையாத வண்ணம் இறுக்கி முடித்து, கடைக்கண்களால் ஜாடை காட்டி, தங்களது விலையையும் குறிப்பாகக் காட்டி,
  • நன்றுபொருள் தீதுவென்று விலை பேசி நம்பி விடு மாதருடன் ஆட்ட(ம்)
    வந்தவர் தரும் பொருள் ஏற்புடைத்து அல்லது ஏற்காது என்று பேரம் பேசி, (தம்மை) நம்பும்படி செய்கின்ற வேசியர்களோடு விளையாடி,
  • நஞ்சு புரி தேரை அங்கம் அதுவாக நைந்துவிடும் எற்கு ஒன்று அருள்வாயே
    பாம்பின் விஷம் பாய்ந்த தேரை (என்னும்படி) உடல் அத்தன்மையதாகி நைந்து போகின்ற எனக்கு ஒரு நல்வாக்கு அருள்வாயாக.
  • குன்றிமணி போலச் செங்கண்வரி நாகங் கொண்ட படம் வீசு(ம்) மணிகூர்வாய் கொண்ட மயில் ஏறி
    குண்டு மணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, (தனது) அழகிய கூர்மையான வாயில் (அந்தப் பாம்பைக் கொத்திக்) கொண்ட மயிலின் மீது ஏறி,
  • குன்று இடிய மோதிச் சென்றவடி வேலைக் கொ(ண்)டு போர்செய்
    கிரெளஞ்ச மலை இடிந்து நொறுங்கும்படியாக மோதிய கூர்மையான வேலைக் கரத்தில் கொண்டு போர் செய்தவனே,
  • மன்றல்கமழ் பூகந் தெங்குதிரள் சோலை வண்டு படு வாவி புடைசூழ மந்தி நடமாடுஞ் செந்தில்நகர் மேவும் அந்த அசுர காலப் பெருமாளே.
    மணம் வீசும் கமுகு, தென்னை நெருங்கு சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களில் சூழ, குரங்குகள் நடனம் செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் வீரனே, அந்த அசுரர் குலத்துக்கு யமனாக அமைந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com