தானனதான தானனதான தானனதான ...... தனதான
தானனதான தானனதான தானனதான ...... தனதான
வானவராதி யோர்சிறைமேவ மாவலியேசெய் ...... திடுசூரன்
மார்பிருகூற தாய்விடவாரி வாய்விடவேலை ...... விடுதீரா
கானவர்பாவை காதலனான காசணிபார ...... தனமார்பா
காலனைமோது காலகபால *காளகளேசர் ...... தருபாலா
தேனமர்நீப மாலைவிடாத சேவகஞான ...... முதல்வோனே
தீயகுணாதி பாவிநினாது சேவடிகாண ...... அருள்வாயே
**போனகசாலை யாதுலர்வாழ வீதிகடோறும் ...... நனிமேவு
பூவணமான மாநகர்வாழு நாதகுகேச ...... பெருமாளே.
- வானவராதி யோர்சிறைமேவ மாவலியேசெய் ...... திடுசூரன்
மார்பிருகூற தாய்விடவாரி வாய்விடவேலை ...... விடுதீரா
வானவர்கள் அனைவரும் பத்மாசுரனால் சிறையில் அடைக்கப்பட்டனர். மிகவும் வலிமை பொருந்திய இந்த அசுரனின் மார்பினை இரண்டு கூறாக ஆக்கிடுமாறு வேலைவிடுத்த தீரனாகிய முருகப் பெருமானே! - கானவர்பாவை காதலனான காசணிபார ...... தனமார்பா
காலனைமோது காலகபால காளகளேசர் ...... தருபாலா
கானகத்தின் குறமகளான வள்ளியின் காதலுக்கு அடிமையானவனே! எமனை எதிர்த்து காலங்களையெல்லாம் கடந்து ஆலகால விசத்தையுண்ட பரமேசுரனின் மைந்தனே! - தேனமர்நீப மாலைவிடாத சேவகஞான ...... முதல்வோனே
தீயகுணாதி பாவிநினாது சேவடிகாண ...... அருள்வாயே
தேன் உதிரும் நீபமாலையை எப்பொழுதும் அணிந்து சேவக ஞான முதல்வனாய் விளங்குபவனே. தீயகுணங்களைக் கொண்ட பாவியாகிய நான் உனது சேவடிகளைக் காண நீ அருளவேண்டும். - போனகசாலை யாதுலர்வாழ வீதிகடோறும் ...... நனிமேவு
பூவணமான மாநகர்வாழு நாதகுகேச ...... பெருமாளே.
வீதிகள் தோறும் அன்னதானம் நடைபெறும் சிறப்புப் பெற்ற திருப்பூவணமான மாநகரில் வாழும் நாதகுகேசப் பெருமானே, நீ எனக்கு அருளவேண்டும்.