திருப்புகழ் 1335 வம்புங் கோபமும் (செங்குன்றாபுரம்)

தந்தந் தானன தானன தானன
தந்தந் தானன தானன தானன
தந்தந் தானன தானன தானன ...... தனதான
வம்புங்  கோபமு  மேவசு  ராதிகள் 
வந்தஞ்  சாமலும்  வானவர்  பாலினில் 
மண்டும்  போர்செயும்  வேளையன்  னோரைவெல்  ......  வடிவேலா 
தம்பம்  போலுறு  மூடர்கள்  மீதுக 
ரும்புந்  தேனிகர்  பாவுரை  யாதுன 
தஞ்சம்  பாரென  வோதுவ  நீஅருள்  ......  புரிவாயே 
அம்பொன்  றேவிழி  சேர்குற  மாதுதன் 
இன்பந்  தேடிமுன்  னோர்கணி  யாகவு 
மன்றுன்  பால்வர  மோகம  தாவுற  ......  வணைவோனே 
செம்பொன்  மாமதில்  வானுற  வாவிகள் 
எங்குந்  தாமரை  மாமலர்  சூழ்தரு 
செங்குன்  றாபுரம்  வாழ்கும  ராவெனு  ......  முருகோனே. 
  • அம்பு ஒன்றே விழிசேர் குறமாது தன் இன்பம் தேடி
    கணையைத் தவிர வேறு எதையும் இணையாகக் கூறமுடியாதபடி கூர்மையும் அழகையும் பெற்றுள்ள விழிகளைக் கொண்ட வள்ளிநாயகியின் உறவினை விரும்பி
  • முன் ஓர் கணி ஆகவும்
    அக்காலத்தில் நீர் ஒரு வேங்கை மரமாக நிற்க
  • அன்று உன்பால் வர
    அப்பொழுது அந்த வள்ளி நாச்சியார் உம் பக்கமாக வந்து நெருங்க
  • மோகமதா உற அணைவோனே
    காதலோடு மார்பில் அணைத்துக் கொண்டவரே
  • செம்பொன் மாமதில் வான் உற
    சிறந்த தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட பெரிய கோட்டைச் சுவர்கள் ஆகாயம் வரை உயர்ந்திருப்பதும்
  • வாவிகள் எங்கும் தாமரை மாமலர் சூழ்தரு
    அனைத்து நீர்நிலைகளிலும் அழகிய கமலப்பூக்கள் நிறைந்திருப்பதும் ஆகிய
  • செங்குன்றாபுரம் வாழ் குமரா எனும் முருகோனே
    செங்குன்றாபுரம் என்னும் தலத்தில் வாழ்கின்றவரும் வாலிபன் என்று வழங்கப்படுபவருமாகிய முருகப்பெருமானே
  • வம்பும் கோபமும் மேவு அசுராதிகள் வந்து
    வஞ்சனையும் கொடிய சினமும் மிகுந்த சூரபத்மன் முதலிய அசுரர்கள் எதிர்த்துவந்து
  • அஞ்சாமல் உம் வானவர் பாலினில்
    சற்றும் பயம் இல்லாமல் உங்களைச் சேர்ந்தவர்களாகிய தேவர்களோடு
  • மண்டும் போர்செயும் வேளையில்
    மிக நெருங்கிவந்து செய்யப்படும் யுத்தத்தில் ஈடுபட்டபோது
  • அன்னோரை வெல் வடிவேலா
    அந்த அரக்கர்களை வெற்றிகொண்ட கூர்மையான வேலாயுதத்தை உடையவரே
  • தம்பம்போல் உறு மூடர்கள்மீது
    (எந்த வகையான அறிவுணர்ச்சியும் இல்லாமல்) தூணைப்போல உள்ள அறிவற்ற செல்வர்களைப் பற்றி
  • கரும்பும் தேன் நிகர் பா உரையாது
    கரும்பையும் தேனையும் போன்ற இனிய கவிதைகளை இயற்றிச்சென்று இரந்தலையாவண்ணம்
  • "உன தஞ்சம் பார்" என ஓதுவன்
    அடியேன் உனது அடைக்கலம்; என்னைக் கண்டருளிப் பாதுகாப்பீராக என்று வேண்டுவேன்.
  • நீ அருள்புரிவாய் ஏ
    அதற்கு உளம் இரங்கி நீங்கள் ஆட்கொள்ள வேண்டும்; ஏகாரம் அசை.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com